’ஆச்சி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட, நடிகை மனோரமா( வயது 78) இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் காலமானார். மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்சினிமாவின் தன்னிகரற்ற நடிகை மனோரமா, 1,500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் விழாவில் பங்கேற்கும் அளவிற்கு உடல் நலம் பெற்றிருந்தார். மீண்டும் சினிமாக்களில் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித் தார். இந்நிலையில் அவர் மறைந்தது கலைத்துறையினரையும், ரசிகர்களையும் வருத்தப் பட வைத்திருக்கிறது.
மனோரமா! இவரது இயற்பெயர் கோபிசாந்தா. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 26.5.1943 ல் பிறந்தார். இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமாவின் குடும்பத்தினர், அவர் சிறு வயதாக இருக்கும்போதே காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர். நாடகங்களில் நடித்து அதன் மூலமாக திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பின்னர் சென்னையில் வசித்து வந்தார்.
ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் மனோரமா. 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் மனோரமா. 2002ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது பெற்றார். 1988ம் ஆண்டு, புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை என்று தேசிய திரைப்பட விருது பெற்றார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, பிலிம்பேரின் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
No comments
Post a Comment