Latest News

September 14, 2015

திருச்சி சிறப்பு முகாம்வாசிகளின் உண்ணாவிரதம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.!
by அகலினியன் - 0

திருச்சி சிறப்பு முகாம்வாசிகளின் உண்ணாவிரதம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.!


கடந்த 11.09.2015 அன்று முதல் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்கவேல் மகேஸ்வரன், பாலசுப்பிரமணியம் சிவனேஸ்வரன், கந்தவனம் மகேஸ்வரன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஞானசௌந்தரம் சுரேஷ்குமார் ஆகிய ஐவரும் தம்மை விடுதலை செய்யும்படி "வாழவிடு இல்லையேல் கருணைக் கொலை செய்து விடு" என்ற கோரிக்கையினை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இவர்களது உண்ணாவிரதப் போராட்டத்தினை தமிழ் இணையங்கள் முக்கியத்துவப்படுத்தி செய்திகளைப் பிரசுரித்தமையால் தமிழக அரசுக்கு மறைமுக அழுத்தங்கள் உருவாகின. இதனால், விழிப்படைந்த தமிழக அரசு அதிகாரிகள் நேற்றைய தினமான 13.09.2015 அன்று மாலை சுமார் 5 மணியளவில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி சுமார் 10 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் உட்பட 6 பேர் ஒரே வழக்கிற்காக கடந்த மூன்று வருடங்களாக அடைக்கப்பட்டிருந்தார்கள். இதில் ஐவரே மேற்கண்ட உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். 



சுமார் 4 மணி நேரப் பேச்சுவார்த்தையை அடுத்து இவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அதிகாரிகள், அடுத்தடுத்த விடுதலைகளில் இரண்டு... இரண்டு நபராக விடுதலை செய்வதாக உறுதியளித்த பின்னரே தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் மண்டல தனித்துணை ஆட்சியர், கியூ பிரிவு உதவிக் கண்காணிப்பாளர் (DSP), சட்டம் ஒழுங்கு காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரச அதிகாரிகள் பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது செய்திகளைப் பிரசுரித்து, தமக்குப் பேருதவி புரிந்து வரும் தமிழ் இணையங்கள், ஊடகங்கள் மற்றும் முகநூல் உறவுகள் ஆகியோருக்கு தமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை திருச்சி சிறப்பு முகாம்வாசிகள் தெரிவித்துக் கொண்டனர்.
« PREV
NEXT »

No comments