Latest News

August 13, 2015

சுயநிர்ணய தமிழர் தேசத்தை வலியுறுத்துபவர்களை தெரிவு செய்யுங்கள் பிரித்தானிய தமிழர் பேரவை
by admin - 0

எதிர்வரும் 17 ஆகஸ்ட் 2015 இல் இலங்கையில் மேலும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் இடம் பெறுகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இத் தேர்தல்கள் அர்த்தமற்ற நிகழ்வுகளாகவே இருந்து வந்துள்ளன. சிங்கள மேலாதிக்கம் ஓங்கும் இப் பாராளுமன்றம் சனநாயகப் போர்வையில் தமிழர் தேசியத்தின் அத்திவாரத்தையே அழித்தொழிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வந்திருக்கின்றது. இதே பாராளுமன்றமே எமது மக்கள் மீது மீண்டும் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்புத் தாக்குதல்களை முடுக்கி விட்டிருக்கின்றது. 

70,000ற்கும் மேற்பட்ட எம் மக்களை காவு கொண்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்புத் தாக்குதலுக்கான ஆணையை வழங்கியதும் இதே பாராளுமன்றமே. எமது பாரம்பரிய தாயக மண்ணை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் சிதைத்தொழிக்கும் செயலையும் இப் பாராளுமன்றமே நிறைவேற்றி வந்திருக்கின்றது. எம் மக்களின் மேல் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும் அநீதிகளுக்கும் நீதி கிடைப்பதற்கு தடையாக இருப்பதும் இதே பாராளுமன்றமே. 

1948ஆம் ஆண்டு தொட்டு தமிழ் மக்கள் இப் பாராளுமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி வந்திருக்கின்றார்கள். சிங்கள மேலாதிக்கம் ஓங்கும் இப் பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள் எதையுமே சாதிக்க முடியவில்லை. தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள மேலாதிக்கம் முற்றிலும் புறக்கணித்தே வந்திருக்கின்றது. இலங்கை அரசியலில் தமிழர் தலைமைகளுக்கும் சிங்களத் தலைமைகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டு பின் கிழித்தெறியப்பட்ட உடன்படிக்கைகள் ஏராளம். 

இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனத்தை ஒரு சம பங்காளியாக ஏற்க சிங்கள தேசம் மறுத்து வருகின்றது. மாறாக தமிழ் தேசியத்தின் அத்திவாரத்தையே தகர்த்தழிக்கும் செயற்பாடுகளில் சிங்கள தேசம் முனைப்புடன் ஈடுபடுகின்றது. 

இத் தேர்தலில் போட்டியிடும் சிங்களக் கட்சிகள் எதுவும் தமிழர் தேசியப் பிரச்சினை பற்றியோ அல்லது அதிகாரப் பகிர்வு பற்றிய தமது கொள்கைகளையோ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவில்லை. சிங்கள வாக்குகளை இழக்க நேரிடும் என்ற பயமே இதற்கான காரணம் ஆகும். சிங்கள தேசம் தமிழர் தேசத்துடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு தயாராகவில்லை என்பதையே இது கோடிட்டுக் காட்டுகின்றது. 

மேற்குறிப்பிட்ட ஒரு பின்னணியிலேயே தமிழ் மக்கள் சிங்கள மேலாதிக்கப் பாராளுமன்றத்திற்கான தேர்தலை எதிர்கொள்கின்றார்கள். இந்த இன அழிப்புச் சிங்கள அரசின் கீழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பேரபாயத்தை உணரத் தொடங்கியிருக்கும் சர்வதேச சமூகம் இந்தத் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. 

சிங்கள தேசம் தமிழின அழிப்பை தொடரும்போது தமிழ் மக்கள் வாழாதிருக்க மாட்டார்கள் என்ற தெளிவான செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்ப வேண்டிய தருணமிது. எமது உயிர்களுக்கும் எம் மண்ணுக்கும் எம் வாழ்வாதாரங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இன அழிப்பு சிங்கள தேசத்திடமிருந்து எம்மைப் பாதுகாக்கவும் எமது எதிர்காலத்தை நாமே நிர்ணயிக்கவும் வேண்டிய அவசியத்தை சர்வதேச சமூகத்திற்கு நாம் உணர்த்துவோம். 

இனவழிப்புச் சிங்கள தேசத்திடமிருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாப்பதில் நேர்மையாகவும் உறுதியுடனும் இருக்கும் பிரதிநிதிகளை தமிழ் மக்கள் தெரிவு செய்தல் இன்றியமையாதது. தம் மக்களின் மேல் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு அனைத்துலக மன்றத்தில் நீதி கோரும் நடவடிக்கைகளில் தம் பிரதிநிதிகள் செயல்பட வேண்டுமென்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. வெறுமனே பாராளுமன்ற கதிரைகளை நிரப்பும் பணிகளை விடுத்து மக்களை அணி திரட்டி எமது விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் பிரதிநிதிகளையே தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றார்கள். 

எமது மக்கள் எதிர்நோக்கும் வாழ்வபாயத்தைச் சிறிதும் உணராத சக்திகளுக்குப் பணியாத தைரியமுள்ள தலைமைகளையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். 

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையே சர்வதேச சனநாயக சமூகம் சட்டபூர்வமான மக்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்கின்றது. எனவே தமிழ் மக்கள் எமது விடுதலையில் உறுதியுடன் இருக்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்வது அத்தியாவசியம் ஆகும். சர்வதேச அரசியல் போக்குகளைப் புரிந்து கொண்டு சர்வதேச சமூகத்தை எம் விடுதலையின்பால் வென்றெடுக்கும் சாதுரியமுள்ளவர்களையே எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும். 

அதிவேகத்தில் நடந்து வரும் இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கையினால் தமிழ் மக்களின் இருப்பு பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

அரசியல் தீர்வொன்றிற்கான அடிப்படைகள் 

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்காக எமது மூத்த தலைவர்கள் முன்மொழிந்த  பின்வரும் மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை நாமும் வலியுறுத்துகின்றோம்.

1. தமிழர் தேசத்தை அங்கீகரித்தல்.
2. வடக்கு கிழக்கு தமிழரின் பாரம்பரிய தாயக பூமியாக ஏற்றுக் கொள்ளல்.
3. தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளல்.

சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வழி செய்யுமென்று தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றார்கள். உள்ளக விசாரணையோ அல்லது உள்ளகக்  கலப்புப் பொறிமுறையோ வெறும் கண் துடைப்பாக  அமைவது மட்டுமல்லாது குற்றவியல்  சாட்சியங்களை பேராபத்திற்கு உள்ளாக்கும் என்பதனால் தமிழ் மக்கள் இப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றார்கள்.

இராணுவத்தை வெளியேற்றல் 
உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழ் மக்கள் பாரிய ராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளக்கப்பட்டுள்ளனர். போர் முடிவக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அடித்தளங்களை தகர்த்தெரிவதற்கு  சிங்கள ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கை அரசின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு சிங்கள ராணுவமனது விவசாயம்இ வர்த்தகம் இ சுற்றுலா போன்ற பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சட்டத்திற்கு முரணாக துப்பாக்கி முனையில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. எமது மக்களின் வீடுகளையும் நிலங்களையும்  தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்குள் வைத்து  அவர்களை இடம்பெயர் முகாம்களுக்குள் தள்ளி நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்க வைத்துள்ளது. எம் தாயக பூமியில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் தமிழ் பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர். தமிழர் தேசத்தின் சமூக கட்டமைப்பை நிர்மூலமாக்கும் இலங்கை அரசின்  மூலோபாயத்தின் ஒரு அம்சமாக சிங்கள ராணுவம் எம் தாயகப்பகுதியில்  போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. 

தெரிவு செயப்படும் பிரதிநிதிகள் மேற்ப்படி பாதிப்புக்குள்ளான மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கி வழி நடத்தவேண்டும்.

தமிழ் தேசிய பொருளாதாரம் 
எம் தாயகத்தில் எம் மக்களின் சமூகஇ பொருளாதார மற்றும் மருத்துவ தேவைகளை கண்டறியும் முகமாக ஒருங்கிணைக்கப்பட்ட தேவைகள் மதிப்பீட்டாய்வினை செய்ய விடாது ஸ்ரீலங்கா அரச தடுத்துவருகின்றது. இவ் ஆய்வினைச் செய்து முடிப்பதற்கும்  தமிழர் தாயகத்தின் பொருளாதரத்தை மீள கட்டியெழுப்பி பேணுவதற்கு தேவைப்படும்  வெளிநாட்டு நேரடி முதலீட்டு வழிமுறைகளை திறந்து விடுவதற்கும்  தெரிவு செயப்பட்டிருக்கும் தமிழ் பிரதிநிதிகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

அரசியல் தீர்வுக்கு அடிப்படை கோட்பாடுகளில் உறுதியாக நிற்கும் அதேநேரத்தில் இராணுவமயமாக்கல்இ போதைப்பொருள் பாவனைஇ வேலைவாய்ப்பின்மைஇ தமிழ் தேச பொருளாதார மீளமைப்பு போன்ற விடயங்களை சரியாகக் கையாளக்கூடியவர்களையே தமிழ் மக்கள் தெரிவு செய்வார்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை எதிபார்க்கிறது. 

சிங்கள மேலாதிக்க பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள் பெரிய மாற்றங்களை செய்ய முடியாவிட்டாலும்இ அவர்கள் சர்வதேச அரங்கில் தமிழ் மக்களிடமிருந்து வேறு பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமைக்காக செயல் படுவதும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை கொடுப்பதும் அவசியமானதாகும். மேற்படி காரணங்களுக்காக தகுதியுள்ள ஒவ்வொரு தமிழர் வாக்காளர்களும்  தமது வாக்குரிமைகளை சரியான முறையில் பயன்படுத்துவர் என எதிர்பாக்கிறோம். 

நீதிக்கும் சுயநிர்ணய உரிமைக்குமான புலம் பெயர் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் குரலுக்கு வலுச்சேர்க்கும் முகமாக தமது வாக்குரிமைகளை பயன்படுத்துமாறு தாயகத்தில் வாழும் எம் உறவுகளை வேண்டிக் கொள்கிறோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை

« PREV
NEXT »

No comments