Latest News

August 27, 2015

இலங்கை தமிழ் திரைப்படத்துறை மீது அவதூறு பரப்பும் சில இணையத்தளங்களின் வதந்திகள் குறித்த தெளிவுபடுத்தல்
by admin - 0

இலங்கை தமிழ் திரைப்படத்துறை மீது அவதூறு பரப்பும் சில இணையத்தளங்களின் வதந்திகள் குறித்த எமது தெளிவுபடுத்தல் !


கடந்த சில நாட்களாக இலங்கை தமிழ் திரைப்படத்துறை மீதும், திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மீதும் திட்டமிடப்பட்ட வகையில் நடத்தப்பட்டுவரும் இணைய வழி அவதூறு பிரச்சாரங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வு குறித்த எமது தரப்பு தெளிவுபடுத்தல்களை இந்த செய்தியினூடாக முன்வைக்க விரும்புகிறோம்.


திரைக்கலை மீது கொண்ட ஆர்வத்தாலும், எமது மக்களின் கதைகளை, வலிகளை திரைப்படங்களூடாக பொதுவெளிக்கு எடுத்துவரவேண்டும் என்ற அவாவுடனும் எம் இளைஞர்கள் கடந்த பல வருடங்களாக தமது கடின உழைப்பை அர்ப்பணித்து வருகிறார்கள். 


இப்படியானதொரு சூழ்நிலையில் ஒரு தனிநபரின் செய்கைகளின் பொருட்டு ஒட்டுமொத்த துறை மீதும் பழி சுமத்துவது நியாயமான செயற்பாடு அல்ல. ஓரிருவரின் தனிப்பட்ட செயற்பாடுகளின் காரணமாக ஓர் வளர்ந்துவரும் இளைஞர் சமூகத்தின் கனவுகளை, இலட்சியங்களை நிர்மூலமாக்குவது நாளைய எமது சமுதாயத்தை உருக்குலைக்கும் நடவடிக்கைக்கு ஒப்பானது. 



அண்மைக்காலங்களில்தான் மிகப்பெரியதொரு மனித உழைப்பை முதலிட்டு மெல்ல மெல்ல இலங்கை தமிழ் சினிமாத்துறை வளர்ச்சியடைந்து வருகிறது. சினிமா என்னும் வெகுஜன கலை மக்களிடையே செலுத்தக்கூடிய தாக்கத்தின் ஆழத்தை தெளிவாக புரிந்துகொண்டிருக்கும் ஒரு தரப்பினர் அத்தகையதொரு வளர்ச்சியினை இலங்கை தமிழ் சினிமா பெற்றுவிடக்கூடாது என்ற முனைப்போடு செயற்பட்டு வருகிறார்கள். 


அதன் ஒரு கட்டமாக, தனிநபர் ஒருவரின் செயற்பாட்டை முன்வைத்து ஒட்டுமொத்த திரைத்துறை மீதும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையான செய்திகளை இணையத்தளங்களூடாக திட்டமிட்டு வெளியிட்டு வருகிறார்கள். 
ஊடக தர்மத்துக்கு அப்பாற்பட்டு, மக்களின் அந்தரங்க விடயங்களை அநாகரிகமான முறைவில் பொதுவில் பகிர்ந்து அதனூடாக திரைத்துறை கலைஞர்கள் மீது அவதூறு ஏற்படுத்த முனையும் இவ் இணையத்தளங்களின் தரக்குறைவான நடவடிக்கைகளை நாம் கண்டிக்கிறோம். 


யார், எத்தகைய தடைகளை எம் திரைப்பயணத்தின் முன் ஏற்படுத்தினாலும் அவற்றை தகர்ப்பதோடு, எமது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றோடு இணைந்து எமது மக்களின் வலிகளையும், கதைகளையும் திரைப்படங்களூடாக உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் தளராது பயணிப்போம் என்பதையும் இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகிறோம். 


தனிப்பட்ட சில நபர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினையினை மையமாக கொண்டு ஒரு துறை சார்ந்த ஒட்டுமொத்த பேரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்க பொதுமக்களாகிய நீங்கள் துணைபோகமாட்டீர்கள் என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கை. இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் எமது சகோதரர்கள், மற்றும் ஊடகங்கள் இதுவரை காலமும் எம் இளைஞர்களுக்கும் அவர்களது திரைப்பட முயற்சிகளுக்கும் வழங்கி வந்த பேராதரவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுளோம். 


தொடர்ந்து அதே உதவியை வழங்குமாறும், தீய சக்திகளின் தடைகளை உடைத்தெறிய எம் கலைஞர்களுக்கு தோள் கொடுக்குமாறும் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். 


நன்றி
இலங்கை தமிழ் திரைத்துறை கலைஞர்கள்.

« PREV
NEXT »

No comments