அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பகிஷ்கரிப்பிற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கின்ற இலங்கை ஆசியர் சங்கம் அன்றையதினம் ஆசிரியர்கள் பாடசாலை விடுமுறையை அறிவித்தும் மாணவர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் வண்ணமும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் அறிக்கையொன்றும் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தமது விடுதலையை வலியுறுத்தி சிறையில் பட்டினிப்போரை ஆரம்பித்திருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆதரவாக எதிர்வரும் (13.11.2015) வெள்ளிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட இருக்கும் பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது பூரண ஆதரவைத் தெரிவிக்கின்றது.
இந்த அரசியல்கைதிகள் ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பட்டினிப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவது எமது தார்மீகக் கடமையாகும்.
இந்தவகையில் அரசியல் கைதிகளின் உயிருக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலையை எவரும் வெறும் அரசியலோடு நோக்காமல் கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் தார்மீக ஆதரவு வழங்கவேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றோம்.
ஏனவே இந்த விடயத்தில் கல்விச்சமூகம் பொறுப்புடன் செயற்பட்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையி;ல் செயற்பட அழைப்பு விடுக்கின்றோம். எனவே பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள் (13.11.2015) வெள்ளிக்கிழமை விடுமுறையை அறிவித்தும், மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகமளிக்காமல் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் வண்ணமும் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் அன்றைய தினம் எவ்விதமான வன்முறைக்கும் இடம் கொடாமல் மக்கள் அவதானமாக செயற்படும் வண்ணமும் கேட்டுக்கொள்கின்றோம். பொறுப்பு மிக்க தமிழ் சமூகமாக செயற்பட்டு மனிதாபிமானத்தை நிலைநாட்டுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்டக்கிளையின் செயலாளர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment