Latest News

September 22, 2015

செல்போன் மூலம் சிக்கிய அட்டாக் பாண்டி: பொட்டு வழக்கில் ஸ்டாலின் பெயரை இழுத்துவிட திட்டம்?
by Unknown - 0

பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டியை அவருடைய செல்போன் பேச்சு காட்டி கொடுத்துள்ளது. மும்பையில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி பொட்டு சுரேஷ் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக ஸ்டாலினை சந்தித்தது பற்றி தனது வாக்குமூலத்தில் தெரிவிப்பாரா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 

அட்டாக் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொட்டு கொலை வழக்கில் ஸ்டாலின் பெயரையும் இழுத்து விட போலீஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அழகிரியின் நெருங்கிய நண்பரான பொட்டுசுரேஷ் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்தவர் திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி. அவர் நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

காவல்துறையினரால் கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்த அட்டாக் பாண்டியின் ஆதரவு பிரமுகரின் செல்லுக்கு வந்த புதிய நம்பரை வைத்துதான் அட்டாக் பாண்டியின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளனர். மும்பையிலிருந்து அட்டாக் பாண்டி பேசியதை உறுதிபடுத்திய போலீசார், உடனே சுற்றி வளைத்து அட்டாக்கை அமுக்கியுள்ளனர்.

வரும் 25 ஆம் தேதி நமக்கு நாமே திட்டம் எனும் பேரில் மு.க.ஸ்டாலின் மதுரை நகரை சுற்றி வர இருக்கிறார். இதற்கு கவுன்டர் கொடுக்கும் வகையில் அட்டாக் பாண்டி கைதை காட்டி அவர்களை வாயடைக்க வைக்கவே, அரசு கைது சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறது என்கிறார்கள். காரணம் கடைசி நேரத்தில் அட்டாக் பாண்டி, ஸ்டாலின் அணிக்கு தாவியிருந்தார். அதுமட்டுமல்லாது பொட்டு சுரேஷ் கொலைச் சம்பவத்துக்கு முன்பு, சென்னை சென்று மு.க.ஸ்டாலினை அட்டாக் பாண்டி சந்தித்தது பற்றி அட்டாக்கின் உறவினர் ஏற்கெனவே வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். அதுதொடர்பாக, அட்டாக் பாண்டியிடம் வாக்குமூலம் வாங்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பொட்டு சுரேஸ் கொல்லப்பட்ட ஜனவரி 31ம் தேதிக்கு மறுதினம் அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்களான கீரைத்துறையைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினம், சந்தானம், ராஜா என்ற ஆசா முருகன், லிங்கம், சேகர், செந்தில், கார்த்திக் ஆகிய 7 பேர் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளது.

இதில் சந்தானம் கொடுத்த வாக்குமூலத்தில் அட்டாக் பாண்டியை அவரது அக்காள் மகன் திருச்செல்வம் தரப்பை வைத்தே கொலை செய்ய பொட்டு சுரேஷ் திட்ட மிட்டிருந்தார். இந்த சதி தனது இன்னொரு அக்காள் மகன் விஜயபாண்டி மூலம் அட்டாக் பாண்டிக்கு தெரியவந்தது. உடனே பொட்டு சுரேஷை விட்டு வைத்திருக்கக் கூடாது என அட்டாக் பாண்டி சொன்னார்.

இதை என்னிடம் சொன்ன விஜயபாண்டி, எப்படியாவது நாம் பொட்டுவை போட்டுத் தள்ள வேண்டும் எனச் சொன்னார். இதற்குப் பிறகு, ஒருநாள் சென்னையில் மு.க.ஸ்டாலினை அவரது வீடு அருகே சென்று சித்தப்பா (அட்டாக் பாண்டி) சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது நான், விஜயபாண்டி, பிரபு 3 பேரும் ஒன்றாகப் போயிருந்தோம்.

2 நாள் கழித்து பாண்டி பஜார் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, மருமகன் ஆகியோருடன் சித்தப்பா மட்டும் தனியாக பேசினார். இந்த சந்திப்பு முடிந்த மறுநாள் நான், விஜய பாண்டி, பிரபு 3 பேரும் மதுரைக்கு வந்துவிட்டோம். எனவே இந்தச் சந்திப்பின்போது என்ன பேசினர் என்பது எங்களுக்குத் தெரியாது.

அட்டாக் பாண்டி முன்கூட்டியே மதுரையில் இருந்து வெளியேறிவிட்டதால், கொலைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தியது அவரது அக்காள் மகன் விஜயபாண்டியும், அவரது நண்பர் பிரபுவும்தான். அவர்களுக்குத்தான் மேல் விவரம் தெரியும்" என்று கூறப்பட்டிருந்தது.

விஜயபாண்டியும், பிரபுவும் அடுத்த ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்து, ‘அட்டாக் பாண்டி சொன்னதால் கொலை செய்தோம். அதற்கு மேல் எதுவும் தெரியாது' என்று கூறியிருந்தனர். அழகிரி மீதான அதிருப்தியில், ஸ்டாலின் அணிக்கு தாவிய அட்டாக் பாண்டி, அதற்காகவே ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தினார். இதை அறிந்த அழகிரியின் மகன் துரை தயாநிதி, அட்டாக் பாண்டியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இதைவைத்து பொட்டு கொலையில் பலவித முடிச்சுகளைப் போடுகின்றனர் போலீசார் என்பது திமுகவினரின் குற்றச்சாட்டு.

இந்நிலையில் கொலை நடந்த இரண்டரை ஆண்டுகள் கழித்து அட்டாக் பாண்டி கைதாகி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்டாக் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் நமக்கு நாமே என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஸ்டாலினுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந் நிலையில் அட்டாக்கை வைத்து ஸ்டாலினுக்கு புதிய சிக்கலை உருவாக்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.

« PREV
NEXT »

No comments