கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சென்னையை மூழ்கடித்ததற்கு என்ன காரணம், யார் இதற்குப் பொறுப்பு என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றன.
தமிழக அரசின் உயர் மட்டத்தில் ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதமே, இந்த வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என்பது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தமிழக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
இது குறித்து உண்மை நிலையை அறிய, தமிழக பொதுப் பணித்துறையின் செயலர் பழனியப்பனைச் சந்தித்து பதிலைப் பெற முயன்றபோது, அது இயலவில்லை. அவர் ஆய்வுப் பணிகளில் இருப்பதாகவே தகவல் வந்தது.
பெருமளவு தண்ணீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரை, அதன் ஒட்டுமொத்தக் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. டிசம்பர் 1ஆம் தேதியன்று இதன் கொள்ளளவு 3141 மில்லியன் கன அடியை எட்டியது. கடுமையாக மழைபெய்துவந்த நிலையில், இதன் கொள்ளளவு 3396 மில்லியன் கன அடியாக உயர்ந்தது. நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு அதன் 90 சதவீதத்தைத் தாண்டியதால், அப்போதுதான் அணையைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக சில வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆகவே, டிசம்பர் 1ஆம் தேதி காலையில் வினாடிக்கு 1,300 கன அடி திறக்கப்பட்ட நிலையில், இரண்டாம் தேதியன்று இது வினாடிக்கு 29,000 கன அடியாக உயர்ந்தது.
மேலும் சென்னையில் டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இரண்டாம் தேதிவரை 47 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்த நிலையில், அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த மழை நீரும் அடையாறு ஆற்றில் சேர்ந்தது.
இதன் காரணமாக, சைதாப்பேட்டை பாலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வினாடிக்கு 60,000 கன அளவுக்கு தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது.
ஆக்ரமிப்புகள் குறைத்த ஆற்றின் அகலம்
அடையாறு ஆற்றின் அகலம் ஆக்கிரமிப்பின் காரணமாக குறைந்திருப்பது, குப்பைகளால் உயரம் குறைந்தது ஆகியவே இதற்குக் காரணம் என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளரான அ. வீரப்பன்.
சென்னையில் டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுக்கும்படி 28ஆம் தேதி முதலே சம்பந்தப்பட்ட தமிழக அரசுச் செயலர்கள் முதலமைச்சரின் உத்தரவுக்குக் காத்திருந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுவதாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், தமிழக நீர்த்தேக்கங்களைப் பொறுத்தவரை முன்கூட்டியே தேதியே தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்து முடிவெடுக்க முடியாது என்கிறார் அ. வீரப்பன்.
பெரும் மழை பெய்யக்கூடும் என்பதுபோன்ற வானிலை முன்னறிப்புகளை ஒட்டி நீர்த்தேக்கங்கள் குறித்த முடிவை எடுக்க முடியாது என்கிறார் வீரப்பன்.
ஆனால, தற்போதைய தமிழக அரசைப் பொறுத்தவரை நீர்த்தேக்கங்களைத் திறப்பது குறித்து முடிவுகள் அந்தந்த நீர்தேக்கங்களின் செயற்பொறியாளர்களால் எடுக்கப்படுவதற்குப் பதிலாக, உயர்மட்டத்தில்தான் எடுக்கப்படுகின்றன என்கிறார் வீரப்பன்.
ஆளுநருடன் கருணாநிதி சந்திப்பு
2005ஆம் ஆண்டிலும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு செம்பரம்பாக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் அந்தத் தருணத்தில் ஆக்கிரமிப்புகள் குறைவாக இருந்ததால், இவ்வளவு பெரிய சேதம் ஏற்படவில்லை என்கிறார்கள் நிபுணர்கள். தவிர, அந்த காலகட்டத்தில் இவ்வளவு பெரிய மழையும் பெய்யவில்லை என்கிறார்கள் அவர்கள்.
ஆனால், தமிழக அரசைப் பொறுத்தவரை, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கும் விவகாரத்தில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுனரை தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதில் ஏற்பட்ட பாதகங்கள் குறித்து ஆளுனரிடம் புகார் தெரிவித்திருப்பதாக கூறினார்
No comments
Post a Comment