Latest News

December 10, 2015

கைதிகளுக்குப் பிணைவேண்டாம் உடனடி விடுதலையே அவசியம்
by admin - 0

தமிழ் அரசியல்கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம் கொழும்பு அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்திருந்தது. இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக வழக்குகள், விசாரணைகள் இன்றியும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்களைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்குமாறு கோரி 12 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை சிறைச்சாலைகளில் ஆரம்பித்திருந்தனர்.

போராட்டம் சிறைகளுக்குள்ளேயே நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வடக்கு - கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவான போராட்டங்கள் உறவுகளாலும், ஏனைய அமைப்புகளாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

அரச தரப்பில் ஒரு சில அமைச்சர்கள் தமிழ் அரசியல்கைதிகள் விடயத்தில் தமிழ் அரசியல்கைதிகள் என்று ஒருவருமில்லை என்றவாறு கண்மூடித்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும் பதிலளித்திருந்தாலும் அரசு இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நெருக்கீட்டை இந்தப் போராட்டம் ஏற்படுத்தியது. 

நீதி அமைச்சர் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாகச் சென்று தமிழ் அரசியல்கைதிகளைப் பார்வையிட்டிருந்தனர். ஆறு நாள்வரையில், பல கைதிகளின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தாலும் தங்களது கொள்கையில் உறுதியாகவே இருந்தார்கள். 

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமானது சாதாரண பிரச்சினையல்ல. பத்துவருடம் தொடங்கி 20 வருடங்கள் வரையில்  வார்த்தைகளில் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்போர் அவர்கள். ஜனவரி எட்டாம் திகதிக்குப் பின்னர் நாட்டில் நல்லாட்சி ஏற்பட்ட பின்னர் தங்களது விடுதலை சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன சாதகமான முடிவை எடுப்பார் என நம்பியிருந்தார்கள். விடுதலை சாத்தியமாகாத நிலையிலேயே சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தம்மைச் சந்தித்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல கேள்விகளையும் முன்வைத்திருந்தனர். நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ச தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் மனதையும் நோகடித்திருந்தார். உணவு தவிர்ப்பு இருந்த தமிழ் அரசியல் கைதிகளை கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்களாகவே காட்டிக்கொள்ள முயன்றிருந்தார். என்றாலும் நீதி அமைச்சர், இந்த வருடத்துக்குள் தீர்வு காணப்படுமெனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எழுத்து மூல உத்தரவாதத்தையடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. 20 முதல் 30 தமிழ் அரசியல் கைதிகள் தவிர ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள். இதில் எமக்கு எந்தவிதச் சந்தேகமுமில்லை நாம் ஜனாதிபதியை முழுமையாக நம்புகின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூடத்  தெரிவித்திருந்தார்.

ஆனால், இப்போது மீண்டும் பூதம் வெளிக்கிட ஆரம்பித்துள்ளது. கைதிகளுக்கு விடுதலையோ பொது மன்னிப்போ கிடையாது, அவர்களுக்குப் பிணைதான் வழங்கப்படும் என்று கொழும்பு அரசு கூறுகின்றது. இது இந்தப் பிரச்சினையை மேலும் தணியாது வைப்பதற்குப் போதுமானதாக இருக்கிறது. 

புதிய அரசு பதவியேற்றபோது தமிழ் அரசியல் கைதிகளிடையே தமது நம்பிக்கை தொடர்பில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையைத் தக்க வைப்பதற்கு அரசு தவறிவிட்டது. ஜனவரி எட்டாம் திகதிக்குப் பின்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லெண்ண அடிப்படையில் சுமார் பத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்திருக்கலாம். அப்படி விடுவிக்கப்பட்டிருந்தால் தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டிருப்பர். நல்லாட்சிக்கும் மதிப்புயர்ந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.

இந்த நிலையில் பொதுத்தேர்தல் வந்தபோது, அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் முதன்மையான பேசுபொருளானது. தமிழ்த தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து மேடைக்கு மேடை பேசினார்கள். தேர்தலின்போது கைதிகளை விடுவித்தால் அது நல்லிணக்க அரசின் வெற்றியைப் பாதித்துவிடக்கூடும் என்பதாகச் சொல்லப்பட்டு தேர்தல் முடிவு வரை இந்த விடயம் பின்தள்ளப்பட்டது. ஆனாலும் அதன் பின்னரும் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. பொதுத் தேர்தலும் நடைபெற்று இரண்டு மாதங்களுமாகிவிட்ட நிலையில் தங்களின் விடுதலை சம்பந்தமான விவகாரத்தை அரசு தட்டிக் கழிக்கப் போகின்றது. முன்னைய ஜனாதிபதியான மகிந்த அரசு காலத்தில் தங்களது போராட்டங்களை முறியடித்ததுபோல், எந்தவித நடவடிக்கையையும் எடுக்காது உதாசீனம் செய்ததுபோல் மைத்திரி அரசும் தங்கள் மீது அக்கறை கொள்ளாதிருக்கின்றது என்பதையுணர்ந்த தமிழ் அரசியல் கைதிகள் நல்லாட்சியிலும் நல்லது செய்யமாட்டார்களா? என்ற மனக்கொதிப்போடு விடுதலை அல்லது சாவு என்ற உறுதிமொழியெடுத்துக் கொண்டு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரி எழுத்து மூலம் அறிவித்த பின்னர் அந்த நம்பிக்கையோடு ஆனால், அவர்களுக்குப் பிணைதான் வழங்கப்படும் என்கிற முடிவு அவர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகாது. பிணை கேட்டும் அவர்கள் போராடவில்லை. பிணை வழங்கப்பட்டால் கைதிகள் தொடர்ந்தும் வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு அலைய நேரிடும். அதிலும் பெரும்பாலான அரசியல் கைதிகள் வடக்கு  கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருக்க, அவர்கள் மீதான வழக்குகள் அனேகமாகக் கொழும்பிலேயே நடைபெறுகின்றன. இத்தகைய நிலையில் அவர்களுக்குப் பிணை மட்டும் வழங்குவதென்பது இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும். 

வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தமிழ் அரசியல் கைதிகளை நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே அவர்கள் பாதிக்கால வாழ்க்கையை இழந்துள்ளனர். அவர்களது உறவுகள் வேதனைகளுக்கும், அவலத்துக்கும் உள்ளாகியிருக்கின்றனர். இரு பகுதியினரின் மனநிலையும் பாதிக்கப்பட்டே உள்ளன. தங்களது எஞ்சிய காலத்திலாவது தமது உறவுகளோடு சேர்ந்துவிடவேண்டும், மைத்திரி அரசின் காலத்தில் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், என்று எதிர்பார்த்திருந்த கைதிகளுக்கு பிணை மட்டுமே வழங்கப்படும் என்ற கொழும்பு அரசின் முடிவு பெரும் ஏமாற்றமாகியுள்ளது. ஆனால், விடுதலை இல்லை என்ற ஏக்கப் பெரு மூச்சும், கண்ணீரும், வேதனையும் தொடரத்தான் போகின்றன என்பதைக் கட்டியங்கூறுவதாகவே அரசின் அறிவிப்பு உள்ளது. 

விசாரணைகள் இல்லாமலேயே தடுத்து வைக்கப்பட்டு நீண்டகால சிறைத்தண்டனையை நீதிமன்றத் தீர்ப்பின்றியே அனுபவித்துவிட்டோம். போதுமடாசாமி எங்களை விடுங்கள் அதுவே நல்லாட்சிக்கு எடுத்துக் காட்டு என உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் மூலம் மைத்திரி அரசுக்குச் சொல்லியும்கூட அரசு இவ்வாறு நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இதனை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும்கூடத் தெளிவுபடுத்தியிருக்கிறார். கைதிகளுக்கு விடுதலைதான் தரப்படவேண்டுமே தவிர பிணை அல்ல என்று அவர் கூறியிருக்கிறார். 

உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மீண்டும் தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்படுகின்ற நிலையைத் தடுக்க வேண்டுமாகில் எதிர்க்கட்சித் தலைவர் கூறியது போல் 20, 30 பேரைத் தவிர சுமார் 175 க்கும் மேற்பட்டவர்களை அரசு உடனடியாகப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும். அதுவே இந்தப் பிரச்சினை தீர்வதற்கான ஒரே வழி.

இதற்குக் கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தது மட்டுமன்றி நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனதாக்கிக் கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற பலத்தோடு, இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கின்ற உடன் நடவடிக்கைகளில் பலமாக இருக்க வேண்டும். அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும்
« PREV
NEXT »

No comments