Latest News

December 21, 2015

தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியற் கட்சியல்ல – சி.வி.விக்னேஸ்வரன்
by Unknown - 0

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை எனும் பெயரில் புதிய அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

யாழ் பொதுநூலகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலில மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதுடன், இணைத்தலைவர்களாக வைத்திய நிபுணர் லக்ஸ்மன், மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் சமூக ஒன்றியத்தின் செயலாளர் ரி.வசந்தராஜாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பேரவையின் உறுப்பினர்களாக மதத்தலைவர்களும்,தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரநிதிகளும் அங்கம் வகிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தவர்கள் கேட்போர் கூடத்திலிருந்து வெளியேறியபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.

இருக்கின்ற கட்சிகள் சரியான முறையில் செயற்படவில்லை. சில செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக புதிதாக ஒரு அமைப்பினை உருவாக்கியதாகவும், மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றுவதே இந்த அமைப்பின் நோக்கமெனவும் நல்லை ஆதீன முதல்வர் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மேலதிகமான கூட்டுத்தலைமை வைத்தியகலாநிதி லக்ஸ்மன் அவர்களும் அவர்களுடைய தலைமையில் தமிழ் மக்கள் பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. இந்த கட்டமைப்பு அரசியல் கட்சி அப்பாற்பட்டு மதகுருமார் தமிழ் இனத்தோடு ஒத்துழைத்து, விசேடமாக ஒரு இன அழிப்பு கொடூரமாக முகம்கெடுத்திருந்த கட்டத்தில் வந்து இந்த மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றி சமூக பெரியவர்களையும் உள்வாங்கி இந்த அவை உருவாக்கப்பட்டிருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் மக்கள் பேரவை ஸ்தாபிக்கப்பட்டமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை, மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், அரசியல் கட்சிகளும், நல்லை ஆதீனம் போன்ற மதாச்சாரியார்கள் உள்ளடங்களாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு மக்கள் இயக்கம் என முதலமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த இயக்கம் ஒரு அரசியல் கட்சி அல்லவெனவும் அரசியலில் குதிக்கும் எண்ணம் கூட அதற்கு இருக்க மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் ரீதியிலான விடயங்கள் தொடர்பிலும் ஆராய வேண்டியிருப்பதால் தமிழ் மக்கள் பேரவையில் அரசியல்வாதிகள் பங்கேற்பதில் தவறில்லை என வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் அறிக்கை ஒன்றினை தாங்களே கொடுப்பதாக கூறியமையினாலே நான் ஊமை என தெரிவித்ததாகவும் சி.வி. விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments