Latest News

December 19, 2015

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதான இராணுவ அதிகாரி விடுதலை
by admin - 0

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்ட இராணுவ அதிகாரியான அக்குறு கங்கணம்கே இந்திக சஞ்சீவ, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் இன்று வெள்ளிக்கிழமை (18) விடுதலை செய்யப்பட்டார். 


அவருக்கு எதிரான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில், சட்ட ரீதியான பல கேள்விகள் உள்ளன. இதனை நிரூபிக்க தவறியமையால், இந்த குற்ற ஒப்புமூல வாக்குமூலத்தை நிராகரித்து அவரை விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார். யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற போது, கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளைச் சந்தித்து, 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு இராணுவ இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2005ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டப் பிரிவினரால் ஓமந்தை சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டு இரண்டு தினங்களில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கடமையில் இருந்த தன்னை சந்தேகத்தின் பேரில் பிடித்தமை தொடர்பில் அதிருப்பதியடைந்த அந்த இராணுவ அதிகாரி, தனது வேலையை இராஜினாமா செய்து தனியார் நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் மலேசியாவுக்கு பணி நிமித்தம் சென்ற நிலையில், 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி இலங்கை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவைச்சேர்ந்த 3 அதிகாரிகளால் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு மலேசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அங்கிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். இவர் தொடர்பான வழக்கு, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி மேல் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் மாற்றப்பட்டது.தொடர்ந்து, இந்த வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது,  - மலேசியாவுக்கும் இலங்கைக்கு நாடு கடத்தல் தொடர்பான உடன்படிக்கை உள்ளதா? - இந்தக் கைதானது சட்டரீதியான கைதாக இடம்பெற்றுள்ளதா? - கோலாலம்பூர் பொலிஸார் விமான நிலையம் வரை வந்து, சட்டரீதியாக இலங்கை பொலிஸாரிடம் கையளித்துள்ளதா?  - மலேசியாவுக்குள் சென்று இலங்கை பொலிஸார் கைது செய்வதற்குரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?  ஆகிய கேள்விகள் நீதிமன்றத்துக்கு உள்ளதாக நீதிபதி கூறினார். இவரது கைது சட்டரீதியாக அமைந்ததாக அல்லது ஆட்கடத்தளுக்கு உள்ளாளாரா என்பது தொடர்பில் அரச தரப்பு தெளிவுபடுத்தவில்லை. இதன் அடிப்படையில், இவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்து அவரை விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார் 
« PREV
NEXT »

No comments