Latest News

September 17, 2015

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையும், மக்களுக்காக யாழ்ப்பாணத்தை கைவிட்ட புலிகளும்.!!
by அகலினியன் - 0

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையும், மக்களுக்காக யாழ்ப்பாணத்தை கைவிட்ட புலிகளும்.!!


1990ம் ஆண்டு சிங்களத்தின் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தை முறிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. அன்றைய நேரத்தில் தனது இராணுவ இயந்திரத்தை வலுப்படுத்தி இருந்த சிங்கள அரசு மிகப் பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையை பலாலியிலிருந்து ஆரம்பித்திருந்தது.

அதுவரைக்கும் குறைந்த எண்ணிக்கையிலான போராளிகளை கொண்டு கெரிலா பாணியிலான தாக்குதலைத் தொடுத்து பழக்கப்பட்டிருந்த புலிகளமைப்பு, முதல் முதலாக மரபுவழி இராணுவமாக வளர்ச்சி பெற்றிருந்த போராளிகளை கொண்டு எதிர் தாக்குதலை மேற்கொண்டனர். அது ஒரு பட்டறிவுக் காலம் என்று தான் கூற வேண்டும்.

போராளிகள் மத்தியில் போர் ஓர்மம் ஓங்கி இருந்த போதும் மரபு வழி சண்டைகளின் பட்டறிவு இன்மையாலும், போதிய ஆயுத கையிருப்பு இன்மையாலும் (அந்த நேரத்தில் பலமுனைத் தாக்குதல் காரணமாக AK47 ரவைக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது) சில இடங்களை கைவிட வேண்டிய நிலை வந்திருந்தது. அந்த நேரத்தில் மாவிட்டபுரம் வரை எதிரி முன்னேறி இருந்தான்.

அதன் பின் மரபுவழிப் போரில் ஏற்பட்ட அனுபவங்களின் மூலம் எதிரியை முன்னேறவிடாது தடுக்கப்பட்டிருந்தது. சமகாலத்தில் புதிய போராளிகளின் எண்ணிக்கையும் கூடி, புலிகள் அமைப்பு பெரும் வளர்ச்சி பெற்று இருந்தது. மறுவளத்தால் பால்ராஜ் அவர்களின் தலைமையில் பல முகாங்கள் அழிக்கப்பட்டன.

அவரது மரபுவழி அனுபவத்தை கொண்டு அவரது தலைமையில் புலிகளமைப்பு மிகப்பெரும் இராணுவத்தை கட்டியமைக்கும் நோக்கில் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி தலைவரால் உருவாக்கப்பட்டது. அந்த படையணியானது சிங்கள இராணுவத்தை தொடர் தாக்குதல் மூலம் திணரடித்தது. அதனைத் தொடர்ந்தே பல படையணிகள் உருவாக்கப்பட்டது.

இந்தக் கால கட்டத்தில்தான் 1994ம் ஆண்டு புலிகளின் இராணுவ உளவுத்துறையில் இருந்த ஒப்பிலாமணி என்பவர் தனி ஒழுக்க தண்டனைக்கு பயந்து தப்பி ஓடி இராணுவத்திடம் சரணடைந்தார். ("தமிழரின் இராணுவ வளர்ச்சியும், தலைவர் சந்தித்த துரோகங்களும்" என்னும் எனது முன்னைய பதிவில் ஒப்பிலாமணி பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்)

அவனது சரணடைவைத் தொடர்ந்து புலிகளமைப்பின் அன்றைய நேரத்தின் பலம், பலவீனம், ஆயுத வளம் என்பன அறியப்பட்டு எதிரியால் அவனது ஆலோசனையின் பெயரில் "முன்னேறிப் பாய்ச்சல்" என்னும் இராணுவ நடவடிக்கை மூலம் எதிரி சண்டிலிப்பாய் வரை முன்னேறி வலிகாமத்தின் அரைவாசிப் பகுதியை கைப்பற்றி இருந்தான்.


ஆனால் புலிகள், பொட்டம்மான் தலமையிலான வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு பலநூறு இராணுவத்தை கொன்று பழைய நிலைகளுக்கே எதிரியை விரட்டி அடித்தனர். அதன் பின் மீண்டும் மிகப்பெரும் இராணுவ தளபாட கொள்முதல் மூலம் தமது இராணுவ இயந்திரத்தை மீளவும் சீர் செய்த எதிரி, அதன் தொடர்ச்சியாக 1995 அக்டோர் 17 அன்று வசாவிளான், அச்சுவேலி, புத்தூர் பகுதி ஊடாக பெரும் எடுப்பிலான கள முனையினையை எதிரி திறந்தான்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையென பெயர் சூட்டி மிகப் பெரும் வல் வளைப்பை எதிரி மேற்கொண்டான். அதை எதிர்த்து புலிகளின் படையணிகளும் களத்தில் இறங்கினர். மிகப் பெரும் போர் வெடித்தது. அந்த நேரத்தில் புலிகளிடம் ஆட்லறிகள் இல்லாத காலம். பூநகரியில் கைப்பற்றிய சில 120mm மோட்டர்களே நல்ல நிலையில் இருந்தன. ஆனால், அதற்கு தேவையான எறிகணைகளும் கையிருப்பு இல்லாது இருந்தது.

ஆனால், அவைகள் எதிரியிடம் தாராளமாக இருந்தது. கண்மூடித் தனமான ஆட்லறி, 120 mm மோட்டர், மற்றும் விமானத்தாக்குதல் மூலம் யாழ் குடாநாடு அதிர்ந்தது. இதில் பொது மக்களுக்கே அதிக சேதம் ஏற்பட்டது. இந்தக் குண்டு வீச்சிக்கு மத்தியில் போராளிகளும் கடும் போரை தொடுத்து எதிரியை கொன்றவண்ணம் இருந்தனர். அன்றைய முன்னேற்றம் அங்குலம் அங்குலமாகவே எதிரி முன்னேறினான்.

பல ஆயிரம் இராணுவத்தை பலி இட்டு எதிரி வலிகாமத்தை அன்று கைப்பற்றி இருந்தான். புலிகள் பின்வாங்கும் போது மக்களும் ஒரே ஒரு பாதையான நாவற்குழி பாலத்தின் ஊடாக தென்மராட்சி நோக்கி இடம் பெயர்ந்தனர். ஒரே நாளில் ஐந்து லட்சம் மக்கள் வெளியேறி மக்களும் புலிகளும் வேறல்ல என்பதை உலகுக்கு நிரூபித்து அந்த வரலாற்றை பதிவு செய்தனர்.

மக்கள் வெளியேறியதும், உடனே புலிகள் தொண்டைமானாற்றில் இருந்து வல்லைவெளி ஊடாக வாதரவத்தை நாவற்குழி வெளியை சூனியப் பிரதேசமாக விட்டு, அரியாலை வரை, மிகப்பெரும் மண்ணணையை உருவாக்கி இராணுவத்தை முன்னேறவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். அந்த நேரத்தில் புலிகளின் ஆயுதக் கையிருப்பும் கணிசமாக குறைந்திருந்தது.

அப்போது எமது மோட்டார் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் 120mm மோட்டர்கள் மற்றும் அதற்கான எறிகணைகளும் எமது பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அதற்கான பயிற்சிகள் ஒரு பக்கத்தால் நடந்து கொண்டிருக்க, மறு பக்கத்தால் மீண்டும் வலிகாமத்தை கைப்பற்றும் நோக்கில் அவசர அவசரமாக தாக்குதல் திட்டம் ஒன்று போடப்பட்டு நாகர்கோவில், பளை, அரியாலை போன்ற பகுதிகளில் பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

தாக்குதலுக்கான நாளும் குறிக்கப்பட்டு ஆயத்தமான போது 1996ம் ஆண்டு நான்காம் மாதம் ஆரம்பத்தில் வாதரவத்தைக்கும், நாவற்குழிக்கும் இடைப்பட்ட நீர்ப்பகுதி ஒன்றின் ஊடாக இரவோடு இரவாக எதிரி முன்னேறி கைதடிப் பகுதியை சுற்றி வளைத்து மக்களைப் பிடித்திருந்தான். அது மட்டுமல்லாது மக்களை கேடயமாக பயன்படுத்தி சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டிருந்தான்.


எதிரிக்கு தாக்குதலை மேற்கொள்ளும் நிலையில் புலிகள் இருந்த போதும் எமது மக்கள் கொல்லப்படுவார்கள் என்னும் ஒரே காரணத்திற்காக புலிகள் படையணிகளை பின்வாங்கும் படி தலைவர் கட்டளையிட்டார். அன்று தாக்குதலை மேற்கொண்டிருந்தால் சில நூறு மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், யாழ் குடாநாடு எம் கைகளில் வந்திருக்கும்.

மக்கள் உயிரை புலிகள் பெரிதாக மதித்தபடியால்தான் யாழ் எம் கையை விட்டுப்போனது. அன்றைய நேரத்தில் போராட்டத்தில் இருந்த போராளிகளுக்கு இந்த உண்மை தெரியும். எதிரியை முன்னேற விட்ட அந்த பகுதிக்கான கட்டளைத் தளபதியை, அதற்கன தண்டனையாக புலிகளமைப்பை விட்டே துரத்தி இருந்தார் தேசியத் தலைவர் அவர்கள்.(சில காரணங்களுக்காக அவரது பெயரை நான் இங்கே குறிப்பிடவில்லை.)

அப்படிப்பட்ட தலைவரைத்தான்... "மக்களை முள்ளிவாய்க்காலில் கேடயமாக வைத்திருந்ததாக" கருணா கூறித் திரிகின்றார். இப்படியே மக்கள் பகுதிக்குள் எதிரி வந்ததும், தலைவர் அவர்கள் புலிகளின் கட்டமைப்பை எதிரி கைப்பற்ற விடாமல் வன்னி நோக்கி நகர்த்தும் பொறுப்பை பொட்டம்மானிடம் கொடுத்திருந்தார்.

அதன்படி புலிகளின் பின் வாங்கும் நடவடிக்கை கட்டம் கட்டமாக நகர்த்தப்பட்டது. மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படாது மறிப்புச் சண்டையில் ஈடுபட்டபடி போராளிகள் ஆயுதங்கள் உட்பட எந்தவொரு பொருளும் எதிரி கைப்பற்ற விடாது, போராளிகளுக்கும், மக்களுக்கும் எந்தவித சேதமும் இல்லாதும் வன்னிக்கு பிவாங்கி இருந்தனர் புலிகள். அந்தக் கோபத்தின் வெளிப்பாடே மூன்று மாதத்தின் பின் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முல்லைத்தீவு முகாம் தகர்ப்பு ஆகும்.

ஆனபோதும், சில நூறு மக்களுக்காகவே அன்று புலிகள் யாழை கை விட்டனர் என்பது புலிகள் சொல்லாத வரலாறு. இது எதிரிக்கும் நன்கு தெரியும்..!! 

- ஈழத்து துரோணர்.
« PREV
NEXT »

No comments