தெமட்டகொடை மேம்பாலத்துக்கு அருகில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்குள் பட்டப்பகலில் அத்துமீறி அங்கிருந்த ஊழியர் ஒருவரை டிபென்டர் வண்டியில் கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்ய முடியுமா முடியாதா என கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆறு பேரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ள நிலையிலேயே அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை, முறைப்பாட்டளரின் வாக்கு மூலம், ஹிருணிக்கா பிரேமசந்திரவின் வாக்கு மூலம் உள்ளிட்ட ஆவணங்கள் இவ்வாறு சட்ட மா அதிபருக்கு அனுப்பட்டு ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸ் குற்ற பதிவுப் பிரிவில் நேற்று காலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தனது 62 - 1859 என்ற இலக்கத்தை உடைய டிபண்டர் வண்டியுடன் சந்தேக நபர்கள் ஆறுபேரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில்(சீ.சீ.டி) பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர் கையளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் இளைஞரது முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாக இந்த கடத்தல் மற்றும் தாக்குதலுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் தொடர்பு உள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் இரு வேறு வாக்குமூலங்கள் ஹிருனிக்கா பிரேமசந்திரவிடம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந் நிலையில் ஊடகங்கள் ஊடாகவும் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. எனினும் ஹிருனிக்கா நேரடியாக கடத்தலுடன் தொடர்புபட்டதாக தெரியவரவில்லை. எவ்வாறாயினும் அவர் ஊடகங்கள் சிலவற்றுக்கு வழங்கிய செவ்விகளில் தான் குடும்ப பிரச்சினை தொடர்பில் ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். ஊடக செய்திகளை நாம் நீதிமன்றில் சாட்சியங்களாக கொள்ள முடியாது. இது தொடர்பில் 1995 ஆம் ஆண்டின் சாட்சிகள் கட்டளைச் சட்டம் தெளிவாக கூறுகின்றது.
இந் நிலையில் தான் நாம் தற்போது வரை செய்துள்ள விசாரணை அறிக்கை, ஹிருனிக்காவின் வாக்கு மூலங்கள், கடத்தப்பட்ட இளைஞரின் வககு மூலம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சட்ட மா அதிபருக்கு அலோசனைப் பெற அனுப்பி வைத்துள்ளோம்.
ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று ஆலோசனை வழங்க முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை. யார் என்ன சொன்னாலும் பொலிஸ் விசாரணைகள் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இடம்பெறும்.
எவ்வாறாயினும் சம்பவம் இடம்பெற்ற குறிப்பிட்ட நேரத்தில் கைதாகியுள்ள சந்தேக நபர்களுடன் ஹிருணிக்கா பிரேம சந்திர தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளாரா, கடத்தல் தொடர்பில் அவர் கட்டளை பிறப்பித்தாரா, அது தொடர்பில் அறிந்திருந்தாரா என நாம் தற்போது அறிவியல் தரவுகளை வைத்து விசாரணைகளை நடத்துகின்றோம். தொலைபேசி இலக்கங்கள் குறித்தான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இன்று (நேற்று) அவை கிடைக்கும் என நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அதன் பின்னர் அதனை மையப்படுத்திய மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என்றார்.
கடந்த திங்களன்று பிற்பகல் 2.30 மணிக்கு தெமட்டகொட மேம்பாலம் அருகே உள்ள ஆடை விற்பனை நிலையத்துக்கு டிபண்டர் வண்டியில் வந்த 6 பேர் அங்கு சேவையாற்றி வந்த இளைஞர் ஒருவரை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளனர். செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த யூ,பிரியங்கர என்ற கொலன்னாவை பகுதியில் தற்கலிகமாக தங்கியிருந்த இளைஞரே இவ்வாறு கடத்தப்பட்டிருந்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து ஆடை விற்பனை நிலைய உரிமையாளர் விடயத்தை உடனடியாக தெமட்டகொட பொலிஸாருக்கு அறிவிக்கவே விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட மற்றும் கொழும்பு வடக்குக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன ஆகியோரின் மேற்பார்வையில் தெமட்டகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுராத மஹிந்தசிறி தலமையிலான குழுவினர் விசாரணையை நடத்துகின்றனர். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் வெதிசிங்கவின் கீழ் பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசாரணைகளை நடத்துகின்றனர்.
No comments
Post a Comment