Latest News

August 27, 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து : பொதுசன வாக்கெடுப்பு, அனைத்துலக விசாரணை குறித்து கவனம் செலுத்துக !
by Unknown - 0

சிங்கள அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிவகை சூட்டியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், அரசியற் தீர்வுக்குக்கான பொதுசன வாக்கெடுப்பு பொறிமுறை குறித்தும், அனைத்துலக விசாரணையின் அவசியம் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிக்கையின் முழுவடிவம் :

தமிழீழம் உள்ளடங்கலான தெரிவுகளை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே மக்களின் உண்மையான விருப்பு வெளிப்படுத்தப்படும்!
இம் மாதம் 17 ஆம் நாள் நடந்தேறிய சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகப் பகுதிகளில் வெற்றிவாகை சூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இத் தேர்தலில் நாம் கட்சிகளை ஆதரிக்கும் அணுகுமுறைக்கு மாறாகச் சில நிலைப்பாடுகளை மக்கள் முன்வைத்து அவற்றின் அடிப்படையில் தங்கள் வாக்குகளை வழங்குமாறு அவர்களைக் கோரியிருந்தோம். நாம் முன்வைத்த நிலைப்பாடுகளில் தமிழ் மக்கள் ஒரு பாரம்பரியத் தாயகத்தைக் கொண்ட, சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய தேசிய இனம் என்ற திம்புக் கோட்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கியிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பற்றிக் குறிப்பிட்ட தேர்தல் அறிக்கையில் அனைத்துலக விசாரணை என்பது வலியுறுத்தப்படாவிடினும் தேர்தல் பரப்புரைகளில் கூட்டமைப்பு வேட்பாளர்களால் அனைத்துலக விசாரணை வலியுறுத்துப்பட்டிருந்தது. நாம் குறிப்பிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை இத் தருணத்தில் கூட்டமைப்புத் தலைவர்களிடம் வேண்டிக் கொள்கிறோம்.

அதேவேளை இத் தேர்தல் தொடர்பாக இன்னும் சில விடயங்களை நாம் சுட்டிக்காட்ட வேண்டியதாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையின் ஊடாக மக்களிடம் தாம் முன்வைக்கும் திட்டங்களுக்கு ஆணையைக் கோரியிருந்தது. தமக்குப் புதியதோர் ஆணை தேவைப்படுவதாகவும் கூட்டமைப்புத் தலைவர்கள் சிலர் தேர்தல் பரப்புரைகளில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனால் தமக்கென ஒரு அரசு அமைக்கும் பெருவிருப்பை வெளிப்படுத்திய 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் வெளிவந்த மக்கள் ஆணையை நடைபெற்று முடிந்த தேர்தலின் ஊடாக மக்கள் நிராகரித்து விட்டார்கள் எனத் தேர்தல் வெற்றிக்கு அர்த்தம் கொடுக்க முற்படுவது தவறானது என்பதனை நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

1977ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 6வது திருத்தச் சட்டம் தமிழ் மக்கள் அரசமைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்துவதைத் தடை செய்கிறது. தமது அரசியல் உரிமைகளுக்காகக் போராடும் ஈழத் தமிழர் தேசம், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எதுவாக இருக்க முடியும் என்பதனைச் சுதந்திரமாக கருத்தளவில் கூட வெளிப்படுத்த முடியாத, விவாதிக்க முடியாத ஒரு சூழலே 6வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. அரசயிலமைப்பின் 6வது திருத்தம் நீக்கப்பட்டதொரு சூழலில், தமக்கான சுதந்திரமும் இறைமையும் கொண்ட அரசை அமைக்கும் விருப்பைத் தமிழ் மக்கள் வெளிப்படுத்தத் தவறும் பட்சத்தில் அதனைப் புதியதொரு ஆணையாகக் கொள்ளலாமே தவிர 6வது திருத்தச்சட்டத்தின் மூலம் மக்கள் விருப்பத்துக்கு பூட்டுப் போட்டதொரு சூழலில் நடைபெற்று முடிந்த தேர்தலை நாம் புதியதோர் ஆணையாகக் கருத முடியாது.

மேலும் 40,000 க்கும் அதிகமான மாவீரர்களும் இலட்சக் கணக்கில் மக்களும் தமது இன்னுயிரை ஆகுதியாக்கி தமிழ் மக்களுக்கான தனியரசு அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தமிழர் தாம் தலைமுறை தலைமுறையாக பின்பற்ற வேண்டிய ஆணையாக எம் முன்னே விட்டுச் சென்றுள்ளனர்.

6வது திருத்தம் நீக்கப்பட்டு இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாக தமிழீழம் உள்ளடங்கலான தெரிவை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பு அனைத்துலக சமூகத்தின் ஏற்பாட்டில் தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழர் தேசத்தவரிடம் நடாத்தப்படின் மட்டுமே மக்களின் உண்மையான விருப்பு வெளிப்படுத்தப் படுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

தமிழ் மக்கள் தனியரசு அமைக்கும் விருப்பைக் கைவிட்டு விட்டார்கள் என்று கூறும் சிறிலங்கா அரசு மற்றும் அனைத்துலக சமூகம் உட்பட்ட எவருக்கும் நாம் கூற விரும்பும் பதில் இதுதான். நாம் கோருவது போல தமிழீழம் உள்ளடங்கலாகப் பல்வேறு தீர்வுமுறைகளை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்புக்கு முன் வாருங்கள். மக்கள் தமது தீர்ப்பை வழங்கட்டும். மக்கள் வழங்கும் எந்த முடிவுக்கும் தலைவணங்க நாம் தயராகவே உள்ளோம்.

நாம் இதனை இங்கு குறிப்பிடுவது நடைபெற்று முடிவடைந்த தேர்தலைக் காரணமாக வைத்து மக்கள் தனியரசு அமைக்கும் விருப்பை நிராகரித்து விட்டார்கள் என்ற முடிவுக்;கு யாரும் போகக்கூடாது என்பதனை வலியுறுத்தவே. மேலும் சிறிலங்காவின் சிங்கள பேரினவாத அரச கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் இனஅழிப்புக்கு உட்படாமல் வாழ முடியாது. பாதுகாப்பாக வாழ முடியாது. சமத்துமாகவும் கௌரவமாகவும் வாழ முடியாது. அனைத்துலகச் சட்டங்களுக்கு உட்பட்ட சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது அரசியல் தலைவிதியினைத் தாமே நிர்ணயித்தவாறு வாழ முடியாது.

தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்று சமத்துவமாக நடத்துவதற்குப் புதிய ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்பதனை அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்த அரச கட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் ஊடாகப் பேரம் பேசும் சக்தி தமிழ் மக்களுக்குக் கிஞ்சித்தும் கிட்டப் போவதில்லை. சிங்களத் தலைவர்களின் கருணையினால் சில சலுகைகள் கிடைக்கலாமேயன்றி ஒரு தேசிய இனத்துக்குரிய உரிமைகளெதுவும் கிடைக்கப் போதில்லை.

இத்தகைய சூழலில் கூட்டமைப்புத் தலைவர்கள் தாம் மக்களிடம் தேர்தல் அறிக்கையூடாகவும் தேர்தல் பரப்புரைகள் ஊடாகவும் முன்வைத்த நிலைப்பாடுகளின் அடிப்படையிலான தீர்வுகள் எதனையும் அடைவது சாத்தியமாகப் போவதில்லை. இந்த நிலை தமிழ் மக்களதும் மாவீரர்களதும் அரசமைக்கும் கனவுக்கு வலுச் சேர்க்கும் என்றே நாம் நம்புகிறோம்.

இதனால் நடைமுறைச் சாத்தியம் என்ற பெயரில் எந்தவிதமான அரைகுறைத் தீர்வுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்மதம் வழங்கக்கூடாது என்பதனை நாம் இத் தருணத்தில் வலியுறுத்த விரும்புகிறோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் அனைத்துலக விசாரணை கோரப்படாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைகளின்போது மக்களுக்குத் தெரிவித்தவாறு அனைத்துலக விசாரணையைக் கோர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். நாம் முன்னெடுத்து வரும் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றுக்கு முன்னால் நிறுத்துமாறு மேற்கொள்ளும் மில்லியன் கையெழுத்து இயக்கத்தில் பரப்புரைகள் ஏதுமின்றி ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தாயகத்தில் இருந்து பங்குபற்றியிருக்கிறார்கள் என்பதனையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இவற்றை வலியுறுத்தும் அதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கை நிலையில் நின்றுகொண்டு நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் சார்ந்தும் எமக்கு உடன்பாடான விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கும், ஒத்துழைப்பு வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம் என்பதனையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments