Latest News

November 14, 2015

வடக்கு முதலமைச்சரை பதவி விலக்க நினைப்பது யாருக்காக?
by admin - 0


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு வானொலி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்கவேண்டுமென கட்சியிடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்திருக்கும் கருத்தே இப்போது காட்டுத் தீயாக மாறியிருக்கின்றது.

சுமந்திரன் அவ்வாறு கூறியிருப்பதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் இருப்பதாக வெளியாகும் செய்திகள் தெரிவித்தன. அதாவது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வேளையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேரடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும், அதன் பின்னர் அவரை கனடாவுக்குச் சென்று கட்சிக்கு நிதி சேகரிக்குமாறு கேட்டுக் கொண்டபோது அதையும் அவர் செய்ய மறுத்தார் என்றும் கூறப்படுகின்றது.

தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் கூட்டமைப்பிலுள்ள சிலரின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி அடைந்திருந்த நிலையில் அவர் மக்களுக்கு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார்.

அவர் விடுத்திருந்த அறிக்கையில், மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தான் கூறப்போவதில்லை என்று குறிப்பிட்டதோடு, யார் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு செவிசாய்க்கக்கூடியவர்களோ, யார் தேர்தலுக்குப் பிறகும் தமிழ் மக்களோடு வாழ்ந்து உதவக் கூடியவர்களோ அவர்களை தெரிவு செய்து வாக்களியுங்கள். யாருக்கு வாக்களிப்பதென்பது உங்கள் தீர்மானமாக இருக்கட்டும் நான் நடு நிலையாக இருக்கப் போகின்றேன் என்று கூறியிருந்தார்.

அதேபோல் கனடாவுக்குச் சென்று கட்சிக்கு நிதி சேகரித்து வாருங்கள் என்று கட்சி அவரைக் கேட்டபோது அதற்கு பதிலளித்த முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி செய்வதற்கு என்று கூறி தனிப்பட்டவகையில் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றிருக்கின்றார்கள். அதற்கான கணக்குகள் எங்கே என்றும், தேர்தலுக்கு முன்னர் கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக பணம் திரட்டுவதாகக் கூறி கனடாவுக்குச் சென்று பெருந்தொகை பணத்தை திரட்டினார்கள். அந்த பணத்தின் கணக்குகள் எங்கே இருக்கின்றது. இவை எல்லாம் தெரியாதபோது நான் எவ்வாறு கனடாவுக்குச் சென்று பணம் திரட்ட முடியும் என்று கூறியிருந்தார்.

முதலமைச்சரின் இந்தக் கேள்விகளுக்கு பதிலை வழங்கவோ, தேர்தலில் முதலமைச்சர் ஏன் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார் என்று விசாரிக்கவோ சுமூகமான பேச்சுவார்த்தைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் முயற்சிக்கவில்லை.

ஆனால் ஆட்சி மாற்றங்களைத் தொடர்ந்து அனைத்து மாகாண சபைகளின் நிர்வாகங்களையும் கலைத்துவிட்டு தேர்தலை நடத்தப்போவதாக அரசு சிந்திப்பதாக செய்திகள் வெளியானபோது அந்த திட்டத்தைப் பயன்படுத்தி முதலமைச்சரை ஓரங்கட்டிவிடலாம் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமை திட்டமிடுவதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தது.

இதேவேளை, கூட்டமைப்பின் தலைமை பிரதமரோடும், புதிய அரசாங்கத்தோடும் நெருக்கமாகவும், பங்காளியாகவும் செயற்பட்டுவருகின்ற நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருவதோடு, ஜனாதிபதியோடு மட்டும் நெருக்கமாக இருப்பதாக வெளிப்படுத்தி வந்துள்ளார். முதலமைச்சரின் இந்த அரசியல் நிலைப்பாடானது, அரசுடன் உறவுகளைக் கொண்டுள்ள கூட்டமைப்பின் தலைமைக்கு தர்ம சங்கடங்களையே ஏற்படுத்தியிருக்கும்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவானபோதும் அவரை மரியாதைக்காகக் கூட முதலமைச்சர் சந்திக்கவில்லை. அதைத் தொடர்ந்து அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த சம்பந்தன் வடக்கு முதலமைச்சரை சந்திக்கவில்லை.

இந்த நிகழ்வுகள் முதலமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குமிடையே விரிசல்கள் இருப்பதை வெளிக்காட்டியது.  இந்த முரண்பாடானது இப்போது பகிரங்கமாகிவிட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மொத்த முடிவையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரே எடுப்பதாக கட்சிக்குள்ளேயே அதிருப்திகள் எழுந்துள்ளன.

அதற்கமைந்தால் போல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்ட தீர்மானத்திலும், அமெரிக்காவின் பிரேரணையிலும் தமிழ் மக்கள் சார்பில் முழுமையான சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதான நிலைப்பாட்டை வற்புறுத்தாத சுமந்திரன் மீது ஏனைய கூட்டமைப்பு பிரதிநிதிகளும், தமிழ் அமைப்புக்களும் விமர்சனங்களை முன் வைத்திருந்தன.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு நடந்ததாக கூறுவதற்கு சட்ட ஆதாரங்கள் இல்லை என்று கூறியதும், வடக்கிலிருந்து முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையாகும் என்றும், அதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் தலை குனிய வேண்டும் என்று கூறியதும் தமிழ் மக்களை ஆத்திரமூட்டுவதாக அமைந்திருப்பதாக சக கூட்டமைப்பு பிரதிநிதிகளே கூறினார்கள்.

இறுதியாக சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு விடயத்தில் தலையிட்டிருந்த சுமந்திரன் அவர்களுக்கு பொது மன்னிப்பை பெற்றுக் கொடுக்காமல், சட்ட அணுகுமுறைகள், பிணை போன்ற சொற்பிரயோகங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் இருந்தன.

இந்த நிலையிலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாக சுமந்திரன் அவர்களே கூறியிருப்பது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

முதலமைச்சருடன் கூட்டமைப்பின் அனைத்துக் கட்சித் தலைமைகளும் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும். முதலமைச்சருடன் பேசி முரண்பாட்டை தீர்க்க முடியாமலும், கட்சிக்குள் பேசி கருத்தொற்றுமையை ஏற்படுத்த முடியாமலும் இருக்கும் இவர்கள்தானா தமிழ் மக்களின் பிரச்சனையை இன்னொரு இனத்திடம் பேசி பெற்றுத் தரப்போகின்றார்கள் என்று ஒரு கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழலாம்.

அப்படி ஒரு கேள்வி விருப்பத்துக்குரியதாக இல்லாதபோதும் அந்தக் கேள்வியில் உள்ளடங்கியிருக்கும் நியாயத்தையும், தமிழ்த் தலைமைகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருப்பதும், அதுவே தமிழ் மக்களின் பலமாகும் என்பதையும் மறுக்க முடியாதல்லவா?

- ஈழத்துக் கதிரவன் -

« PREV
NEXT »

No comments