தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக சரன் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்ய சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் மிக நெருங்கி சகாக்களில் ஒருவரான சரன், சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் காவல்துறை உத்தியோகத்தர், ஏனையவர்கள் கடற்படை உத்தியோகத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணைகளின் மூலம் ரவிராஜை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
கொலை செய்வதற்கு முச்சக்கர வண்டியில் வந்ததாகவும், பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும், இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் வாகனங்களை செலுத்திய சாரதிகள் பற்றிய விரபங்களையும் திரட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அரசாங்க சாட்சியாளர்களாக மாற இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் தகவல்களின் அடிப்படையில் சுவிட்சர்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ள சரன் என்பவரை கைது செய்ய, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுவிட்சர்லாந்திற்கு பயணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் உத்தரவிற்கு அமைய, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட கிழக்கு மாகாண தலைவர் (கருணா) கொலையாளிக்கு உத்தரவிட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments
Post a Comment