இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆயினும் அந்த உதவிகள் இலங்கை அரசாங்கத்தின் வழியாகவே செய்ய முடியும் என்றும் தாங்கள் நேரடியாக வடமாகாணசபைக்கு உதவி செய்ய முடியாதென்றும் யாழ்ப்பாணம் வந்திருக்கும் அமெரிக்க குழுவினர் தெரிவித்ததாக யாழ் ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மூன்றுநாள் பயணமாக இலங்கை வந்துள்ள உலகப் பெண்கள் விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் கத்தரின் ரஸ்ஸல் அம்மையாரும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப்பும் வேறு சில அமெரிக்கத்தூதரக அதிகாரிகளும் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்தனர்.
அங்கே அவர்கள் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் யாழ் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அப்போது இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டப் பிரதேச மக்கள், குறிப்பாக பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று விக்னேஸ்வரன் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் மற்ற மாகாணங்களைப்போல போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடமாகாணத்தை நோக்காமல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகக் கவனத்திற்கொண்டு, அதற்கேற்ற வகையில் அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த மாகாணாத்தில் உள்ள 80 ஆயிரம் விதவைப் பெண்களின் வாழ்வாதாரத்திற்காக குழு மட்டத்திலான வேலைத்திட்டங்கள், சிறுகடன் திட்டம் போன்றவற்றை செயற்படுத்துவதற்கு அமெரிக்கா உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் தனது திட்டங்களை வடபகுதி மீது திணிக்காமல், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே நடைபெற்றவற்றின் உண்மை நிலையைக் கண்டறிந்து, அதனை சிங்கள மக்களையும் உணரச் செய்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேத்தரின் ரஸ்ஸல் அம்மையாரிடம் தெரிவித்துள்ளார்.
குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது உள்ளிட்ட பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நல்லிணக்கத்திற்கான முயற்சியாக வடக்கில் உள்ள பெண்கள் பிரதிநிதிகளையும், தெற்கில் உள்ள பெண்கள் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து கருத்தாடல்களை மேற்கொண்டு கருத்துருவாக்கம் செய்யலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இந்தச் சந்திப்பின்போது, முன்வைத்த ஆலோசனையைக் கவனத்திற்கொள்வதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆயருடனான சந்திப்பின்போது, விதவைப் பெண்கள் விஷயத்தில் பணியாற்றும் அருட் சகோதரிகள் அந்தப் பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்க குழுவினரிடம் வலியுறுத்தினார்கள்.
இடம்பெயர்ந்து இன்னும் சொந்த வாழ்விடங்களுக்குச் செல்ல முடியாதுள்ளவர்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வது, விதவைகளுக்கு அரசிடமிருந்து உரிய முறையில் உதவி கிடைக்காத நிலைமை, யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் பாவனையைக் குறைப்பதற்கு இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முடியாவிட்டால், புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட விஷயங்களை யாழ் ஆயர் அமெரிக்க குழுவினருக்க தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment