Latest News

September 03, 2015

ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று : தமிழினப் படுகொலைக்கு நீதிகோரி ஒரு இலட்சம் மரங்களை நாட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு!
by Unknown - 0

சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக, உலகெங்கும் ஒரு இலட்சம் மரக்கன்று நடுகை இயக்கமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.

அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கத்தின் தொடர்சியாக, முள்ளிவாய்க்கரில் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் இந்த மர நடுகை இயக்கம் தொடங்குகின்றது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவடிவம் :

"ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று" தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி ஒரு இலட்சம் மரங்கள் உலகெங்கும் நாட்டுவோம் வாரீர்!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின்போது படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்களை நினைவு கூரும் வகையிலும், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்குடனும் உலகெங்கும் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வகையிலான இயக்கம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கிறது.

ஜெனீவா - ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 வது கூட்டத்தொடர் தொடங்கும் செப்டம்பர் 14ம் நாளன்று, ஆரம்பிக்கப்படும் இம் மரநடுகை இயக்கம் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7வது ஆண்டு நினைவுநாளாகிய 2016 மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளனன்று நிறைவுறும்.

சிறிலங்கா அரசின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் போது கொன்றொழிக்கப்பட்ட எம் மக்களுக்கான நீதியை வழங்குங்கள் என்று அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவும் உலகப் பொது நன்மையின்பாற்பட்டு இயற்கையைப் பேணவும், இம் மரநடுகை இயக்கம் துணை செய்யுமென நாம் உறுதியாக நம்புகிறோம்.

தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது. சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் உலகின் வல்லமை மிக்க நாடுகள் தமது நலன்களுக்காகத் தமிழ் மக்களின் நீதி கோரும் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.

சிறிலங்காவின் தமிழினஅழிப்பு நடவடிக்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு மாறாக, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்பதனை அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவிச்செயலர் நிஷா பிஸ்வால் அவர்கள் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழ் மக்களுக்கெதிரான இனஅழிப்பில் முதன்மைக்குற்றவாளியே சிறிலங்கா அரசுதான்.

முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தில் சிறிலங்கா அரசின் பாத்திரத்தை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. சிறிலங்கா அரசின் கொள்கைகளில் ஒன்றாகத்;தான் தமிழ் மக்களின் தேசிய அடையாளங்களைச் சிதைப்பதும், ஈழத் தமிழினம் ஒரு தேசம் என்ற தகைநிலையை இல்லாதொழிப்பதும், சிறிலங்கர் (இலங்கையர்கள்) என்ற அடையாளத்துக்குள் தமிழ் மக்களைத் திணிப்பதும் இருக்கின்றன. இத் திட்டத்தின் ஒரு கொடுரமான வடிவம்தான் முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு என்பதை நாம் நன்கறிவோம்.

சிறிலங்காவின் இந்த இனஅழிப்புத் திட்டத்தினை உயிர்களைக் கொல்லும் பரிமாணத்துடன் மட்டும் நாம் நோக்கக்கூடாது. சிறிலங்கா அரசு திட்டமிட்ட முறையில் மேற்கொண்டுவரும் இனஅழிப்பினை நாம் போர்க்குற்றமாக மட்டும் குறுக்க முடியாது.

இத்தகையதொரு பின்னணியில் நாம் ஓர் அனைத்துலக விசாரணைப்பொறிமுறையின் ஊடாக நீதியினைக்கோருவதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு.

1. சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிரான நீதி என்பது இவ் இனஅழிப்பில் இருந்து தமிழ் மக்களை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையிலான பரிகாரநீதியின் பாற்பட்டதோர் அரசியல் ஏற்பாடாகவே இருக்க முடியும். இத்தகைய அரசியல் ஏற்பாட்டினை நாம் எட்டிக் கொள்வதற்கு உறுதுணை செய்யும் வழிமுறையாகத்தான் தமிழின அழிப்புக்கு எதிரான அனைத்துலக விசாரணைப்பொறிமுறை அமைய முடியும்.

2. இவ்விடயத்தில் முதன்மைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசே இருக்கும் நிலையில் தமிழின அழிப்புக்கு எதிராக ஒரு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கான அரசியல் விருப்போ அல்லது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீதியை நிலைநிறுத்தக் கூடியவகையிலான விசாரணைகளுக்கான சூழலோ சிறிலங்காவில் கிடையாது. அனைத்துலக நிபுணர்கள் எவரும் அந்நாட்டு அரசியற்சூழலைத் தாண்டிப் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது.

இத்தகைய காரணங்களுக்காக நாம் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையைக் கோரிவந்த வேளையில், சிறிலங்காவில் இடம் பெற்ற ஆட்சி மாற்றம் காரணமாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்குப் பதிலாக உள்நாட்டுப் பொறிமுறையை ஆதரிக்கும் போக்கு அனைத்துலக அரசுகளிடம் வளர்ச்சியடையலாம் என்பதனை நாம் உய்த்துணர்ந்து கொண்டோம்.

இதனால் தமிழ் மக்களின் நீதிகோரும் போராட்டம் அனைத்துலக அரங்கில் ஒரு பின்னடைவைச் சந்திக்கும் அபாயமும் உணரப்பட்டது. இந்தச் சவாலை அரசியல்ரீதியாகவும் தார்மீகரீதியாகவும் எதிர்கொள்ள சிறிலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது அதற்கு நிகரான ஒரு அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்குள் நிறுத்துமாறு கோரி நாம் 1 மில்லியன் கையெழுத்தியக்கத்தை ஆரம்பித்திருந்தோம். இக் கையெழுத்தியக்கம் தற்போது 1.3 மில்லியன் கையெழுத்துக்களைத் தாண்டித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் 30ம் திகதிவரை தொடரும் இக் கையெழுத்து இயக்கத்தில், நீதிக்காகக் குரல் கொடுக்கக் கூடிய அனைத்துலக சிவில் சமூகத்தைச் சேர்ந்த பலரும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர் என்பது உற்சாகம் தருவதாக உள்ளது.

தற்போதய சூழலில் தமிழின அழிப்புக்கு எதிராக அனைத்துலக விசாரணைப் பொறிமுறையினைக் கோரித் தமிழ்மக்கள் தமது சக்தி அனைத்தையும் திரட்டிப் போராடியாக வேண்டும். தாயகத்திலும் தமிழகத்திலும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும், மற்றும் மலேசியா, சிஙகப்பூர், தென்னாபிரிக்கா உட்பட தமிழ் மக்கள் வாழும் நாடுகள் எங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும்.

அனைத்துலக விசாரணைப்பொறிமுறை தேவையென வடக்குமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் 01.09.2015 அன்று முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் இம் மக்கள் எழுச்சிக்கு வலுவூட்டக் கூடியது. இத்தகையதொரு தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படுவது உலகின் கவனத்தை ஈர்க்கும். மக்கள் போராட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும். தமிழ் மக்களின் எழுச்சி மிக்க போராட்டத்துடன் உலகில் நீதிக்காகக் குரல் கொடுக்க்கூடிய அனைத்துலக அமைப்புக்களையும் மக்களையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் தொடரவேண்டிய இப் போராட்டத்தில் நீதி எனும் வலுவான ஆயுதம் எமது கைகளில் உண்டு. உங்களது அரசியல் நலனுக்காக நீதியைப் பலியிடப் போகிறீர்களா என்பதை அரசுகளிடம் நாம் உரத்துக் கேட்போம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெறும்போது தமிழ் மக்களின் நீதிக்கான குரல்கள் மனித உரிமைப் பேரவையின் மனச்சாட்சியை உரத்துத் தட்டட்டும்.

தமிழ் மக்களின் நீதிக்கான இப்போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடனேயே நாம் இந்த ஒரு இலட்சம் மரங்கள் நாட்டும் இயக்கத்தை ஆரம்பிக்கிறோம். இவ் இயக்கம் தொடர்பான மேலதிகத் தகவல்களை விரைவில் அறியத் தருவோம். நாம் நாட்டும் ஒவ்வொரு மரக்கன்றும் நமது தேசத்தில் சிங்களத்தின் இனஅழிப்பின் மூலம் கொல்லப்பட்ட ஒவ்வாரு தமிழ் உயிரையும் இவ் உலகுக்கும் எமக்கும் நினைவு படுத்தட்டும்.தனிமரங்களும் தோப்புக்களுமாக இவை தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு உறுதுணையாக அமையட்டும்!

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments