Latest News

September 12, 2015

வாழ விடு! இல்லையேல் கருணைக் கொலை செய்து விடு!! - ஈழ அகதிகள்
by admin - 0

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து ஈழ அகதிகள், தம்மை விடுதலை செய்யக்கோரி நேற்றைய தினத்திலிருந்து (11.09.2015) சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருகின்ற ஒருசில ஈழ அகதிகளை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து பல பொய்யான வழக்குகளை அவர்கள் மீது பதிவு செய்து சிறப்பு முகாம் என்ற பெயரில் கியூ பிரிவு காவல்துறையினர்
அடைத்து வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.


அந்த வகையில் எந்தவித காரணமுமின்றி கடந்த மூன்று வருடங்களாக திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தம்மை நிபந்தனை அடிப்படையில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்றைய தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் தொடர்ந்து பல வருடங்களாக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் வெளியில் வாழும் தங்களது குடும்பங்கள் பல அசௌகாரியங்களுக்கு முகம் கொடுத்து மிகவும் வறுமையோடு வாழ்ந்து வருவதாலும், பல உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகி வருவதாலும் தங்களை அவர்களோடு சேர்ந்து வெளியே உள்ள அகதி முகாம்களிலோ அல்லது அரசு கூறுகின்ற வேறு ஏதாவது ஒரு இடத்திலோ வாழ அனுமதிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை மனுக்கள் அனுப்பி நிராகரிக்கப்பட்ட நிலையிலும்...

தம்மீது புனையப்பட்ட பொய்யான வழக்குகள் முடிவடைந்த பின்னரே விடுதலை செய்ய முடியுமென அதிகாரிகள் கூறியதையிட்டு மிகவும் வேதனையடந்த ஈழ அகதிகள் தம்மீது தொடரப்பட்ட வழக்குளின்படி பார்த்தால் தமது விடுதலையானது பல வருடங்கள் ஆகும் எனவும் அதனால், தம்மைப் பிரிந்து தனிமையோடு வாழும் தமது மனைவி பிள்ளைகளின் வாழ்வு நிலை என்னாவது என்ற நிலயிலுமே தம்மை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் தங்கவேல் மகேஸ்வரன், பாலசுப்பிரமணியம் சிவனேஸ்வரன், கந்தவனம் மகேஸ்வரன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஞானசௌந்தரம் சுரேஷ்குமார் ஆகியோரில்....

தங்கவேல் மகேஸ்வரன் என்பவர் அன்மையில் விடுதலை செய்யக்கோரி தனது மனைவியுடன் சேர்ந்து இருவரும் சிறப்பு முகாமிலேயே தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்று பின்னர் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. இதில் வேதனைக்குரிய விடயம் என்னவெனில் இருவரும் திருமணம் செய்து 20 நாட்களிலேயே மகேஸ்வரன் பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள செயலானது மிகவும் கொடுமையாகும்.

மற்றைய உறவான ஞானசௌந்தரம் சுரேஷ்குமார் இடுப்பிற்குக் கீழ் இயங்க முடியாதவர். அடுத்தவர் துணையுடனேயே தனது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்ற இவர் எந்தவிதமான உதவியுமின்றி மிகவும் துயரத்தோடு சிறை வைக்கப்பட்ட நிலையில் தனக்கென ஒரு உதவியாளரை நியமிக்குமாறு பல தடவைகள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த போது... கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றமானது உடனடியாக ஒரு உதவியாளரை நியமிக்குமாறு உத்தரவு பிறப்பித்தும் திட்டமிட்ட வகையில் இவருக்கு உதவிடக்கூடாதென தமிழக அரசு விடாப்பிடியாக உள்ளது. 

இதே போன்று மற்றவர்களுக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் உள்ளதால் தமது விடுதலை தூரமான நிலையிலும், எவ்வித காரணமுமின்றி தாம் தொடர்ந்தும் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறும் இல்லையேல் தம்மைக் கருணைக் கொலை செய்து விடுமாறும் தமது நிலையினை விளக்கி பல மனுக்கள் எழுதி திருச்சி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு உளவுத்துறை காவல்துறை அதிபர், கியூ பிரிவு காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி இலங்கை அகதிகள்முகாம் தனித்துணை ஆட்சியர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். 

இன்றுடன் இரண்டாவது நாட்களாக உண்ணாவிரதம் தொடர்கின்றது.
« PREV
NEXT »

No comments