Latest News

September 15, 2015

சர்வதேசப் பொறிமுறைகள் குறித்து சிந்திப்பதே உகந்தது - வடக்கு முதல்வர்
by Unknown - 0

உள்ளக விசாரணையிலும் சில நிபந்தனைகளை விதித்து வேறு சர்வதேசப் பொறிமுறைகள் குறித்து சிந்திக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதிகோரி கிளிநொச்சி நகரில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடை பயணத்தின் நிறைவில் முதலமைச்சரிடம் மனு கையளிக்கப்பட்டது. இதன்போது நடைபயணத்தில் கலந்து கொண்டிருந்த காணாமற்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் காலில் வீழ்ந்து கண்ணீர் மல்கத் தமக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டிருந்தனர். இதற்கு முதலமைச்சர் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். 

இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், 
இங்கு வந்திருக்கும் உங்களுடைய உள்ளக் கிடக்கைகளை உணர்ந்தே இனப்படுகொலையே தமிழர் தாயகத்தில் நடைபெற்றது. அவ்வாறு நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையில் நாங்கள் இரு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் வாழும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடயத்தில் சர்வதேசமும், இலங்கையின் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளாக நடக்கிறார்கள். அரசியல் வாதிகள் நீதிபதிகளைப்போல் இல்லை. அவர்கள் தமக்குச் சார்பானவர்களை, தமக்கு தேவையானவர்களை தண்டனைகளிலிருந்து காப்பாற்றவே முயற்சிப்பார்கள். அதனாலேயே தமிழ் மக்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படாத நிலை நீடித்துக் கொண்டிருக்கின்றது. எது எவ்வாறிருந்தாலும் தமிழ் மக்களுக்கு என்ன தேவை? என்பதை அறிந்து அதனை தொடர்ந்தும் கேட்போம்.அதனைச் சர்வதேசத்தின் கவனத்துக்கும் கொண்டு வந்திருந்தோம். உங்களுடைய மனவேதனைகளை நாங்கள் நன்றாக உணர்ந்து கொள்கிறோம்.நாங்கள் மட்டுமல்ல சர்வதேச நாடுகளும் அதனை நன்றாக உணர்ந்து கொண்டிருக்கின்றன. 

அண்மையில் நான் சில நாடுகளுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்தவர்கள் என்னிடம் கேட்கிறார்கள். இப்படியெல்லாம் நடைபெற்றனவா என்று. ஆனால் அரசியல் என்பது புதிரானது. தமிழ் மக்கள் விடயத்தில் சர்வதேசமும், இலங்கையின் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளைபோல் நடந்து கொள்கிறார்கள். அரசியல் வாதிகள் எப்போதும் தமக்கு சாதகமானவர்களை,  தமக்கு தேவையானவர்களை தண்டனைகளிலிருந்து காப்பாற்றுவதற்கே முயற்சிப்பார்கள். 

அவர்கள் தங்கள் நலன்களை அதிகம் கவனிக்கிறார்கள். நாம் நீதிபதிகளாக இருந்தபோது வழக்கைச் சரியான முறையில் விசாரித்து தண்டனைக்குரியவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்போம். ஆனால் அரசியல் அவ்வாறில்லை. இதனாலேயே பல பிரச்சினைகள் இன்றளவும் தீர்வு காணப்படாமல் நீடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் தமக்குக் கொடுத்த பெருவெற்றிக்குப் பிரதிபலனாக தமிழ் மக்களுக்குச் செய்யக் கூடிய பல விடயங்களை இன்னமும் செய்யாமல் இருக்கிறார்கள்.

குறிப்பாக படையினர் குறைப்பு, காணாமற்போனவர்கள் விடயம், காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்களில் தீர்வைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அவற்றைச் செய்யாமல் காலம் தாழ்த்தியமைக்கான காரணம் இவ்வாறான ஒரு நிலையில் அவற்றை முன் நிறுத்தி ஒரு உள்ளக விசாரணை பொறிமுறையினை உருவாக்கவே என்பது என்னுடைய பார்வை. 

அண்மையில் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுடன் சந்தித்திருந்த போது, சர்வதேச விசாரணை ஒன்றை எடுத்தால் அதற்குச் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடைய எதிர்ப்பு கிடைக்கும். எனவே உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை தாம் உருவாக்க நினைப்பதாக அவர்கள் கூறியிருந்தார்கள்.அப்போது நாங்கள் கூறியிருந்த விடயம். உள்ளக விசாரணையிலும் சில நிபந்தனைகளை விதித்து வேறு சர்வதேச பொறிமுறைகளை குறித்து சிந்திக்கலாமே என. ஆனால் அதற்குப் பதில் இல்லை. ஆனாலும் உள்ளக விசாரணை பொறிமுறை யில் வெளிநாட்டு நீதிபதிகள் கருத்துச் சொல்லும் அதிகாரம் கொண்டதாகவும், வெளிநாட்டு வழக்கு நடத்துநர்கள் பங்குகொள்ளத்தக்க வகையில் இருக்க வேண்டும்.  

எனவே எமக்கு நீதி கிடைப்பதற்கான பாதையை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. அதனாலேயே நாம் சர்வதேச விசாரணையைக் கேட்டிருக்கின்றோம். எமக்கு நன்மை கிடைக்கும், கிடைக்காது என்பதற்கும் அப்பால் நாங்கள் எங்களுக்கு என்ன தேவை என்பதை கேட்க வேண்டும் என்றார்.  
« PREV
NEXT »

No comments