Latest News

October 23, 2015

பரணகம அறிக்கையின் உண்மையும் ரணிலின் அரசியல் தந்திரமும்
by admin - 0

பரணகம அறிக்கையை (Presidential Commission on Missing Persons) அதன் சூழமைவோடு சேர்த்து வாசிக்க வேண்டும். இராணுவம் குற்றம் இழைத்திருக்கின்றது, கலப்பு பொறிமுறையை ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது  என்பதை முக்கியத்துவப்படுத்தி தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு மகிழ்ந்துள்ளன. தெற்கு ஊடகங்கள் பரணகம அறிக்கை ஐ. நா நிபுணர் (தருஸ்மான்) அறிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. 40,000 சாவுகள் நடக்கவில்லை, விடுதலைப் புலிகளே இராணுவத்தின் குற்றங்களுக்கு அடிப்படையில் பொறுப்பு என்று செய்தி வெளியிட்டிருக்கின்றன. கொழும்பு அரசாங்கத்திற்கு சேவகம் செய்யும் வகையில் ஒரு சிக்கலான அரசியல் தேவையை பரணகம அறிக்கை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றது என்பதே உண்மை. 

"ராஜபக்சாவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவே கலப்பு பொறிமுறையை பரிந்துரைக்கின்றது ஆகவே நாங்கள் ஜெனீவாவில் சர்வதேச நீதிபதிகளும் உள்ளடக்கப்படும் முறைமையை வலியுறுத்தும் பிரேரணையில் இணைந்து கொண்டமையில் தவறில்லை" என்பதை ரணில் அரசாங்கம் சொல்வதற்கு வாய்ப்பளிப்பதற்கே இந்த பரணகம அறிக்கை. பரணகம ஆணைக்குழுவின் வண்டவாளம் நாம் அனைவரும் அறிந்ததே. அவர் இப்படி ஒரு பரிந்துரையை செய்திருப்பார் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை என்பது ரணிலின் சாணக்கியம் புரியாதவர்களின் கூற்று. அறிக்கை ரணிலின் ராஜதந்திர நகர்வுக்கு ஏற்றவாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது என்பது எனது ஊகம். உள்ளக செயன்முறைகள் முற்று முழுதாக செயல் இழக்கவில்லை என்பதை காட்டுவதற்காக நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) அறிக்கை மகிந்தவால் பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது ரணிலுக்கு பரணகம ஆணைக்குழு அறிக்கை கிடைத்திருக்கிறது. அது ராஜபக்ச நியமித்தது என்பது கூடுதல் வசதி. (பரணகம ஆணிக்குழுவை கலைக்கவேண்டும் என்று ஐ. நா மனித உரிமை ஆணையாளர் 30 செப்டம்பர் 2015 மனித உரிமை பேரவையில் அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுருந்தமை ஞாபகம் இருக்கலாம்.)  
.
பரணகம அறிக்கை சனல் 4 காணொலியில்  சொல்வதில் உண்மை இருக்கலாம், இராணுவம் யுத்த குற்றம் செய்த்திருக்கின்றது என்று சொல்கின்ற அதே வேளை இவை தற்செயலான குற்றங்கள் (isolated incodents/ crimes) என்ற தோற்றப்பாட்டை அறிக்கை உருவாக்க  முயற்சிக்கின்றது என்பதைக் கவனிக்க வேண்டும். ஜெனீவா மனித உரிமை ஆணையாளரது அறிக்கை நிகழ்ந்த குற்றங்கள் முறைசார் குற்றங்கள் (systemic crimes) வகைக்குரியவை என்று கூறுகின்றன. அத்தோடு பெரும்பாலான குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளே காரணம், இராணுவம் மக்கள் மீது வான் தாக்குதல் நடத்தியமைக்கும் அவர்களே பொறுப்பு என அறிக்கை கூறுவதும் அறிக்கையின் அரசியலை தெளிவாக விளம்பரப்படுத்துகின்றது.

நன்றி குருபரன்
« PREV
NEXT »

No comments