Latest News

November 10, 2015

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசு அறிவிக்கவில்லை-சட்டமா அதிபர் திணைக்களம்
by Unknown - 0

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரிகள் அரசியல் கைதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரிகள் இருவர் நேற்று மாலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கைதிகளில் 32 பேரை விடுதலை செய்வதாக அண்மையில் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச ஊடக சந்திப்பொன்றில் அறிவித்திருந்தார்.

இதனை சுட்டிக்காட்டிய தமிழ் அரசியல் கைதிகள், தங்களது விடுதலை குறித்து சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரிகளிடம் வினவியுள்ளனர்.
எனினும் அவ்வாறானதொரு அறிவிப்பு இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று பதிலளித்துள்ள அதிகாரிகள், குறித்த விடுதலை தொடர்பான அறிவிப்பை விடுத்தவர்களிடமே வினவ வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த மாதம் 12ஆம் திகதி சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை கைதிகள் ஆரம்பித்திருந்த நிலையில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னதாக நிரந்தர தீர்வளிக்கப்படுமென ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக 17ஆம் திகதியன்று உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்­கட்­சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்குழுவினருக்கும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டமுக்கியஸ்தர்களுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின்போது தீபாவளிப்பண்டிகைக்கு முன்னதாக 32 பேரை பிணையில் விடுதலை செய்வதாகவும் 20ஆம் திகதி முன்னதாக 30பேரை பிணையில் விடுதலை செய்வதாகவும் ஏனையோரின் விடுதலை தொடர்பாக அமைச்சரவை குழு நியமிக்கப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த தீர்மானத்திற்கு அமைவாக முதற்கட்டமாக 32 பேரை விடுதலை செய்வதற்குரிய எவ்விதமான நடவடிக்கைகளும் நேற்றைய தினத்தில் முன்னெடுக்கப்படவில்லையென தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் சந்தப்பத்தில் தமது விடுதலையை வலியுறுத்தும் முகமாக அப்பண்டிகையை புறக்கணிக்குமாறும் உறவினர்கள் ஊடாகஅரசியல கைதிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments