Latest News

September 04, 2015

போருக்கு பின்னர் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கும் இராணுவம்: புதிய அறிக்கை (இணைப்பு)
by admin - 0

பிரதேசம் முழுவதும் நிலை நிறுத்தப்பட்டுள்ள படையினரின் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தொந்தரவுகளுக்குள் இலங்கையின் வடபகுதி பெண்களை இரையாக்கி கொள்வதன் மூலம் படையினர் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொள்வதை காண முடிகிறது என போருக்கு பின்னர் கடந்துள்ள 6 வருடங்களில் தமிழ் பெண்கள் எதிர்நோக்கி வரும் நிலைமை குறித்து வெளியாகியுள்ள புதிய அறிக்கை ஒன்றின் இணை ஆசிரியர் கூறியுள்ளார்.
சதாகாலமும் பாதிக்கப்பட்டவர்கள்? போருக்கு பின்னர் இலங்கையின் தமிழ் பெண்கள்(The Forever Victims? Tamil Women in Post-War Sri Lanka) என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி கேட் க்ரோனினுடன் நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சமூகம் மற்றும் உலகமய தலைமைத்துவத்திற்காக கொலின் பவல் பீடத்தின் பேராசிரியர் நிம்மி கௌரிநாதன் ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து வானொலி ஒன்றுக்கு  செவ்வி வழங்கியுள்ள நிம்மி கௌரிநாதன், வடக்கில் பெரும் எண்ணிக்கையிலான படையினர் நிலை நிறுத்தப்பட்டும், அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்காமல் இருக்கும் வரை தமிழ்ப்  பெண்கள் படையினரின் பாலியல் வன்கொடுமைகளுக்கு இரையாகும் பாராதூரமான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இலங்கையின் வடபகுதிக்கு சென்று  சந்தித்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்களிடம் உரையாடி சேரித்த தகவல்கள் தமது அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது என பேராசிரியர் கௌரிநாதன் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் மத்தியில் ஆதிக்கத்தை முன்னெடுத்து செல்வதற்காக அரச படையினர் பாலியல் வன்கொடுமையை பயன்படுத்தும் விதம் பற்றி ஒரு பெண் செயற்பட்டாளர் விளக்கியுள்ளார்.

 எங்களை அடிமை வாசிகளாக வைத்து கொள்ள எப்படி, அவர்களால் பெண்களையும் ஆண்களையும் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கி கொள்வது எப்படி என்பதை இராணுவம் தமிழ் மக்களுக்கு சொல்லி காட்டியுள்ளது.

உலகில் ஏனைய இடங்களை  போல், இலங்கையிலும் தண்டனை வழங்கவும் தமிழ் பெண்களின் கௌரவத்தை சிதைக்கவும் பாலியல் வன்கொடுமை பயன்படுத்தப்படுகிறது என அந்த பெண் செயற்பட்டாளர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒழுக்கமான நிர்வாகம் இல்லாமல் போயுள்ள காலத்தில், கடும் இராணுவமயமாக்கலுக்கு கீழ் பாலியல் சுரண்டல்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இணையத்தள பயன்பாடுகள், செல் போன் தொழில்நுட்பங்களை விடுதலைப் புலிகள் அமைப்பு வரையறுத்திருந்ததுடன் மது போதைக்கும் ஆபாச கலாச்சாரத்திற்கும் புலிகள் கடும் தண்டனை வழங்கியதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் ரீதியான தோல்விக்கு பின்னர், வெளிவுலகத்திற்கு வடபகுதி திறந்து விடப்பட்டதுடன் தமிழ் சமூகத்திற்குள் புதிய தொழில்நுட்பம் சுயமாக சென்றடையவில்லை என பேராசிரியர் கௌரிநாதன் கூறியுள்ளார்.

வறுமையில் பீடிக்கப்பட்டுள்ள தமிழ் பெண்கள் செல் போன் உட்பட புதிய தொழில்நுட்ப உற்பத்திகளை விலை கொடுத்து வாங்குவதில்லை. இராணுவத்தினரால் பலவந்தமாக வழங்கப்படும் அவற்றை நிராகரிக்க முடியாமல் தம் வசம் வைத்திருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

பெண்களை இராணுவத்தின் பிடியில் வைத்து கொள்ளவே இந்த புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக கௌரிநாதன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இராணுவ பலவந்த பயமுறுத்தல்களுக்கு மத்தியில் பொருளாதார வறுமையில் மூழ்கியுள்ள தமிழ் பெண்கள், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்குள்ளும் பாலியல் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை தவிர பெண்களை வலுப்படுத்தவும் அவர்களை மேம்படுத்தும் நோக்கிலும் செயற்படும் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகளில் தலையீடுகள் குறித்து நகைப்பை ஏற்படுத்தும் சிறியவைகள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல அரசசார்பற்ற அமைப்புகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான பெண்களுக்கு கோழிகளையும், மாடுகளையும் தையல் இயந்திரங்களையும் வழங்குகின்றன அல்லது வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை மற்றும் சிகை அலங்காரம் தொடர்பான பயிற்சிகளை வழங்குகின்றன.

இந்த திட்டங்கள் பெண்களின் நல் இருப்புக்கு நிரந்தர தீர்வல்ல என கூறும் அறிக்கை இது அவர்களை ஆபத்தில் தள்ளிவிடப்படும் அபாயத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
« PREV
NEXT »

No comments