Latest News

August 13, 2015

தமிழர்கள் ஒரு தேசம் என்பதே அடிப்படை. இதனடிப்படையில்தான் அரசியல் தீர்வு காண இயலும்-தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை வரவேற்கத்தக்கது தோழர் தியாகு
by admin - 0

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடு 


இலங்கையில் இன்னுமொரு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இறுதியாகப் பார்த்தால் இது சிங்கள தேசத்தின் ஆட்சிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலே என்பதற்குக் கடந்த கால நாடாளுமன்றத் தேர்தல்கள் மட்டுமல்லாமல், இந்தத் தேர்தலில் சிங்களக் கட்சிகளும் கூட்டணிகளும் எடுத்துள்ள நிலைப்பாடுகளும் சான்றுகளாக உள்ளன.

 தமிழர்களுக்குள்ள சிக்கலை சிறுபான்மையினரின் சிக்கலாகச் சித்திரிக்கும் கொள்கைகள், அறிந்தோ அறியாமலோ, சிங்களப் பேரினவாதத்துக்கே துணைபோகின்றன. இது ஒரு தேசிய இனச் சிக்கல் என்பதையும், இலங்கைத் தீவில் வாழும் இரு தேசங்களுக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு சனநாயக முறையில் - அதாவது முழுமையான சமத்துவம், தன்-தீர்வுரிமை என்ற அடிப்படையில் - தீர்வு காணப்படாத வரை இரு தேசங்களுக்கும் பொதுவான சனநாயக நாடாளுமன்றம் என்பது வெறுங்கனவே. 

சிறிலங்கா நாடாளுமன்றம் என்பது தமிழர்கள் மீதான தேசிய ஒடுக்குமுறையின் இன்னுமொரு கருவியே தவிர வேறன்று. வரவிருக்கும் தேர்தலில் எந்தக் கட்சி அல்லது கூட்டணி வென்றாலும், யார் பிரதமரானாலும், இந்த அடிப்படை மெய்ந்நடப்பு மாறப் போவதில்லை. 

இலங்கையின் சிங்கள பௌத்த ஒற்றையாட்சி அரசமைப்பு, பௌத்த பிக்குகளின் செல்வாக்கு, தமிழ்ப் பகுதிகளில் தொடர்ந்து வரும் சிங்களப் படையிருப்பு, சிங்கள மக்கள்திரளின் மனப்போக்கு ... இந்தக் காரணிகளை எல்லாம் விலக்கிப் பார்த்தாலும், வெறும் எண்ணிக்கைக் கணக்கே சிங்களப் பேரினவாதத்தின் வெற்றியையும் தமிழர்களின் கையறு நிலையையும் உறுதிசெய்யப் போதுமானது. 

இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர் தொகை 225 என்பதையும், வடக்கு கிழக்கிலிருந்து 20 உறுப்பினர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதையும், பிறபகுதித் தமிழர்கள், மலையகம், முசுலிம் தமிழர் போன்றவர்களைச் சேர்த்தாலும் சிங்களரின் முரட்டுப் பெரும்பான்மையை நெருங்கக் கூட  வழியில்லை என்பதையும் மறக்கக் கூடாது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தல் வாயிலாகத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருவதாக யார் சொன்னாலும் அது பொய்மை தோய்ந்த மோசடியே தவிர வேறன்று. அரசியல் தீர்வுக்கான போராட்டத்துக்கு இந்தத் தேர்தலையும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம் என்று சொன்னால் அது கருதிப் பார்க்கத் தக்கது எனலாம். 

ஒரே சரியான அரசியல் தீர்வுக்காக நாம் போராட வேண்டுமே தவிர, ஏதோ ஓர் அரசியல் தீர்வுக்காக அல்ல. 

அரசியல் என்பது சாத்தியமானவற்றின் கலை (Politics is the art of the possible) என்பது சந்தர்ப்பவாதத்தின் புலம்பல். அரசியல் என்பது சாத்தியமல்லாதவற்றைச் சாத்தியமாக்கும் கலை என்பது போராட்டக்காரர்களின் முழக்கம். எது சாத்தியம் என்பதன்று, எது தேவை என்பதே முதல் வினா. 

தேவையானதை சாத்தியப்படுத்த மக்கள்சக்தியால் இயலும். இந்த மக்கள்சக்தியைத் திரட்டிக் களம் காண்பதே  அறஞ்சார்ந்த  போராட்ட அரசியல். சாத்தியமானவற்றை மட்டும் செய்வது என்பதன் பொருள் தொடர்ந்து அடிமைகளாகவே இருப்பது, விடுதலைக்கும் நீதிக்குமாகப் போராட மறுப்பது என்பதே. 


தமிழீழ மக்களின் வரலாற்று வழிவந்த அடிப்படை அரசியல் பேரவாக்களை நிறைவு செய்யாத எதையும் அரசியல் தீர்வு என்று ஏற்க முடியாது. ஈழத் தமிழர்கள் ஒரு தேசம் என்பதும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதும், தமிழீழ மக்கள் தன்-தீர்வுரிமைக்கு (சுயநிர்ணய உரிமைக்கு) உரித்துடையவர்கள் என்பதும் எந்நிலையிலும் விட்டுக் கொடுக்க முடியாத உண்மைகள். 

தனிநாடு கேட்பதற்கு அரசமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டம் தடையாக இருக்குமானால், ஆறாம் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கும், கைவிடக் கோருவதற்கும் தடையாக இருப்பது எந்தச் சட்டம்? ஒன்றுபட்ட இலங்கையை ஒப்புக் கொள்ளக்கூடிய கட்டாயம் இருப்பதாகக் கொண்டால் கூட, ஒற்றையாட்சி இலங்கையை எதிர்ப்பதில் என்ன சங்கடம்? 

தமிழீழ விடுதலைப் போராட்டம் வரலாற்றின் இப்போதைய கட்டத்தில் ஈடுசெய் நீதிக்கான போராட்டமாக வடிவெடுத்துள்ளது. நடந்தது இனக்கொலை, தொடர்வது கட்டமைப்பியல் இனக்கொலை என்ற உண்மைகளை நாமே தெளிவாகச் சொன்னால்தான் எதிர்காலத்திலாவது உலகம் அதை ஒப்புக்கொள்ள வாய்ப்புண்டு.

 இனக்கொலைக் குற்றத்துக்குப் பன்னாட்டுப் புலனாய்வு, பன்னாட்டுப் பொறியமைவு,  பன்னாட்டு நீதிமன்ற அல்லது தனித் தீர்ப்பாய உசாவல் என்ற நீதிக் கோரிக்கைகளைத் தளர்த்திக் கொள்ளவோ தணித்துக் கொள்ளவோ முடியாது. இவ்வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னின்று நடத்தி வரும் கையொப்ப இயக்கம் ஒரு சீரிய முயற்சி. 
இவ்வாறான பகைப்புலத்தில்... 

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலால் உருப்படியாக விளையப் போகும் நன்மை ஒன்றுமில்லை என்ற அடிப்படையில் தேர்தலைப் புறக்கணிப்பதுதான் இயல்பான முடிவாக இருக்கும். ஆனால் தாயகத்தில் ஒரு திறமான புறக்கணிப்பு இயக்கத்தை நடத்தக் கூடிய  அமைப்பேதும் இப்போதில்லை என்பதையும், தமிழ் மக்களின் நிலைப்பாட்டை உலகத்திற்கு உணர்த்தவும் சந்தர்ப்பவாத சரணாகதி ஆற்றல்களை அம்பலப்படுத்தவும் தேர்தல் களம் ஓரளவு வாய்ப்பு வழங்குவதையும்   கருதி, விடுதலைக்கும் நீதிக்குமாகப் போராடும் ஆற்றல்களை வலுப்படுத்தும் வகையில் தமிழீழ மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தலாம் என்பது எம் நிலைப்பாடு. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் அறிக்கை மூன்று முகாமையான கூறுகளை முன்னிறுத்துவது வரவேற்கத்தக்கது: 

1) தமிழர்கள் ஒரு தேசம் என்பதே அடிப்படை. இதனடிப்படையில்தான் அரசியல் தீர்வு காண இயலும். தன்-தீர்வுரிமையை செயலாக்கும் விதத்தில் பொது வாக்கெடுப்பு நடைபெற வேண்டும்


2) கோரிக்கைகளை அடைவதற்குப் போராட்டமே முதன்மை வழிமுறை.


3) இனக் கொலைக் குற்றத்துக்குப் பன்னாட்டுப் புலனாய்வு, பன்னாட்டுப் பொறியமைவு தேவை. 
  
இதே கூறுகளை வலியுறுத்திப் போட்டியிடும் வேறு அமைப்புகளும் தனி வேட்பாளர்களும் கூட இருக்கலாம். வாக்களிப்பதானால், எவ்வித நிலைப்பாடுகளின் அடிப்படையில் வாக்களிக்கலாம் என்று நம்மால் சுட்ட முடியுமே தவிர இன்ன கட்சிக்கு அல்லது இன்ன வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று வேண்டிக் கொள்ள முடியாது. 
தமிழகத் தேர்தலில் நாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தமிழீழ இயக்கமேதும் வேண்டுகோள் விடுப்பது முறையன்று. இலங்கைத் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்வதும் முறையன்று என நம்புகிறோம். சொல்லளவிலும் செயலளவிலும்  தமிழீழ விடுதலைக்கும் நீதிக்குமான போராட்டத்தில் உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பவர்களை இனங்கண்டு அவர்களுக்கு சனநாயகக் கட்டளை பிறப்பிப்பது தமிழீழ வாக்காளர்களைப் பொறுத்தது.

தியாகு 
ஆசிரியர், தமிழ்த் தேசம். 
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
சென்னை, 13.08.2015


« PREV
NEXT »

No comments