Latest News

August 06, 2015

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
by Unknown - 0

கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் முதலில் ஆடிய அணிகளில், முதல் இன்னிங்ஸில் மிகக் குறைவான நேரத்தில் ஆட்டமிழந்த அணி எனும் பெயரை ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும், ஆஷஸ் தொடருக்கான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 60 ஓட்டங்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இவ்வளவு குறைவான ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் இந்த அதிரடி வீழ்ச்சிக்கு வித்திட்டவர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ராட்.

அவர் 15 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி , ஆஸி. அணியை நிலைகுலையச் செய்தார்.

முதல் ஓவரிலிருந்தே ஆஸி. அணி ஆட்டம் காண ஆரம்பித்தது. துவக்க ஆட்டக்காரர்களான ரோஜர்ஸ் மற்றும் வார்னர் இருவரும் ஓட்டம் ஏதும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினர்.

அடுத்து ஆடவந்த ஸ்மித்தும் மார்ஷும் அணியின் சரிவைத் தடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. ஸ்மித் ஆறு ஓட்டங்களும் மார்ஷ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

ப்ராடின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறிய ஆஸி. அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தன.

பின்னர் ஆட வந்தவர்கள் நிலையும் உள்ளே-வெளியே என்றே இருந்தது.
ஆஸி. அணிக்கு கிடைத்த அதிகபட்ட ஓட்டங்கள் உபரிகள் மூலமே கிடைத்த 14 ஓட்டங்களாகும்.

ஆஸி. அணியை கலங்கடித்த ஸ்டுவர்ட் ப்ராட் தனிப்பட்ட முறையில் மேலும் ஒரு மைல் கல்லை இன்று எட்டினார். இங்கிலாந்து அணியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஆஸி. அணியினர் 111 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டனர்.

« PREV
NEXT »

No comments