Latest News

August 19, 2015

தனக்குத்தானே குழிவெட்டி குப்புற கவிழ்ந்த ராஜபக்ச; விடியலை எதிர்நோக்கி ஈழத்தமிழர்கள்-மாலை மலர்
by Unknown - 0

இலங்கையில் நிச்சயம் ஒருநாள் ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அது விடுதலைப்புலிகளால் மட்டுமே சாத்தியமாகும் என்று எல்லோருமே நினைத்திருந்தனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தனி தமிழ் ஈழத்தை உருவாக்கியே தீருவார் என்றே உலக தமிழர்களால் உறுதியாக நம்பப்பட்டு வந்தது. இந்த நம்பிக்கைக்கும், எண்ணத்துக்கும் வேட்டு வைத்து.... துரோகிகளின் துணையோடு கொத்து கொத்தாக தமிழர்களை கொன்று குவித்தவர் ராஜபக்சே.

இலங்கையின் அரசியல் வரலாற்றில், இவரது ஆட்சி காலத்தில்தான் ஈழத்தமிழர்கள் தாங்க முடியாத துயரத்தை அனுபவித்தனர். விடுதலைப்புலிகளை எதிர்த்து பல ஆண்டுகளாக தன்னந்தனியாக போராடி தோற்றுப்போன இலங்கை அரசாங்கம் கடுமையான இழப்புகளையே தொடர்ந்து சந்தித்து வந்தது.

வீரத்தின் விருட்சங்களாக ஈழ மண்ணில் வேரூன்றி இருந்த விடுதலைப்புலிகளை ஒத்தைக்கு ஒத்தையாக நின்று போரிட்டு வெல்ல முடியாது என்ற நிலையே நீண்ட.... நெடுங்காலமாக இருந்து வந்தது.

இதனால், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு வலது கரம் போல இருந்த "துரோகி" கருணா உள்ளிட்டோரை விலைக்கு வாங்கிய ராஜபக்சே... இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் உதவியையும் நாடினார். இப்படி, துரோகிகளும், பல்வேறு நாடுகளும் செய்த உதவியை வைத்தே இலங்கையில் தமிழ் இனத்தை அழித்தவர் ராஜபக்சே. இதனால் ஈழ ஆதரவாளர்கள் அவருக்கு கொடுங்கோலன் என்றே பெயர் வைத்தனர்.

இன விடுதலைக்காக போராடிய ஒரு இனத்தையே ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்த ராஜபக்சே, அந்த விடுதலைப் போராட்டத்துக்கு வைத்த பெயர் தீவிரவாதம். இலங்கையை பொறுத்தவரையில் அதிபர் பதவியில் இருப்பவரே அதிகாரம் மிக்கவர். இதனையே தமிழர்களுக்கு எதிரான ஆயுதமாக மாற்றினார் ராஜபக்சே.

குறுக்கு வழியில் சென்று விடுதலைப்புலிகளை வீழ்த்தி.. பிரபாகரனையும் கொன்று விட்டதாக போட்டோக்களை வெளியிட்டு மார்தட்டிய அவர், ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் களம் இறங்கினார். மீண்டும் அதிபராகி மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களின் உயிரையும் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே ராஜபக்சே அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக அப்போது தமிழ் ஈழ ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

மீண்டும் அவர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விடக்கூடாது என்பதே உலக தமிழர்கள் அனைவரின் வேண்டுதலாகவும் இருந்தது.

இதற்கு பலன் அளிக்கும் வகையில், அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த சிறிசேனா, ராஜபக்சேவுக்கு எதிராக அதிபர் பதவிக்கு களம் இறங்கினார். ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்டோரின் ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்தார் அவர்.

ராஜபக்சேவின் தோல்வியை தமிழர்கள் அனைவருமே பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழகத்திலும் அப்போது கொண்டாட்டங்கள் களை கட்டியது. அதிபர் பதவியை இழந்த பின்னர், ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது ஊழல் புகார்கள் குவிந்தன. இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

அதிபர் பதவியைத்தான் மீண்டும் பிடிக்க முடியவில்லை. பிரதமர் பதவியிலாவது எப்படியும் அமர்ந்து விட வேண்டும் என்று ராஜபக்சே கனவு கண்டிருந்தார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில், அதிபராக அங்கம் வகித்தவர்கள் யாரும் ஒருபடி கீழே இறங்கி வந்து பிரதமர் பதவிக்கு போட்டியிட்டதில்லை. ஆனால் ராஜபக்சேவோ... பதவி ஆசையில் "கிடைத்தால் லாபம்..." என்று கணக்கு போட்டார்.

ஆனால் அது பொய்க்கணக்காகவே மாறிப்போனது. ரனில் விக்ரமசிங்கேவுடன் பிரதமர் வேட்பாளர் களத்தில் இருந்த ராஜபக்சே மண்ணை கவ்வி இருக்கிறார். இது இலங்கை அரசியலில் ராஜபக்சேவுக்கு கிடைத்த மரண அடியாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் அதிபர் தேர்தலில் தோல்வி... தற்போது பிரதமராகும் எண்ணமும் தவிடு பொடியானது..... போன்றவை இலங்கை அரசியல் களத்தில் ராஜபக்சேவுக்கு இறங்கு முகமாகவே மாறிப் போய் இருக்கிறது.

அவரது இந்த 2–வது சறுக்கலை ஒட்டு மொத்த தமிழினமும் கொண்டாட்டமாகவே பார்க்கிறது. மீண்டும் பதவிக்கு வந்து ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ராஜபக்சே ஈடுபட்டு விடுவாரோ என்கிற அச்சம் இதன் மூலம் நீங்கி உள்ளது.

ராஜபக்சேவின் அரசியல் வீழ்ச்சி... ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் நிச்சயம் எழுச்சியை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ரனில் விக்ரமசிங்கே, ராஜபக்சேவை போன்று கொடூர மனம் படைத்தவர் இல்லை. சிறிசேனா பதவிக்கு வந்த பின்னர் ஈழத் தமிழர்களுடன் நல்லுறவையே கடைபிடித்து வருகிறார். ரனிலின் நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்துள்ளது.

அதே நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெற்றிருக்கும் அபார வெற்றியும் சிங்களர்களை யோசனையுடன் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

எப்போதுமே... கெட்டது வீழ்ந்தால்தான் நல்லது நடக்கும் என்பார்கள்.

ராஜபக்சேவின் வீழ்ச்சி.... ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் இனியாவது ஒளியேற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம். தனக்குத் தானே குழிவெட்டி குப்புற கவிழ்ந்த ராஜபக்சே, விடியலை எதிர்நோக்கி ஈழத்தமிழர்கள்.

நன்றி மாலை மலர் 
« PREV
NEXT »

No comments