Latest News

September 09, 2015

உள்நாட்டு அல்லது கலப்பு நீதித்துறைச் செயல்முறையை நிராகரிக்குக : ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு 11 தமிழர் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை !
by Unknown - 0

சிறிலங்கா விவகாரத்தில் உள்நாட்டு அல்லது கலப்பு நீதித்துறைச் செயல்முறையை நிராகரித்து, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்போ, அல்லது ஒரு சர்வதேசப் பொறுப்புடைமைச் செயல்முறைக்கோ பரிந்துரைக்குமாறு பதினொரு தமிழர் அமைப்புக்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல்-ஹசேன் அவர்களிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானிய தமிழ் கன்சர்வேடிவ்கள் (ஐக்கிய இராச்சியம்), பிரித்தானிய தமிழர் ஒன்றியம்(ஐக்கிய இராச்சியம்;), இலங்கைத் தமிழ்ச் சங்கம் (அமெரிக்கா), சர்வதேச ஈழத்தமிழர் பேரவை (கனடா-நார்வே-பின்லாந்து-டென்மார்க்-ஸ்வீடன்-ஹாலந்து-பெல்ஜியம்-ஜெர்மனி-பிரான்சு-சுவிட்சர்லாந்து- அயர்லாந்து-இத்தாலி-ஆஸ்திரேலியா-நியூசிலாந்து-மற்றும் கூட்டாளி நாடான மொரிசியஸ்), பசுமைத் தாயகம் அறக்கட்டளை, இந்தியா, இலங்கையில் சமத்துவத்துக்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (அமெரிக்கா), தென்பகுதி பண்பலை வானொலி (தென்னாப்பிரிக்கா), சுவீடன் தமிழர் மன்றம் (சுவீடன்), அனைத்துலக விவக்கரங்களுக்கான அமைச்சகம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் தமிழர் அரசியல் நடவடிக்கைப் பேரவை(அமெரிக்கா), உலகத் தமிழர் அமைப்பு (அமெரிக்கா) ஆகிய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களே கூட்டாக இக் கோரிக்கையினை கடந்த ஓகஸ்ற் 18ம் நாளன்று 2015 ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

கோரிக்கை மனுவின் முழமையான வடிவம் :

இலங்கைத்தீவின் இறுதி யுத்தத்தில், பலியான தமிழர்களுக்கும் தப்பிப் பிழைத்திருப்பவர்களுக்கும் ஏற்பட்ட விவரிக்க இயலாத பேரழிவைக் கொண்டு வந்த நிகழ்வுகள் தொடர்பில் ஒரு திட்டவட்டமான அறிக்கை அளிக்கும் தங்கள் பணிக்காக, உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகிய நாங்களும், உலகெங்கும் உள்ள தமிழர்களும், உங்களுக்கும் உங்கள் அலுவலகத்திற்கும் எங்களுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்களுடைய மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக் குறித்த ஒரு பாரபட்சமற்ற சட்டபூர்வ ஆவணமாக
அறிக்கையை வெளியிடுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஒரு உள்நாட்டுப் பொறிமுறையோ அல்லது சர்வதேச உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கலப்புப் பொறிமுறையோ இலங்கைத்தீவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்கக் கூடியதாக இருக்காது என்பதைப் பொறுப்புடன் உங்களுக்குத் தெரிவிக்கும் இந்த மனுவை நாங்கள் உங்களிடம் சமர்ப்பிக்கிறோம். சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு நிறுத்துவதன் மூலம் மட்டுமே நீதியை நிலைநாட்ட முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஐ.நாவின் பொதுச் செயலருடைய நிபுணர் குழவின் அறிக்கையில், சிறிலங்காவில் பொறுப்புடைமை குறித்து (மார்ச் 31, 2011) பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது :

'தனது குடிமக்களின் உரிமைகளை மீறுவதில், அது மீறப்பட்ட போது, அரசு தனது பாத்திரத்தையும் பொறுப்பையும் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்வது பொறுப்புடைமைக்கு அவசியமாகிறது.' அரசே சர்வதேசக் குற்றங்களில் சேர்க்கப்படும் போது, அந்தக் குற்றங்கள் சார்ந்த நீதியை வழங்குவதில் அது எந்தப் பாத்திரத்தையும் வகிக்க முடியாது. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் தனது வழக்கில் தானே நீதிபதியாக இருக்கமுடியாது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டக்கோட்பாடு ஆகும்.

சிறிலங்காவில் மோதலுக்கு அடிப்படையான தன்மை, இரண்டு தேசங்களுக்கு இடையிலான, அதாவது சிங்கள தேசம் மற்றும் தமிழர் தேசம் ஆகிய இரண்டு தேசங்களுக்கு இடையிலான, ஒரு மோதலாகும். அப்படி இருக்கும்போது ஓர் அரசு அதன் தீர்மானத்தில் நடுநிலையான பாத்திரத்தை வகிக்கவேண்டும். இருப்பினும், 'சுதந்திரம்' பெற்றதிலிருந்து இலங்கைத்தீவின் வரலாறு எடுத்துக்காட்டியுள்ளபடி, சிறிலங்கா அரசு, அதன் நீதித்துறை உட்பட, சிங்கள தேசத்தின் மேலாதிக்கத்தில் உள்ளது.அது தோற்ற அளவில்கூட, நடுநிலைத் தன்மையின் உயர்த்திப்பிடிக்கத் தவறிவிட்டது.

தமிழர்கள் இழிவுபடுத்தப்படும் நிலை வரும்போது, நீதித்துறை எப்போதும் அரசியல் தலைமைக்குக் கீழ்ப்படிந்தே நடந்துகொள்கிறது, மேலும் கடந்தகாலத்தின் சிறிலங்காவின் விசாரணை ஆணையங்கள் அனைத்தும் அதற்குச் சான்றாக உள்ளன.

சிறிலங்கா மீதான ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் விசாரணை அமைப்பின் ஆணை போர்க்குற்றங்களுடன் நின்றுவிடுவதில்லை, அது சர்வதேசக் குற்றங்களையும் உள்ளடக்கியதாகும். அது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் பிரிவு ஏ இல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் இனப்படுகொலை, மனிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், ஆக்கிரமிப்புக் குற்றங்கள் ஆகியவையும் அடங்கும்.

இனப்படுகொலை என்பது 'ஒரு தேசம், இனக்குழு, இனம் அல்லது மதக் குழு இன்னபிறவற்றை முழுமையாகவோ, பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்களில் ஏதாவது ஒன்று' என்று பொருள்படும் என்று 1948 இனப்படுகொலை உடன்பாட்டின் பிரிவு வரையறுக்கிறது. இனப்படுகொலை குறித்த இந்த வரையறையின்படியே, சிங்கள் இனக்குழுவால் ஏறத்தாழத் தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்தப்படும் சிறிலங்கா அரசு, ஒரு கலப்புப் பொறிமுறையின் பகுதியாகவோ உள்நாட்டு அமைப்பின் பகுதியாகவோ, தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனைப்படுகொலை குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் நீதி வழங்கக்கூடியதாக இருக்காது. ஆகவே, மேற்கண்ட வரையறைக்குள் அடங்கும் குற்றங்களை விசாரித்து ஒரு நியாயமான நீதி வழங்குவதற்கு, ஒரு வெளிப்புற, சுதந்திரமான சர்வதேச அமைப்பு இன்றியாமையாததாக இருக்கிறது.

சிறிலங்காவில், அரசாங்கத்தை மாற்றுவது என்பது நிறுவனமயமாக்கப்பட்ட அதன் தற்காப்பில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று சில தரப்பினரின் நம்பிவருகின்றனர். சிறிலங்கா 1948 ஆண்டில் ஒரு சுதந்திர அரசாக ஆனதிலிருந்து, தமிழர்கள் எண்ணற்ற ஆட்சி மாற்றங்களைப் பார்த்துவிட்டனர், மேலும் அந்த ஆட்சிகளில் ஒன்றுகூட தமிழர்களின் துயரத்தைத் தீர்ப்பதற்கு எந்த உண்மையான முயற்சிகளையும் எடுக்கவில்லை.

சிறிலங்காவின் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா பீல்டு மார்ஷல் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளாh. மிகவும் மோசமான பெயர்பெற்ற 57 வது படைப்பிரிவின் முன்னாள் படைத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜகத் தியாஸ் படைத்தலைமை அலுவலகத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே சர்வதேச அரசுசாரா நிறுவனங்களால், மோசமான சர்வதேசக் குற்றங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் அறைவதாக மட்டுமின்றி, சிறிலங்கா மீதான ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணைய விசாரணை அமைப்புக்கும் சிறிலங்கா அரசிடம் கோரப்பட்ட பொறுப்புடைமையின் வெளிப்படையான போலித்தனமாகவும் இருக்கிறது.

சிறிலங்காவின் உள்நாட்டு அமைப்புக்களில், முக்கியஸ்தர்களை உள்ளடக்கியிருந்த சர்வதேச சுதந்திரமான குழு உட்பட, எதுவும் வெற்றிகரமானதாக இல்லை. பொறுப்புடைமையும் நீதியும், பாதிக்கப்பட்டவர்களின் கருத்தில் நம்பிக்கைத்தன்மை கொண்டவையாக, பாதிக்கப்பட்டவர்களின் சுதந்திரமான பங்கேற்பை உத்தரவாதப்படுத்துபவையாக, சர்வதேச நெறிமுறைகளையும் தர அளவுகளையும் கொண்டவையாக இருக்கவேண்டிய செயல்முறைகளாகும். மேலும் சிங்கள சிறிலங்கா இராணுவ அமைப்பு இன்னும் மாறாமல் இருந்துவரும் நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கின் தீவிர இராணுவமயமாக்கல் இருந்துவரும் நிலையில், தமிழர்கள் எந்த உள்நாட்டுச் செயல்முறையிலும் பங்கேற்கத் தொடர்ந்து அச்சம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

சிறிலங்காவின் வரலாற்றையும் அரசியலையும் எடுத்துக்கொண்டால், ஒரு உள்நாட்டு அல்லது கலப்புப் பொறிமுறை இந்தத் தர அளவுகளை எட்டமாட்டாது, மேலும் அதனால் ஒரே நியாயமான தெரிவு ஐக்கியநாடுகள் தலைமையிலான ஒரு சர்வதேச செயல்முறையே ஆகும்.

அரசுக்கு ஒரு உறுதியான விருப்பம் இருக்கும் போது, ஒரு கலப்புத் தீர்ப்பாயம் பயனுள்ளதாக இருக்கலாம், ஆனால் நீதி வழங்கும் திறன் இல்லாமல் இருக்கலாம். சிறிலங்காவில் நிலைமை இப்படி இல்லை, ஏனென்றால் விசாரணை நடத்துவதற்கோ தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்கோ சிங்கள தேசியத்தின் உறுப்பினர்களிடம் அரசியல் உறுதிபாடு இல்லை. 'படையின் மீதான அவபெயரை அகற்றுவதற்கு' தாங்கள் ஒரு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நிறுவப்போவதாக சிறிலங்காவின் அயலுறவு அமைச்சர் அண்மையில் தெற்குத் தொகுதியில் கூறியுள்ளார். உண்மையில், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் துல்லியமாக இந்தப் பிரச்சனையைத் தான் சுற்றிச்சுற்றி வரும்.

போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்த ஒரு நீடித்த விசாரணையை நடத்தும் ஸ்திரத்தன்மையும் திறனும் தற்போதைய ஆட்சியிடம் இல்லை. அத்தகைய ஒரு விசாரணை நடத்தப்பட்டால், அது தமிழர் எதிர்ப்பு மனஉணர்வுகளையும் தீவிரப்படுத்தவே செய்யும், மேலும் தமிழர் எதிர்ப்புப் படுகொலைகளில் முடியவும் கூடும். அந்த முடிவு பொறுப்புடைமை செயல்முறையை அடைய நினைப்பதற்கு, அதாவது மீண்டும் நிகழாமை, ஆற்றுப்படுத்துதல், அமைதி ஆகியவற்றை அடைய நினைப்பதற்கு நேரெதிராக இருக்கும்.

சிறிலங்காவின் தோல்விகள் குறித்த பொதுச் செயலாளரின் உள்ளக அறிக்கை சிறிலங்காவிலிருந்து படிப்பினைகளைப் பெற்று, உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முன்முயற்சிக்கு வழிவகுத்தது. சிறிலங்கா அரசு சார்ந்த எந்த ஒரு அமைப்பையும் நிறுவுவதன் மூலம், பாதிக்கப்பட்ட தமிழர்களை ஐக்கிய நாடுகள் அவை மீண்டும் கைவிட்டுவிடக் கூடாது.

இதற்கிடையில், சிறிலங்கா மீதான மனித உரிமைகளுக்கான உயர் ஆணைய விசாரணை அமைப்பின் அறிக்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்வைக்க, மாட்சிமை தங்கிய தங்களிடம் வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்ட 'பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம்' அதன் இலக்கை விஞ்சியுள்ளது. அது மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா மீதான தொடர்நடவடிக்கைக்குப் பரிந்துரைக்குமாறு தங்களிடம் வலியுறுத்துகிறது. பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம், உள்நாட்டு மற்றும் கலப்பு அமைப்புகளை நிராகரிக்கிறது,

மேலும் சர்வதேச பொறுப்புடைமைச் செயல்முறையை 84வீத அறுதிப் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் கோருகிறார்கள் என்று கொள்கை மாற்றுக்களுக்கான மையம் அண்மையில் நடத்திய கள ஆய்வில் கண்டறியப்பட்ட முடிவுகளை ஒப்புக்கொள்கிறது.

உலகெங்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், உயர்த்திப்பிடிப்பதற்கும், நீதியையும் பொறுப்புடைமையையும் உத்தரவாதப்படுத்துவதற்கும், மனித உரிமை மீறலுக்கான தடுப்பை கட்டியமைப்பதற்கும், அநீதிகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கும், நீங்கள் ஒப்படைவு செய்துகொண்டு, பணியாற்றி வருவதை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம், தாங்கள் பின்வரும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

உள்நாட்டு அல்லது கலப்பு நீதித்துறைச் செயல்முறையை ஆதரிப்பதைவிட, இந்த வழக்கை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்போ, அல்லது ஒரு சர்வதேசப் பொறுப்புடைமைச் செயல்முறைக்கோ முன்வைக்குமாறு பரிந்துரைக்கக் கோருகிறோம்.

இவ்வாறு இக்கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments