Latest News

August 06, 2015

விரிவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது!
by Unknown - 0

விரிவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய் எகிப்தில் இன்று போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டது. இந்த விரிவாக்கத்தின் மூலம் பிரதான கால்வாய் ஆழப்படுத்தப்பட்டிருப்பதோடு, அந்தக் கால்வாய்க்கு இணையாக 22 மைல் தூரத்திற்கு கூடுதல் கால்வாயும் வெட்டப்பட்டிருக்கிறது.

இதன் துவக்கவிழாவில் மேற்கொள்ளப்பட்ட கப்பல் பயணத்தில் எகிப்தின் அதிபர் அப்தேல் ஃபடா அல் - சிசியுடன் வெளிநாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமிட்டன.

சூயஸ் கால்வாயில் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தக் கால்வாயிலிருந்து வரும் வருவாய், தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என எகிப்து நம்புகிறது. ஆனால், நிபுணர்கள் இதனை முழுமையாக ஏற்கவில்லை.

எகிப்து எதிர்பார்க்கும் வருவாயை கொடுக்கும் அளவுக்கு உலக வர்த்தகம் வளரவில்லையென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த விரிவாக்கத்தினால் கால்வாயின் ஒரு பகுதியில் இரு வழிப்பாதையில் கப்பல்கள் செல்லமுடியும். பெரிய கப்பல்களும் இந்தக் கால்வாய் வழியாகச் செல்ல முடியும்.

புதிய கால்வாயை வெட்டும் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பாக, எகிப்து அதிபரின் உத்தரவின் பேரில் துவக்கப்பட்டது.

இஸ்மைலியா நகரில் நடந்த கால்வாயின் துவக்கவிழாவில், அதிபர் ராணுவ உடையில் காட்சியளித்தார். 1869ல் சூயல் கால்வாய் முதன் முதலாகத் திறக்கப்பட்டபோது, கால்வாயை முதன் முதலாகக் கடந்த எல்-மஹ்ருசா என்ற அதே கப்பலில் இன்றும் அதிபர் பயணம் செய்தார்.

ராணுவ அதிகாரியான அல் - சிசி கடந்த ஆண்டு, தேர்தல் மூலம் அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டார். இந்த விழாவில் பிரான்சின் அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்தும் ரஷ்யப் பிரதமர் திமித்ரி மெத்வதேவும் கலந்துகொண்டனர்.

எகிப்தின் தலைநகரான கெய்ரோவில், இந்தக் கால்வாயை "உலகிற்கான எகிப்தின் கொடை" என்று கூறும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த கால்வாய் விரிவாக்கத்தை, தேசத்தின் வெற்றியாக அரச ஆதரவு ஊடகங்கள் வர்ணிக்கின்றன. எகிப்தில் தொடர்ச்சியாக நிலையற்ற தன்மை நிலவிவரும் நிலையில், இந்த கால்வாய் திறக்கப்பட்டிருப்பது ஒரு திருப்புமுனை என்றும் அவை கூறுகின்றன.
« PREV
NEXT »

No comments