Latest News

October 24, 2015

தமிழினி எனும் வீரமங்கையின் மரணம்! அது ஒரு தாளாத துயரம்!!
by admin - 0

வாழும்போது மனிதர்களை கொண்டாட நாம் மறந்து விடுகின்றோம். அப்படி ஒரு பழக்கமும் நமக்கு இல்லை. ஒரு மனிதனின் மரணத்துக்குப் பிறகு ஒப்பாரி செய்வதும், ஒப்புக்கு கண்ணைக் கசக்குவதும் ஒரு சம்பிரதாயமாகிவிட்டது.

நாகரீகம் வளர்ந்துவிட்ட இக்கால கட்டத்தில் மரணித்தவரின் சடலத்தை பிரசார மூலதனமாக பாவித்து சிலர் நடத்தும் அலப்பறைகளை சிலவேளைகளில் ஜீரணித்துக் கொள்ளவே முடிவதில்லை.

இறந்து போனவர், அப்படிப் பட்டவர், அசகாய சூரன் அவர் ஒரு புரட்சிவாதி, அவர் இறுதி மூச்சுவரை தமிழ் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார், என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் பொழிந்து தள்ளுவார்கள். இன்னும் சிலரோ இறந்தவர் தன்னுடன் பல விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்ததாகவும், பெருமிதம் பேசுவார்கள்.

அண்மையில் மரணித்த போராளி டேவிட் ஐயாவின் மரணம் ஏற்படுத்திய சோகத்தையும் சிலபேர் உணர்வுபூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு டேவிட் ஐயா பல நாட்கள் மிகுந்த வறுமையோடு தனது இறுதிக் காலங்களை ஈழ மண்ணிலையே கழித்துவந்தார் என்பதே தெரிந்திருக்கவில்லை.

இப்போது விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த வீர வேங்கை தமிழினியின் மரணம் தமிழ்த் தேசிய உணர்வாளர்களை உறைந்துபோகச் செய்துள்ளது.
சிவசுப்பிரமணியம் சிவகாமி எனும் இயற்பெயரைக் கொண்டிருந்த அந்த வீர மங்கை தமிழினியாக தன்னை போராட்டத்தின் வரலாற்றில் பொறித்திருக்கின்றாள்.

தமிழ் மக்களின் விடுதலைக்கான நீண்ட போராட்டத்தில் ஆண்களுக்குச் சமமாக பெண்களும் போர்க்களம் புகுந்து நடத்திய வீரம் நிறைந்த போரில் தமிழினி ஆயிரத்தில் ஒருவராக தன்னை முடக்கிப் போடவில்லை.
சிவகாமியாக, சிறந்த மாணவியாக பாடப்புத்தகங்கள் ஏந்தி நின்றபோது, ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்த எதிரிக்கு எதிராக போராடுவதே ஒரே வழிமுறை என்று உறுதி எடுத்த வீரமங்கை இவள்.

சீருடை அணிந்து, வேட்டுக்களோடு விடியும் காட்டுக்குள் வேங்கையாய் இருந்தபோதும், தமிழன் விளைந்த மண்ணின் வரலாற்றையும், அதன் விடுதலைக்காக தமிழன் தலைமையேற்று நடத்தும் விடுதலைப் போரையும் அரசியல் தெளிவோடு அறிந்திருப்பதும் அவசியம் என்பதை அறிந்தவள் தமிழினி.

அரசியல் துறைப் பொறுப்பாளராக தமிழினி போதித்த போதனைகள் கேட்டு வன்னி நிலத்தில் வாழ்ந்த போராளிகள் மட்டுமல்ல, வன்னிக்காடுகளில் வளர்ந்த கொடிகளும், மரங்களும்கூட ஒரு கொள்கைத் தெளிவு பெற்றிருக்கும்.

முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதாக முழு உலகமும் ஒரு முடிவுக்கு வந்தபோதும், புனர்வாழ்வு நரகத்துக்குள் இன்னும் நாங்கள் இருக்கின்றோம் என்று மூச்சுக் காற்றில் முணகல் செய்தி அனுப்பிய தமிழினி இன்று உயிரோடு இல்லை.

புனர்வாழ்வு முகாமில் தமிழினி இருக்கின்றார் என்று செய்திகள் வெளிவந்தபோது, இன்று தமிழினிக்காக அழுகின்ற யாரும் அங்கு சென்று பார்க்கவில்லை. ஒரு சம்பிரதாயத்துக்குக் கூட ஆறுதல் கூறவில்லை.

தமிழினியின் விரைவான விடுதலைக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. சிவகாமி தமிழினியாகி பின்னர் மீண்டும் சிவகாமியாகி ஊருக்குள் உலாவித் திரிந்தபோதும், வெளியில் சொல்லாத வேதனையோடு வெறும் உயிரும் உடம்புமாக இருந்த போது யாரும் தமிழினியை திரும்பியும் பார்க்கவில்லை.
இன்று தமிழினிக்காக கண்ணீர் விடுகின்றவர்களும், ஒப்பாரி வைப்பவர்களும் தமிழினியை நேரில் சந்தித்திருந்தால், தமிழினியை அழுத்திக் கொண்டிருந்த வேதனைச் சுமைகளை பகிர்ந்து கொண்டிருந்தால், ஒருவேளை தமிழினி இன்னும் சிறிது காலங்கள் நம்மோடு வாழ்ந்திருப்பாள்.

தமிழினிக்காக வீரம்பேசி, அறிக்கைவிட்டு அஞ்சலி செலுத்துவதைவிடவும், தமிழினியைப் போல் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பல நுறு தமிழினிகளின் மானம் காக்கவும், அவர்கள் அச்சமின்றி வாழவும் ஒரு வழிவகை செய்வதே வீர வேங்கையான தமிழினிக்குச் செய்யும் உண்மையான வீர அஞ்சலியாகும்.

அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்துவார்கள் என்றோ, விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் – தியாகத்தையும் விற்றுப் பிழைப்போர் கண்களை கசக்கி நின்றபடி மரியாதை செய்வார்கள் என்றோ தமிழினி ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
தான் நேசித்த தலைமையைப் பற்றியும், தன்னோடு போராட்டக்களத்தில் நின்றிருந்த போராளிகளைப் பற்றியும் ஒரு தேசிய நேசிப்போடு சிந்திக்கவே திராணியற்ற பலரை சந்திக்கவே சம்மதிக்காமல் வாழ்ந்த வீர வேங்கை தமிழினி.


தமிழினிக்கு உண்மையாக மரியாதை செலுத்த வேண்டுமாக இருந்தால், அறிக்கை வாசிக்காதீர்கள்….. கண்களைக் கசக்காதீர்கள்……. தமிழினியே அறிந்திராத வரலாறு பேசாதீர்கள்…..மாறாக….. தமிழினியைப்போல் போர்க்களம் கண்டு, புனர்வாழ்வு நரகம் அனுபவித்து….சமூகத்தின் வெளிக்காட்டாத புறக்கணிப்புக்களுக்கு தலை நிமிராமலே முகம் கொடுத்தபடி இதயக் கூட்டுக்குள்ளே ஒரு அணுகுண்டை சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழினியின் சகோதரிகளுக்கு உதவுங்கள்.


அவர்களையும் ஏற்றுக் கொள்ளும் புதிய சமூக மாற்றமொன்றை உருவாக்குங்கள்…. அதுதான் தமிழினிக்கு தகுதியான மரியாதையாக அமையும்.
- ஈழத்துக் கதிரவன் -

« PREV
NEXT »

No comments