Latest News

September 26, 2015

இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்!
by Unknown - 0

இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சர்வதேச நீதிப் பொறிமுறைகைளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் மிக முக்கியமான நாடு என்பதோடு, சர்வதேச ரீதியில் செல்வாக்கு மிகுந்த நாடாகவும் திகழ்கின்றது. இந்நிலையில், இலங்கையில் பொது மக்களுக்கு எதிராக அநியாயங்கள் நடந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அதனைத் தடுத்திருக்க வேண்டும். அது இந்தியாவின் கடமையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் இறையாண்மை என்பதும் அதுவே எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு நாடும் தமது குடிமக்களைக் காப்பாற்ற வேண்டுமென்பதோடு, அதனைச் செய்ய குறித்த நாடுகள் தவறும் பட்சத்தில் நட்பு நாடுகள் தலையிட்டு பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மிகத் தெளிவான சர்வதேசசட்டங்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தியா இந்த விடயத்தில் தவறிழைத்துள்ளதாகவே தான் கருதுவதாகவும் கூறியுள்ளார்.

இந்தியா தலையிட்டு சமரசத்தை ஏற்படுத்தியிருந்தால், 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத்தடுத்திருக்கலாம் எனவும், தென்னாபிரிக்கா போன்று அது உள்நாட்டு பிரச்சினை என இந்திய தெரிவித்திருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்படுவது உள்நாட்டு பிரச்சினை அல்ல எனவும், அது சர்வதேச விவகாரம் எனவும் அவர் இந்தச் செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments