முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கென வழங்கப்பட்ட 500 இராணுவத்தினரையும் விலக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
மஹிந்தவின் பாதுகாப்பிற்கு 500 இராணுவத்தினரும் 130 பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இதற்கான அனுமதியை பொலிஸ் தலைமையகம் மற்றும் இராணுவ தலைமையகம் ஆகியவை வழங்கியதற்கான எவ்வித ஆவணங்களும் இல்லையென சுட்டிக்காட்டி, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த வார அமைச்சரவையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையை விரிவாக ஆராய்ந்த ஜனாதிபதி மைத்திரி, 500 இராணுவத்தினரையும், 130 பொலிஸாரையும் உடன் மீளப்பெறுமாறு உத்தரவிட்டுள்ளதோடு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ள அதேயளவான பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய பாதுகாப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமையவே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் எவ்வளவு செலவிடுகின்றது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டமைக்கிணங்க, நிதியமைச்சரால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment