Latest News

August 24, 2015

சுரேஷின் கருத்துக்கு பதில் கூறத் தேவையில்லை-சம்பந்தர்
by Unknown - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களையும் சர்ச்சைகளையும் அதன் தலைவர் இரா.சம்பந்தர் புறந்தள்ளியுள்ளார்.

மிகவும் ஆழமாக சிந்தித்து விவாதித்த பிறகே கூட்டமைப்பின் சார்பில் துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது என சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சில கொள்கைகளின் அடிப்படையிலேயே அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு ஒவ்வொரு இடங்கள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது என்றும், கூட்டமைப்பின் சார்பில் பெண் ஒருவர் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் எனறும் முடிவு செய்யப்பட்டது என்றார் அவர்.

குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே சாந்தி தோல்வியடைந்திருந்தார் என்பதும், யாழ் தேர்தல் மாவட்டத்தைக் காட்டிலும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்த அளவுக்கே கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர் என்பதும் அவரது தேர்வுக்கு ஒரு காரணம் என்கிறார் சம்பந்தர்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களிலேயே மிகக் குறைவான உறுப்பினர்கள் தேர்வானாதால் அப்பகுதிக்கு ஒரு இடம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

சுரேஷுக்கு ஏன் இடமில்லை?

வட மாகாணத்துக்கான இடத்தை முடிவு செய்யும்போது யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்கனவே ஐந்து உறுப்பினர்கள் அங்கு தேர்வாகியுள்ள நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆறாவது இடத்தை தவற விட்டவரை புறந்தள்ளி அவருக்கும் குறைவான வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இடமளிப்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன என்கிறார் கூட்டமைப்பின் தலைவர்.

தேசியப் பட்டியல் நியமனங்கள் குறித்து கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவை விமர்சித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறுகிறார் சம்பந்தர்.
« PREV
NEXT »

No comments