Latest News

September 24, 2015

வேலணையில் ஆயுதங்களுடன் வந்தவர்களால் இளம் குடும்பப் பெண் கடத்தப்பட்டு பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்
by admin - 0

நள்ளிரவில் ஆயுதங்களுடன் வீடு புகுந்தவர்கள், கணவனைத் தாக்கி விட்டு அவரது மனைவியைக் கடத்தி வன்புணர்வு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் வேலணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட பெண்ணை அப்பகுதி முழுவதும் இரவிரவாகத் தேடிய பொலிஸாரும், பொது மக்களும் அதிகாலையில் காட்டுக்குள் இருந்து பெண்ணை மீட்டுள்ளனர்.

பெண்ணைக் கடத்திய - தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.கடத்தப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது பரிசோதனைகளின் மூலம் உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டது.

யாழ். ஊர்காவற்றுறை, வேலணையில் நேற்றுமுன்தினம் இரவு 11.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வீட்டில் கணவருடன் உறங்கிக் கொண்டிருந்த போதே அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த குறித்த குழுவினர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். 21 வயதுடைய குறித்த பெண் திருமணமாகி 7 மாதங்களாகின்றன.

சம்பவத்துக்குத் தொழில் ரீதியான முரண்பாடு காரணமா அல்லது வேறு காரணமா என்று தெரியவரவில்லை. அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வைத்தியசாலையில் பரிசோதனைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். பெண்ணின் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு வந்த இருவர் கணவரை அடித்துக் காயப்படுத்திய பின்னர் இளம் பெண்ணை அருகில் உள்ள கடற்கரைப் பகுதிக்குக் கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர். அடிகாயங்களுக்குள்ளாக்கப்பட்ட இளம் பெண்ணின் கணவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணையில் இறங்கினர். அதன்படி மண்டைதீவில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை உரிய கவனிப்புக்குட்படுத்திய போது அவர் உண்மையைக் கூறினார். அதன்படி விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸாரும், பொது மக்களும் வேலணைக் காடு, கடற்கரைப்பகுதியில் இரவிரவாகத் தேடுதல் நடத்தினர்.

அவ்வாறு தேடுதல் நடத்தியபோதே அதிகாலை 4.30 அளவில் வேலணைக் காட்டுப் பகுதியில் வைத்துப் பொலிஸார் இளம் பெண்ணை மீட்டனர். பெண்ணைக் கடத்தியவர்களில் மற்றொருவரும் அந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். 3 பேரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

வைத்தியசாலை பரிசோதனைகளின் மூலம் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது. பொலிஸாரும் இதனை உதிப்படுத்தினர்.

அது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் முழங்காவிலைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முன்னர் புங்குடுதீவில் பாடசாலை சென்ற மாணவி கடத்தப்பட்டுக் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னும் அதிர்ந்துகொண்டிருக்கையில் கிட்டத்தட்ட அதேபோன்றதாகக் குறித்த குடும்பப் பெண் கடத்தப்பட்டமை பெரும் பரபரப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments