தம்மை விரைவில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் கைதிகள் ஒன்பதாவது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளில் மேலும் எட்டு பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் எட்டு பேரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை கவனத்திற்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல சந்தேகநபர்களை கடும் பிணை நிபந்தனைகளுடன் விடுவித்துள்ளார்.
இதன் பிரகாரம் எட்டு சந்தேகநபர்களையும் தலா பத்து இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாதாந்தம் இரண்டு தடவைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வதிவு அத்தாட்சிப்பத்திரம், கடவுச் சீட்டு ஆகியன நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதுடன், வதிவிடத்தை மாற்றுவதாயின் அதுகுறித்தும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கே.சுமந்திரன் தெரிவித்ததாவது
இரண்டாவது கட்டமாக விடுவிக்கப்படுகின்ற 30 பேரிலே முதலாவதாக இன்றைக்கு 8 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே அரசாங்கம் எங்களுக்கு தெரிவித்த முறையின் படி தான் இந்த செயற்பாடுகள் இப்போது நடைபெறுகின்றன. சில கால தாமதங்கள் காணப்படுகின்றன. இந்த பிணையிலே விடுவது சம்பந்தமாக தங்களுக்கு திருப்தி இல்லை என்று கைதிகள் மீளவும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருப்பது யாவரும் அறிந்தது. 116 கைதிகளில் பெருபாலானவர்கள் தங்களுக்கு புனர்வாழ்வு கொடுத்து விடுவிக்கும் படியாக அரசாங்கத்தினை கேட்டிருக்கின்றார்கள்.
இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிமை முதல் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை பார்ப்பதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் இன்று புதிய மெகஸின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.
அவர்களை பார்வையிட்டதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்ததாவது :
அவர்களால் தான் இந்த வட,கிழக்கு மாகாண மக்கள் ஒருமித்து கடையடைப்பில் ஈடுபட்டு ஒரு வெற்றியை கண்டிருந்தார்கள். ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் எனக்கு தெரியாது. கூட்டங்கள் நடக்கின்றன. அந்த அடிப்படையில் அந்த தீர்மானங்களை நாங்கள் அறிந்ததன் பிற்பாடு மற்றைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அத்துடன் எல்லா கைதிகளும் நல்ல நிலையில் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம் சுவாமிநாதனும் இன்று புதிய மெகஸின் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளில் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
அத்துடன் அனுராபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் நிலமையை ஆராய்வதற்காக சிறுவர் விவகார இராங்க அமைச்சர் விஜேகலா மகேஷ்வரன் அங்கு சென்றிருந்தார்.
இதேவேளை தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று தமிழ் விடுதலைக் கூட்டணியால் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
மேலும் இவர்களது விடுதலையை வலியுறுத்தி நாடு பூராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment