ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேன, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் கலந்து கொண்டதில் தவறேதும் இல்லை என்று ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தஹம் சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளமை குறித்து சமூக வலைத்தளங்கள் ஊடாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் இது குறித்து கருத்து அறிந்து கொள்வதற்காக பி.பி.சி. செய்திச் சேவை ஜனாதிபதி தரப்பைத் தொடர்பு கொள்ள முயன்றிருந்தது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் சார்பில் அவரது ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பி.பி.சி. க்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
தஹம் சிறிசேன ஜனாதிபதியின் தனிப்பட்ட பணியாளர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அவரது மனைவியோ, வேறு குடும்ப அங்கத்தவர்களோ இந்த சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை.
மேலும் தஹம் இந்த சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டதை மறைக்க ஜனாதிபதி தரப்பினர் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலதிக குறிப்பொன்றை வெளியிட்டுள்ள பி.பி.சி. செய்திச் சேவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இந்திய விஜயத்தின் போதும் தஹம் சிறிசேனவை அழைத்துச் சென்றிருந்ததாகவும், மஹிந்த தரப்புக்கு இணையாக இவரும் குடும்ப அரசியலை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment