Latest News

August 26, 2015

தமிழரசுக் கட்சியின் முடிவு தர்மத்திற்கு முரணானது-சுரேஷ்
by admin - 0



தமிழரசுக் கட்சியின் முடிவு தர்மத்திற்கு முரணானது யாழ் நீர்வேலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும்போதே சுரேஷ். க.பிறேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

26.08.2015 புதன்கிழமை காலை மேற்படி அலுவலகத்தில் தேர்தலில் தமக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிதெரிவித்தும் தமிழரசுக் கட்சியின் முடிவு குறித்தும் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் கூறியதாவது: 


பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக சிலவிடயங்களைச் சொல்ல வேண்டியதேவை எனக்கிருக்கின்றது.

 ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகளின் கூட்டாக இருக்கின்றது. வெளியுலகத்தைப் பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் என்னும் நான்கு அமைப்புக்களைக் கொண்ட கூட்டாக இருக்கின்றது. தேர்தலில் நாங்கள் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டபோதிலும்கூட நாங்கள் அந்த அடிப்படையிலேயே போட்டியிட்டோம்.


இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி எட்டு ஆசனங்களையும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தலா இரண்டு ஆசனங்கள்வீதம் ஆறு ஆசனங்களையும் பெற்றுள்ளனர். ஆகவே, எமது மக்கள் ஒரு கட்சியை மாத்திரம் தெரிவு செய்யவில்லை.

மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தினது உறுப்பினரக்ளையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆகவே கூட்டமைப்பு என்பதற்கு மக்கள் கொடுக்கக்கூடிய அந்தக் கௌரவத்தை அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
கூட்டமைப்பு என்பது அனைத்து விடயங்களிலும் கூட்டாக இயங்க வேண்டும். 

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம், இதனை நடைமுறைப்படுத்துவது போன்ற அனைத்து விடயங்களிலுமே கூட்டமைப்பு ஒற்றுமையாகச் செயற்படவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அதேபோல, கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அங்கத்தவரைத் தெரிவு செய்யும்போதும், கூட்டாக கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். மக்களும் அதனையே விரும்புகின்றனர்.

அத்தகைய முடிவை தனியொரு கட்சி மேற்கொள்வது சரியான வழிமுறையல்ல. தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்குப் போட்டியிடுவதற்குக் குறைந்த ஆசனங்களே ஒதுக்கப்பட்டபோதிலும் ஆறு ஆசனங்களில் வெற்றியீட்டுள்ளோம்.

கூடுதலான இடங்களில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி மேலதிகமாக இரண்டு ஆசனங்களுடன் எட்டு ஆசனங்களில் மட்டுமே வெற்றியீட்டியுள்ளது.

ஆகவே, எமது மக்கள் கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அதன் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்தவர்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள். 

ஆகவே, எமது மக்கள் மிகத் தெளிவாக ஆணையை வழங்கியுள்ளபோது முடிவுகளை மேற்கொள்ளும்போதும் கூட்டமைப்பாக முடிவுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் மக்களுக்கும் எம்மீது நம்பிக்கை ஏற்படும். அங்கத்துவக் கட்சிகளுக்கும் நம்பிக்கை ஏற்படும். அவ்வாறில்லாமல் ஒரு கட்சி தானாக முடிவுகளை எடுப்பதென்பது அனைத்து நம்பிக்கைகளையும் சீர்குலைக்கும் விடயமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.


தேசியப் பட்டியல் தெரிவு தொடர்பாக பல்வேறுபட்ட புள்ளிகளின் அடிப்படையிலும், பல்வேறு காரணிகளை முன்னிறுத்தியே நாங்கள் இந்த முடிவுகளை எடுத்தோம் என்னும் ஒரு கருத்தும் நிலவுகிறது. 

அதன் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தில் ஒரு பெண் உறுப்பினரும் இல்லை ஆகவே ஒரு பெண் உறுப்பினர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்றும் நான் கொழும்பில் இருந்து பணியாற்ற வேண்டியுள்ளது. ஆகவே, திருமலையில் எனது வேலைகளைக் கவனிப்பதற்கு ஒருவர் தேவை என்று சொல்லப்பட்டது.
இவைகள் எதற்கும் நாங்கள் எதிரானவர்களல்ல. 

பெண் பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்பதற்கு நாங்கள் எதிரானவர்களல்ல. இவையனைத்தையும் நாங்கள் வரவேற்கின்ற அதேவேளை, ஒரு விடயத்தை நாங்கள் கவனமாகப் பார்க்கவேண்டும். 1989ஆம் ஆண்டு திரு.அமிர்தலிங்கம் அவர்கள் தோல்வியுற்றபோது அவர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் அழைத்துவரப்பட்டார்.


இதைப்போன்றே, சிலசமயங்களில் இத்தேர்தலில் இன்னுமொரு கட்சியின் தலைவர் தோற்றிருப்பாராக இருந்தால் அவர் இந்தத் தேசியப் பட்டியலில் கொண்டுவரப்பட்டிருப்பாரா இல்லையா? சில சமயங்களில் மாவை சேனாதிராஜாபோன்ற தலைவர்களில் யாராவது ஒருவர் தோல்வியுற்றிருந்தால் அவர் இந்தத் தேசியப் பட்டியல் மூலம் கொண்டுவரப்பட்டிருப்பாரா இல்லையா? 

அவ்வாறில்லையெனில், அதற்கும் இவ்வாறான காரணங்கள் கூறப்பட்டிருக்குமா என்பதும் ஒரு கேள்வியாகவே இருக்கின்றது. தன்னிச்சையாக முடிவெடுத்து சில நியமனங்களை மேற்கொண்டதன் பின்னர் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது என்ற விடயம் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே நான் எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டியேற்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இப்பொழுது ஒரு முக்கியமான காலகட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். 

சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். உள்ளகப் பொறிமுறையொன்றைத்தான் நாங்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும் என்ற விடயத்தைக் கூறியிருக்கின்றார். ஆனால் அதேசமயம் தேர்தல்காலத்தில் சகல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் நான் உள்ளிட்ட திரு சேனாதிராஜா, திரு.சுமந்திரன், மற்றும் சில கட்சிப் பிரமுகர்கள் உள்ளக விசாரணை என்பது எந்த விதத்திலும் தமிழ் மக்களாhல் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

ஆகவே ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் ஒட்டுமொத்த விடுதலையை நோக்கமாகக்கொண்டு நாங்கள் சில காத்திரமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சிலவேளை ஐ.நா. மற்றும் மேற்குலக நாடுகள் உள்ளக விசாரணையை நாங்கள் மேற்பார்வை செய்ய முடியும் எனவே அது குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனையை வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்யும் போன்ற உத்தரவாதங்களைக் கொடுப்பதாகக் கூறக்கூடும்.

ஆனால் இங்குள்ள யதார்த்தம் என்னவென்றால், இலங்கை அரசாங்கம் ஏதாவது ஒரு வகையில் ஒருமாதிரியான உள்ளக விசாரணைப் பொறிமுறையை உருவாக்கி, கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் சிலருக்கு தண்டனைகளை வழங்கலாமே தவிர, முக்கியக் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா என்பது முதலாவது கேள்வி. உள்ளக விசாரணை என்பது வெறுமனே ஓரிருவருக்குத் தண்டனை வழங்குவதாக மட்டுமே அமையும்.

ஒரு சர்வதேச விசாரணை என்பது இதற்கும் அப்பால் சென்று இந்தக் குற்றங்கள் உருவாவதற்கு அடிப்படைக்காரணம் என்ன? தமிழ் மக்களின் பிரச்சினைக்கான காரணங்கள் என்ன? இத்தகைய குற்றங்கள் இனிமேலும் ஏற்படாமல் எவ்வாறு தடுத்துநிறுத்துவது? அதற்கேற்ற வகையில் இலங்கையில் எவ்வாறு பிரச்சினைகளைத் தீர்ப்பது? போன்ற விடயங்களை ஒரு சர்வதேச விசாரணை மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும். உள்ளக விசாரணை தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவராது.
ஆகவே, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஐ.நாவின் உதவியுடன் சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டும். 

இத்தகைய விசாரணைகள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. யுத்தக்குற்றங்கள் நடைபெற்றுள்ள நாடுகளுக்கு எதிரான தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இலங்கையிலும் அத்தகைய தீர்ப்பாயத்தை ஐ.நாசபை ஆரம்பிப்பதனூடாக இத்தகைய குற்றங்கள் ஏன் இடம்பெற்றன? எதற்காக நடைபெற்றன? எவ்வாறு நடைபெற்றன? இனிமேல் இவ்வாறு நடக்காமல் எவ்வாறு தடுப்பது? அடிப்படைப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதுபோன்ற விடயங்கள் வெளிவரலாம்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் உறவுகள், தமிழ் மக்கள், சர்வதேச நாடுகள் ஆகிய அனைவரது அனுசரணையுடன் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நோக்கிப்போவதுதான் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். 

தெரிவு செய்து வந்திருக்கின்ற கூட்டமைப்பின் புதிய பாராளுமன்றக் குழு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு செயற்படவேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்ப்பது எமக்குள்ள முக்கியமான பணியாகும். அதுமட்டுமன்றி, நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி உடனடியாக முகங்கொடுக்க வேண்டிய பல பிரச்சினைகளும் இருக்கின்றது.
எமது மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. 

மீள்குடியேற்றத்திற்கு இராணுவம் தடையாக உள்ளது. எனவே அதனை முதலில் அப்புறப்படுத்த வேண்டும் என்பதுபோன்ற பல விடயங்கள் எமது தேர்தல் விஞ்ஞாகனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
கேள்வி: வருகை தந்திருக்கும் அமெரிக்கப் பிரதிநிதி நிஷாபிஸ்வால் அவர்கள் உள்ளக விசாரணையை ஊக்குவிப்பதற்காகவே வருகை தந்திருப்பதாகத் தெரிகிறது. 

இதுவரை காலமும் சர்வதேச பிரதிநிதிகளுடனான சந்திப்பில் நீங்கள் கலந்துகொண்டிருந்தீர்கள். ஆனால் இம்முறை நீங்கள் அழைக்கப்படவில்லையே?
பதில்: எனக்கு அழைப்பு வரவில்லை என்பது உண்மை. இதற்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச மட்ட சந்திப்புக்களுக்கு நான் அழைக்கப்பட்டபோது போயிருக்கின்றேன். 

இன்றைய சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தோ அல்லது அமெரிக்க தூதுவராலயத்திலிருந்தோ எனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. ஆகவே என்னால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. 

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு வேட்பாளனாகப் போட்டியிட்ட என வெற்றிக்காகவும் பலநூற்றுக்கணக்கானவர்கள் தமது நேரங்களை ஒதுக்கி அயராது பாடுபட்டுள்ளனர். 

இவர்களில் பல்வேறு இளைஞர்களும், யுவதிகளும், சங்கங்களும், எனது ஆதரவாளர்களும், உறவினர்களும் எமது கட்சித் தோழர்களும் நண்பர்களும் நலன்விரும்பிகளும் அடங்குவர்.
நான் எனது ஆசனத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டாலும்கூட, நான் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாடுபட்ட அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

விருப்பு வாக்குகளில் நான் பின்தள்ளப்பட்டபோதிலும்கூட என்னைப்போன்ற ஒருவனின் தேவை இன்றைய காலகட்டத்தில் பாராளுமன்றத்திற்குள் முக்கியமானது எனக் கருதி நான் பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்னும் தமது விருப்பத்தினை எனக்கு வாக்களித்தவர்களைவிடவும் வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற எமது மக்களில் அதிகமானோர் தெரிவித்திருந்தனர். 

இவர்களில் மீனவ சங்கங்கள், ஆசிரிய சங்கங்கள், உள்ளுராட்சி அமைப்புக்கள் போன்ற பல அமைப்புக்களும் சங்கங்களும் நேரடியாகவும் மாகாணசபை உறுப்பினரக்ள், நாடாளுமன்ற உறுப்பினரக்ள் போன்றவர்கம் அடங்குவர். 

இவர்கள் நான் பாராளுமன்றத்திற்குள் உள்வாங்கப்படவேண்டும் என்பதில் மிகவும் அக்கறை கொண்டிருந்தனர்.
அவர்களது அனைத்து முயற்சிகளும் தற்பொழுது ஓரங்கட்டுப்பட்டுவிட்டது. அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
« PREV
NEXT »

No comments