ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் அவன்ட் காட் கப்பல் தொடர்பான விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியை நேற்று திங்கட்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார்.
அவன்ட் காட் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையை அடுத்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் சிவில் சமூகத்தினரும் விமர்சனம் செய்ததுடன் அந்த உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்தே அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்தேன்' என்றும் அவர் கூறினார்.
இந்த அவன்ட் காட் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே, அவர் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்துவிட்டு நுகேகொடையில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர்,
இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன் பின்னரே, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்தேன்' என்றார். இந்த விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான அநுரகுமார திஸாநாயக்க, கடந்த 4ஆம் திகதி சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை கொண்டுவந்திருந்தபோது, அப்போதைய சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரான திலக் மாரப்பன, 'அவன்ட் காட் ஆயுதக் கப்பல் தொடர்பில் பெயர் போட்டுக்கொள்வதற்கே பொலிஸார், சோதனையை மேற்கொண்டனர்' என்று பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் நேற்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அமைச்சர் திலக் மாரப்பனின் இராஜினாமா கடிதம் தனக்குக் கிடைத்ததாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தீர்மானம் எடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தக்கூடாது என்று அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். விஷேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு எதிராகவும் அவன்ட் காட் நிறுவனத்துக்கு எதிராகவும் போதிய ஆதாரங்கள் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அவன்ட் காட் தொடர்பில் தனது பார்வையின் கீழ் வராததன் காரணமாக, இதுகுறித்து தான் விவரமாக ஆராயவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெறவுள்ள சந்திப்பைத் தொடர்ந்து, இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அத்துடன், அமைச்சர் மாரப்பன இராஜினாமா செய்துள்ளதால், இது குறித்து விசாரணை செய்ய அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை, திலக் மாரப்பனவின் வெற்றிடத்துக்கு, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவை நியமிப்பதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. அதுவரையிலும், அவ்வமைச்சின் பொறுப்புகள் யாவும் ஜனாதிபதியின் கீழிருக்கும். இதேவேளை, கொழும்பில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க, அவன்ட் காட் கணக்கு வழக்குடன் தொடர்புடைய சகல அமைச்சர் குழுமமும் பதவிவிலகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவன்ட் காட்டை பாதுகாப்பதற்கு முன்னணியொன்று இன்று உருவாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தாங்கள் கடும் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய நல்லாட்சி வெடித்துச் சிதறிவிட்டது என்றும் அந்த நல்லாட்சி கடந்த காலங்களில் நடந்துகொண்டவிதம் தொடர்பில் திருப்தி கொள்ளமுடியாது என்று குடியுரிமை சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் பேராசிரியர் காமினி வியன்கொட தெரிவித்தார். திலக் மாரப்பன என்ற அமைச்சர் அவன்ட் காட் நிறுவனத்துக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணியாவார். அவருக்காக அந்நிறுவனம் பெருந்தொகையான பணத்தை வாரி வழங்கியிருக்கின்றது. மறுபுறத்தில் அவர், சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராவார். அதனால், தான் ஆஜராகியிருந்த நிறுவனத்துக்காக அமைச்சர் என்றரீதியில் தீர்மானம் எடுப்பதற்கு தார்மீக உரிமையில்லை என்றும் அவர் பதவி விலகவேவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இந்த அவன்ட் காட் விவகாரமும் அதனோடிணைந்த இராஜினாமாவும் நல்லாட்சிக்கு விழுந்த முதலடியாகும் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments
Post a Comment