Latest News

December 10, 2015

இன்று அனைத்துலக மனித உரிமைகள் தினம் (10/12/2015)
by admin - 0

உலகலாவிய ரீதியில் இன்றைய தினம் சர்வதேச மனித உரிமைகள் தினம் உணர்வுகளோடு நினைக்கப்படுகின்றது.இலங்கையில் அதுவும் குறிப்பாக வட புலத்தை தவிர எல்லோரிற்கு மனித உரிமைகளது தார்ப்பரியம் தெரிந்ததாக அறியமுடியவில்லை. இருப்பவனிற்கு அதன் அருமை புரியாது என்பது போல இல்லாதவனிற்கே அது கூடியளவில் தாக்கங்களை உணர்வுகளை வலுப்படுத்திவிடுவது இயற்கையே.1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது சபையினால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கு உலகலாவிய ரீதியில் காணப்படும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் சர்வதேச நாடுகளும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க 1950ஆம் ஆண்டு முதல் உலக மனித உரிமைகள் நாள் விரும்பியோ விரும்பாமலோ கொண்டாடப்பட்டு வருகிறது.

என்னதான் இருந்தாலும் இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியில் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்றுவரை இரணடம் தரப் பிரஜைகளுக்கு / இரண்டாம் தரமாகப் பார்க்கப்படும் பிரஜைகளுக்கு இவற்றின் 10வீதம் கூட அனுபவிக்க கிடைத்ததா என்பது கேள்விக்குரியதே. இனவாதத்தால் பிரிக்கப்பட்டு சிங்களம் பேசுபவனுக்கு உயர் உரிமைகள் வழங்கப்பட்டு வருவதோடு தமிழ் பேசுபவன் காலடியில் போட்டு மிதிக்கப்பட்டே வருகின்றான் என்பது கண்கூடு.

ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயோர்க்கில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும்.இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை உலகம் பூராகவும் இடம்பெறுகின்றன.

சில மனித உரிமைகளாக,ஒவ்வெரு மனிதனும் உயிர்வாழ்வதற்கான உரிமை,
சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமை,தான் விரும்பிய பிரதேசத்தில் வசிப்பதற்கான உரிமை ,தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை,
கருத்து சுதந்திரம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் என குறிப்பிடலாம்.இவற்றிலே எவற்றோடு நாம் வாழ்கின்றோம் என்று கேட்டால் பதிலும் தொண்டைக்குழியில் அடைத்து விடுகின்றது. சொன்னால் ஒருவன் அடிப்பான்; சொல்லாவிட்டால் மற்றவன் அடிப்பான்.

மனிதப் படுகொலைகள்,மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மிக மோசமாக மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை.கடந்த காலங்களில் சிலரது புலம்பெயர் விஜயங்களும் அதற்கு அங்குள்ளவர்கள் காட்டிய எதிர்ப்பும் இதற்கு தக்க சான்றுகள் என்பதோடு அந்தச் சட்டங்களின் மீதான மக்களின் நம்பிக்கைகளையும் வலுப்படுத்துகின்றன.ஒரு சமூகத்தில் வாழும் மக்களின் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைகளின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநிறுத்தல் என்பவற்றுக்கு மனித உரிமை என்பது அத்தியாவசியம் மிக்க ஒன்றாக இருக்கின்றது. ஆனால் ஜனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பெரும்பாலும் மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன என்பதை ஊடகங்கள் வழியாக நாம் அன்றாடம் அறிகின்றோம்.

அண்மையில் கூட இலங்கையில் இறுதிக் கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது மக்களை பாதுகாக்க தவறி விட்டதாக ஏற்றுக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கண்ணீரோடு எத்தனயோ பேரிடம் முறையிட்டும் எமக்கான நீதி கிடைத்தாகவில்லை. காலமும் கடவுளும் தான் இதற்கு பதிலளிக்க வேண்டிய கடைப்பாடுடையவர்கள்.சட்டவாக்கத் துறையின் மிக முக்கிய பதவியான பிரதம நீதியரசருக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு சோத்துப் பார்சலும்+கறுப்புப் பணமும், ஆனால் சொந்த உரிமைகள், உணர்வுகளுக்காகப் போராடுபவர்களுக்கு குற்றத் தடுப்பு சிறையும் தடுப்புக்காவலும்.மனிதனை மனிதன் சரிநிகர் சமனாய் மதிக்கவேண்டும் என்ற பாரதி இன்றிருந்தால் மலைத்திருக்கக் கூடும் எங்களைப் பார்த்து.இந்த ஜெகத்தில் ஒருவனுக்கு கூட உணவில்லையெனில் உலகையே அழித்திடுவோம் என்றவர் தான் பாரதி. ஆனால் பேரினவாதிகள், சிங்களவரிற்கு நிலமில்லையேல் தமிழரை அழிப்போம் என்கின்றனர்.எதுவாக இருந்தாலும் நடமுறைக்கால விடயங்கள் பலரை மௌனிகளாக்கியிருக்கின்றது. அதனையும் மீறினால் கடந்த காலம் மீண்டும் உருவாகி வீதியோரங்களில்ம், சந்திகளிலும் இறந்த உடல்கள் கிடக்குமோ என்கின்ற நிலைத்த அச்சம்.

ஆக மொத்ததிலே மனிதர்களுக்கான உரிமைகள் தமிமிழர்களுக்கும் சிறுபான்மையினரிற்கும் இல்லையே.
« PREV
NEXT »

No comments