Latest News

November 07, 2015

ஆங்கிலேயர்களேயே வியக்க வைத்த ஈழத் தமிழர்கள்.!!
by அகலினியன் - 0

ஆங்கிலேயர்களேயே வியக்க வைத்த ஈழத் தமிழர்கள்.

தமிழன் உலகில் படைத்த சாதனைகள் ஏராளம் அவை நூல்களாகவும், ஒளி வடிவிலும் எம்முன்னோர்கள் ஆவணப்படுத்தினார்கள். ஆனால் தமிழர்களின் பல இடப்பெயர்வுகளால் பெரும்பாண்மை தமிழர்களிடம் ஆவணங்கள் அழிந்து போக. எம்மவர்களின் சாதனைகள் எமக்கே மறந்து போய் வேறு நாட்டவன் அச்சாதனையை செய்யும் போது வாயைப் பிளந்து பார்க்கும் நிலையில் ஈழதமிழன் இருக்கின்றான். பரந்து பட்டு நெஞ்சை நிமிர்த்தி வாழ முற்பட்ட தமிழ் இனம். இன்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்துவிட்டது.

நாங்கள் இருக்கும் இடத்திலேயே தேடுங்கள் எம்முன்னோர் செய்த சாதனை என்ன? ஊருக்கும் இனத்திற்கும் தேடித்தந்த பெயர் என்ன? அவர்கள் ஊர்கள் ஒற்றுமைக்காக எவ்வாறு பாடுபட்டார்கள் என்ற விடை கிடைக்கும். எமக்கு அவர்களின் வழிகாட்டல் நிச்சயம் ஒரு புத்துணர்வை தரும். எம்முன்னோர்கள் என்ன செய்தார்கள் என பார்க்கும்போது நிச்சயம் வியப்பாகத்தான் இருக்கின்றது. 
 
பல தசாப்தங்களுக்கு முன்னும், சில நூற்றாண்டுகளுக்கு முன்னும் எம்மவர் ஆங்கிலேயரையே வியக்கச் செய்த சாதனையை இங்கு பார்ப்போம். ஆம் ஈழத்தமிழன், மூழ்கிய மூன்று கப்பல்களை மீட்டு உலகில் சரித்திரம் படைத்தான்.

முதலாவது கப்பல்

இங்கிலாந்து நாட்டில் கட்டப்பட்ட ஆங்கிலேய வர்த்தக நிலையத்துக்கு சொந்தமான 12000 தொன் நிறையுடைய "பிறிக் அத்லாந்திக் கிங்" (Brig Atlantic King) என்னும் நான்கு பாய்மரங்களைக் கொண்ட ஸ்கெப் (Sketch) ரக கப்பல். இக்கப்பல் 1850 ம் வருடமளவில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலைக்குச் சமீபமாக வந்து கொண்டிருந்த சமயம் எதிர்பாராத விதமாக சரக்குகளுடன் கடலில் மூழ்கிவிட்டது.

கப்பல் உரிமையாளர்களான ஆங்கிலேயரால் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் கப்பலை மீட்க முடியாது போய்விட்டது. வல்வெட்டித்துறை கப்பல் முதளாளிகளில் ஒருவரான "திரு. வெங்கடாசபிள்ளை" அவர்கள் மூழ்கிய நிலையிலேயே கப்பலை ஏலத்தில் எடுத்தார். இங்கிலாந்து கப்பலுக்கு உரிமையாளரான ஆங்கிலேயர் என்ன மூடர் இவர் என நினைத்து விட்டு மூழ்கிய கப்பலுக்கு ஓரளவு பணம் கிடைத்ததே என சந்தோசப்பட்டார். 

ஆனால், சில நாட்களிலேயே இந்தத் தமிழரை நினைத்து அந்த ஆங்கிலேயர் ஆச்சரியப்படப்போகிறார் என்று அப்போது அவருக்குத் தெரியாது. கப்பல் கட்டும் கலையிலும் கடல் கடந்து வணிகம் செய்பவர்களில் வல்லவர்களான வல்வையர்களில் ஒருவரான  "திரு வெங்கடாசபிள்ளை" அவர்கள் மூழ்கிய கப்பலை வெளியில் எடுப்பதற்கான வேளையில் இறங்கினார்.

பர்மாவிலிருந்து கொண்டவரப்பட்ட தேக்கு மரங்கள், சுழியோடிகள், கடலோடிகள் ஆகியோருடைய உதவியுடன் கப்பலை மூட்டெடுப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படன. முதலில் கப்பலில் உள்ள பொருட்கள் மேலே கொண்டு வரப்பட்டன. பின்னர் தேக்கு மரங்கள் கப்பலின் மேற்பக்கமாக மிதக்கக் கூடிய நிலையில் வைத்துக்கொள்ளப்பட்டு கயிறு கப்பி என்பவற்றின் உதவியுடன் மூழ்கிய கப்பல் சிறிது சிறிதாக மேலே கொண்டுவரப்பட்டு கடலின் நீர்மட்டம் வரை உயர்த்தப்பட்டது. நீர்மட்டம் வரை கொண்டுவரப்பட்ட கப்பல் சிறிது சிறிதாக கரைக்கு இழுத்துவரப்பட்டது. கரைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் புதிய உரிமையாளரால் கடல் வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டது.

இரண்டாவது கப்பல்

இன்னொரு நீராவிக்கப்பல் S.S.St.Jhon என்பது இது 1916 ம் ஆண்டு காங்கேசந்துறைக்குச் சமீபமாகக் கடலினுள் மூழ்கிவிட்டது. இக்கப்பலை மீட்டெடுத்தவர் பிரபல கப்பல் கட்டும் மேத்திரியாரும், கப்பல் உரிமையாளரும் வர்த்தகருமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த "வல்வை வடிவேலு மேத்திரியார்" என்பவராகும். இவரும் இக்கப்பலை மீட்டெடுத்ததோடு அதனை விலை கொடுத்து வாங்கி அதன் மூலம் பொருளீட்டிக் கிடைக்கப்பெற்ற வருவாயில் "கீரிமலையில் நகுலகிரி நாராயண சுவாமி கோயிலை கட்டி வரலாற்றில் இடம்பிடித்தார்.

மூன்றாவது கப்பல்.

1965 ம் வருட முற்பகுதியில் இந்தியர்களுக்கு சொந்தமான மீன் பிடி இழுவைப்படகு ஒன்று திருகோணமலைக்கு சமிபமாக கடலுள் மூழ்கிவிட்டது. கப்பலின் உரிமையாளரான இந்தியர்கள் கப்பல் கட்டும் மேத்திரியரான ச.பாலசுப்ரமணியம் என்பவரை அணுகினார்கள். அச்சமயம் ச.பாலசுப்ரமணியம் மேத்திரியாரால் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைச் சேர்ந்த  வ. இரமசாமிப்பிள்ளை'க்கு சொந்தமான திருநிலைநாயகி என்னும் பாய்க்கப்பல் திருகோணமலையில் நங்கூரமிட்டிருந்தது. 

பெரிய பனை மரங்கள் தறிக்கப்பட்டு திருநிலைநாயகி என்னும் பாய்மரக்கப்பலுடன் சேர்த்து இணைக்கப்பட்டது. மூழ்கிய கப்பலுக்கு சமீபமாக கொண்டு செல்லப்பட்ட திருநிலைநாயகி கடல் நீர் மட்டத்திற்கு சிறிது மேலே இருக்கும் வரை அதனுள் நீர் நிரப்பப்பட்டது. ஏற்கனவே இக்கப்பலுடன் சேர்த்து கட்டப்பட்ட பனைக் குற்றிகளுடன் மூழ்கிய கப்பலையும் சேர்த்து கட்டப்பட்டன. அதனையடுத்து திருநிலைநாயகி கப்பலில் நிரப்பப்பட்ட நீர் வெளியேற்றப்பட்டது. நீர் வெளியேற்றப்பட்ட சமயம் அக்கப்பல் மேலே வர மூழ்கிய கப்பலும் சிறிது சிறிதாக நீர் மட்டம் வரை வந்ததும் அதனுள் இருந்த துவாரங்கள் அடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு மிதக்க விடப்பட்டது.

இதில் முதலாவதாக மீட்கப்பட்ட கப்பல் அதன் ஆண்டு(1850) என்பவற்றை வைத்து. "நிராஜ் டேவிற்" அவர்கள். அண்மையில் தன் ஒளி வடிவ  வெளியீடான "வியப்பின் சரித்திர குறியீடு" என்பதில் இக்கப்பல் மீட்பைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். 

அதில் அவர் கப்பல் ஓட்டிய தமிழனை உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் கப்பலை மீட்ட தமிழனை உங்களுக்கு தெரியுமா? அந்தத்தமிழன் வாழ்ந்தது இந்தியாவில் அல்ல இலங்கையில். அவ்வாறு மூழ்கிய கப்பலை மூழ்கிய நிலையிலே விலை கொடுத்து வாங்கினார் ஒரு தமிழர். கப்பல் கட்டும் கலையிலும், மாலுமி  சரித்திரத்திலும் வல்லவரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரான வெங்கடாச்சலம் என்பவரே அந்த மூழ்கிய கப்பலை வாங்கினார். ஆங்கிலேயரால் மீட்க முடியாத கப்பலை கடலில் மிதக்க விட்ட அந்த ஈழத்தமிழரின் சாதனை வியப்பின் சரித்திரக்குறியீடு. என்று குறிப்பிட்டிருந்தார். 

எம்முன்னோர்களான தமிழர்களின் சாதனை உண்மையில் எமக்கு இன்று வியப்பாகத்தான் இருக்கின்றது.

(சில தரவுகள் வல்வை வரலாற்று நூல்களில் இருந்து பெறப்பட்டவை)

« PREV
NEXT »

No comments