Latest News

November 12, 2015

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தீர்வு கிடைக்காமை கவலையளிக்கிறது – சி.வி விக்னேஷ்வரன்
by Unknown - 0

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தீர்வு கிடைக்காமை கவலையளிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த, தமிழ் மக்களை ஆதரவு வழங்குமாறு கோரி அவர்களின் வாக்குப் பலத்துடன் ஆட்சியமைத்த புதிய அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்த்து இருந்ததாக சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், புதிய அரசாங்கமும் இதய சுத்தியுடன் நடந்துகொள்வதாகத் தெரியவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது விடுதலையை வலியுறுத்தி சிறைக்கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்களின் விடுதலைக்கு வாக்குறுதி வழங்கிய அரசாங்கம் அதனை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கைதிகளுக்கு பகுதி பகுதியாக பிணை வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் ஒற்றுமையாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயல்வது போன்று கருத முடிவதாகவும் கூறியுள்ளார்.

எனவே, மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பொது அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்வரும் 13 ஆம் திகதி வட மாகாணம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதற்கு வட மாகாண சபை ஆதரவைத் தெரிவிக்கும் எனவும் சி.வி விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை உடனடியாக நிறைவேற்றுமாறு கோரி இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்லும் வகையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

« PREV
NEXT »

No comments