முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷவின் தற்போதைய மாதச் சம்பளம் 4,54,000 (நான்கு இலட்சத்து ஐம்பத்து நான்காயிரம்) ரூபாவைத் தற்போதைய நல்லாட்சியிலும் பெற்றுக்கொள்ளும் அதேவேளை மலையகத்திலுள்ள 5000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு மாதச் சம்பளமாக வெறும் 6000 (ஆறாயிரம்) ரூபா மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.
மலையகத்திலுள்ள 5000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு வெறும் 6000 ரூபாய்ப்படி மாதச் சம்பளத்தை வழங்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எம்.பிக்கு 4,54,000 ரூபா சம்பளம் வழங்கப்படுவதானது நல்லாட்சிக்கான மைத்திரி அரசாங்கத்திற்கு முறைகேடாகவும் மோசடியாகவும் தெரியவில்லையா? என பாதிக்கப்பட்ட மலையக அரச ஊழியர்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.
மலையகத்தில் பல்வேறுபட்ட கஸ்ரங்களின் மத்தியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதாகக் கூறி அவர்களை ஆசிரிய உதவியாளர்கள் என்ற இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணங்களுக்கு முற்றிலும் முரணான புதிய பதவி நிலை ஒன்றை அரசியல் ஆதாயம் கருதி தன்னிச்சையாக உருவாக்கி அவர்களுக்கு மாதச் சம்பளமாக வெறும் 6000 ரூபாவை மட்டும் வழங்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் அரச ஊழியர்களாகவே கணிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளப்பணத்தினை அரசியல்வாதிகள் சுருட்டிக்கொள்வதாகக் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 4,54,000 ரூபா சம்பளமாகவும் ஏனைய கொடுப்பனவாகவும் மாதாந்தம் பெற்று வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் ஒன்பதாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் பாராளுமன்றத்தில் இதனை மகிந்தவின் சம்பளப்பட்டியலையும் காண்பித்து உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நல்லாட்சிக்கான அரசாங்கத்தாலும் மலையகத்திலுள்ள மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள், அவர்களின் உழைப்பு ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டு அரசியல்வாதிகளின் சுகபோகங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றமை இவற்றிலிருந்து வெளிப்படையாகத் தெரிவதுடன் இவ்விடயத்தில் மலையகத்தின் அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தாமல் கண்மூடியிருந்து வருகின்றார்கள் என்பது புலப்படுகின்றது.
இலங்கையில் ஆரச ஊழியர்களுக்கான குறைந்தபட்சச் சம்பளமாக 33,000 (முப்பத்து மூன்றாயிரம்) ரூபாய்க்கு மேல் வழங்கப்பட மலையகத்தில் மட்டும் முழுநேர அரச ஊழியர்களாகக் கடமையாற்றும் 5000 இற்கும் மேற்பட்ட ஆசிரிய உதவியாளர்களாகிய அரச ஊழியர்களுக்கு மட்டும் வெறும் 6000 (ஆறாயிரம்) ரூபாய் மாதாந்தம் சம்பளமாக வழங்கப்பட்டு அவர்களின் உழைப்பை அரசாங்கம் சுரண்டுவது என்ன வகையில் நியாயமாகும்? இதனை மலையக மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள் உட்பட்ட அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
No comments
Post a Comment