அரசியல் கைதிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் விடுதலைக்காக சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும், அரசியல் கைதிகள் அனைவரையும் தமது சொந்த உடன்பிறப்புக்களாகக் கருதி அவர்களது விடுதலைக்கான போராட்டம் வெற்றிகரமாகவும் அமைதியாகவும் நடந்தேறுவதற்கு உதவிய அனைத்து தரப்புக்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நன்றி கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தப் போராட்டத்திற்கு முழு அளவில் மனப்பூர்வமான ஒத்துழைப்பு வழங்கிய இஸ்லாமிய சகோதரர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமையான இச்செயற்பாடானது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் ஒருமித்த நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளனர் என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
No comments
Post a Comment