Latest News

August 19, 2015

இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அரசு உண்மையுடன் செயற்பட வேண்டும் – கொழும்பு பேராயர்
by Unknown - 0

இலங்கையின் வடகிழக்கு பகுதிகளிலுள்ள மக்களைப் பாதித்துவரும் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அரசு உண்மையுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும் என இலங்கை திருச்சபையின் கொழும்பு பேராயர் அதி வணக்கத்திற்குரிய டிலோராஜ் கனகசபை கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை பொதுத்தேர்தலின்போது மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்கு ஏற்ற வன்முறையற்ற சூழல் நிலவியதாக இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை திருச்சபையின் கொழும்பு பேராயர் அதி வணக்கத்திற்குரிய டிலோராஜ் கனகசபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக அமைதியான தேர்தல் அனுபவத்தை உணர முடிந்ததாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக நாட்டில் வியாபித்துவரும் பகைமையை ஏற்படுத்தும் உரை, வன்முறை, கோபம், கொலை, பழிவாங்கும் உணர்வு போன்றவற்றை தேசத்தின் பிரஜையாகிய தானும் அனுபவித்துள்ளதாக இலங்கை திருச்சபையின் கொழும்புப் பேராயர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தத் தேர்தலில் மக்கள் தமது சிந்தனையில் உதித்த முடிவினை வாக்குகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பிரஜைகள் சத்தமாகவும் தெளிவாகவும் வெளியிட்ட ஜனநாயகக் குரல்களை புதிய அரசாங்கம் தெளிவாக செவிமடுக்க வேண்டும் எனவும் பேராயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையர் என்ற பொது அடையாளத்தை நோக்கி பயணப்படவேண்டும் எனவும் கொழும்பு பேராயர் டிலோராஜ் கனகசபை கூறியுள்ளார்.

இலங்கையில் வாழும் அனைவருக்கும் தேசம் உரித்தானது எனவும், மாறாக ஓர் இனத்திற்கோ, மதத்திற்கோ, வகுப்பிற்கோ, சாதியினருக்கோ நாடு உரித்துடையது அல்லவெனவும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கமும் பாராளுமன்றமும் ஜனாதிபதியுடன் இணைந்து தேசத்தில் நிலவும் அனைத்து தடைகளையும் கடந்து சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் பேராயர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments