Latest News

August 08, 2015

இலங்கையில், விளையாட்டுத் துறையிலும் தடம் பதிக்கும் அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனம்.
by admin - 0

விளையாட்டுத் துறையிலும் தடம் பதிக்கும் அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனம்.

"அரும்புகள்" தனது இலவச மாலை நேரக் கல்விச் சேவையினை இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.

"அரும்புகள்" தனது கல்வி பயணத்தை தொடர்ந்து முதல் தடவையாக விளையாட்டு துறையிலும் தனது உதவி திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளது. 

அந்த வகையில் முதன்முறையாக.... 

இலங்கை மன்னார் மாவட்டத்தின் மடு வலயத்தில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய கிராமமான பெரிய குஞ்சுக்குளத்தில் வசித்து வருகின்ற செல்வன் எஸ். அஜந்தன் (வயது 16) என்ற மாணவனைத் தேர்ந்தெடுத்துள்ளது. இம்மாணவன் விளையாட்டுத் துறையில் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இம் மாணவன் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது விடா முயற்சியாலும், அயராத உழைப்பினாலும் இன்று சாதனை நாயகனாக மிளிர்ந்து வருகின்றார். 

கடந்த 12.07.2015 ஞாயிறு அன்று வவுனியாவில் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் 15 வயதுப்பிரிவில் கலந்துகொண்டு நீளம் பாய்தலில் முதலாம் இடத்தினை தன்வசப்படுத்தி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

இம்மாணவன் கல்வி கற்கும் பாடசாலையான மன்னார் பெரிய குஞ்சுக்குளத்தில் உள்ள றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் அரும்புகள் தனது மாலைநேர வகுப்புக்களை நடத்தி வரும் நிலையில், மாலைநேர வகுப்புக்களை மிகவும் சிறப்பாக நடாத்தி வருகின்ற இம்மாணவனின் ஆசிரியரான திரு. ரஞ்சிதன் அவர்களின் தெரிவின்படியே பொருளாதார நிலைமையினை அறிந்து அஜந்தனின் விளையாட்டுத் திறமையை ஊக்கப்படுத்த அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனம் முன்வந்தது.

அதன் முதற்கட்டமாக அஜந்தனுக்கு தேவையான துறைசார் பொருட்கள் பெற்றுக்கொள்வதற்கும் அஜந்தனின் எதிர்கால நலன்கருதியும் குறிப்பிட்ட தொகையினை வங்கியில் வைப்பு செய்வதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இம்மாணவனை கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த 30.07.3015 அன்று இவர் கல்வி கற்றுவரும் பாடசாலையிலேயே ஒரு சிறப்பு நிகழ்வுவொன்றை அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனம் நடாத்தியிருந்தது. 

இந்நிகழ்வில் அரும்புகளின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரும்புகளின் விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் உற்றார் உறவுகளுடன் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. 

இந்நிகழ்வில், "சாதனை நாயகன்" அஜந்தனை பலரும் வாழ்த்திப் பேசி இன்னும் பலபல சாதனைகள் படைக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினர். தொடர்ந்து இலங்கைக்காகன அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர், அஜந்தனிற்காக ஊக்கத் தொகையினை வழங்கி கௌரவப்படுத்தினார்.

மேலும், டென்மார்க்கில் வசித்து வரும் செல்வன் ப. நிரவிந்த் என்கின்ற சிறுவன், தனது பத்தாவது வயதில் சேவை மனம் கொண்டு தான் சிறுகச் சிறுக சேமித்த சேமிப்பில் இருந்து 15,000 இலங்கை ரூபாக்களை அஜந்தனின் விளையாட்டு துறை சார் ஊக்குவிப்புக்காக "அரும்புகள்" சார்பாக வழங்கியுள்ளார். 

நிரவிந்த் தனது சிறு வயதிலேயே இந்த அரிய பணியினை "அரும்புகளுடன்" இணைந்து செய்ய முன் வந்தமைக்கு அரும்புகள் தனது உறவுகள் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்ந்து கொள்ளும் அதேவேளை சிறு வயதிலேயே சேவை மனப்பான்மையுடன் வளர்த்து வந்துள்ள பெற்றோருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

அத்தோடு அஜந்தன் தொடர்ந்தும் தேசியமட்டத்திலும் வெற்றி வாகை சூடி மேலும் பெருமை சேர்க்க "அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனத்தோடு" நாமும் சேர்ந்து வாழ்த்துகின்றோம். 

அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனமானது "உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments