Latest News

November 21, 2015

மன்னாரில் முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் மரணம்
by admin - 0

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மூன்றாம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று  காலை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவருடைய வீட்டு முற்றத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியான வீரசிங்கம் தனபாலசிங்கம்(வயது-40) மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வந்துள்ளது.

குறித்த குடும்பஸ்தர் கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று காலை கடற்தொழிலுக்குச் செல்லுவதற்காக வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் காலை 4 மணியளவில் வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டு முற்றத்தில் காணப்பட்ட மரத்தில் துண்டினால் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலினால் கழுத்தில் இருக்கிச்சுற்றப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார்.

உடனடியாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டதோடு சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

பின் சடலம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தவிற்கமைவாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட நிலையில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நபர் முன்னாள் போராளியாக இருந்த நிலையில் பல வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த நபர் இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மூன்றம் பிட்டி கிராமத்தில் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதேவேளை நேற்று(20) வெள்ளிக்கிழமை மாலை குறித்த மூன்றாம் பிட்டி கிராமத்தில் ஒரு இளைஞனை அக்கிராமத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கண் மூடித்தனமாக தாக்திய நிலையில் குறித்த இளைஞன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது குறித்த தாக்குதல் சம்பவத்தை சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளியான வீரசிங்கம் தனபாலசிங்கம் நேரில் கண்டுள்ளதாகவும் உறவினர்கள் பொலிஸரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விசாரனைகளை மேற்கொண்ட இலுப்பைக்கடவை பொலிஸார் குறித்த இளைஞனை தாக்கிய மூன்றாம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களையும் இன்று கைது செய்துள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த முன்னாள் போராளியான வீரசிங்கம் தனபாலசிங்கம் தொடர்பில் அவருடைய மனைவியிடம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டுள்ளாரா? என விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments