Latest News

August 20, 2015

கொள்கை ரீதியான இணக்கம் இருந்தால் மட்டுமே கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவோம்! -கஜேந்திரகுமார்
by admin - 0

கஜேந்திரகுமார்
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சமஷ்டித் தீர்வை எட்டுவதற்கு கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளுக்கு எமது ஒத்துழைப்பு இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போகும் பாதை வேறு என்பதை தேர்தல் காலத்தில் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

தேர்தலில் நாம் கணிசமான வாக்குகளைப் பெறவில்லை என்பதற்காக எமது இந்த நிலைப்பாட்டை நாம் மாற்றப் போவதில்லை. கொள்கை ரீதியான இணக்கப்பாடு இருந்தால் மட்டுமே கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் செயற்பட்ட தமது ஆதரவாளர்கள் மற்றும் வாக்களித்த மக்களிற்கான நன்றி தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று புதன்கிழமை (19.08.2015) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடக பேச்சாளர் மணிவண்ணன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இவ் ஊடக மாநாட்டில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்ததாவது:

மக்கள் எமக்கு வழங்கிய வாக்குகளுக்கு நேர்மையாக செயற்படுவோம் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். எமது அமைப்புக்காக தாயகத்தில் இருக்கக்கூடிய 5 தேர்தல் மாவட்டங்களிலும் செயற்பட்ட எமது கட்சி உறுப்பினர்களின் பணிக்கு நாம் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம்.
மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் பல சவால்களுக்கு மத்தியில், பல பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையிலே எமது கட்சி செயற்பாட்டாளர்களின் பணிக்கு எப்படி நன்றிசொல்வது எனத் தெரியவில்லை. தவிர, புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

கடந்த 5 வருடங்களாக புலம்பெயர்ந்த மக்கள் வழங்கிய நிதியுதவியின் ஊடாகவே நாம் இயங்கக்கூடியதாக இருந்தது. எமது நிலைப்பாட்டை ஏற்று, ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் அவர்கள் செய்த அத்தனை உதவிக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

மாற்றமொன்றிற்கான வாக்களிப்பாக இவவாக்களிப்பினை எதிர்பார்த்திருந்த போதும் அது முழுமை பெற்றிருக்கவில்லை. ஆனால் கடந்த தேர்தலை விட பெருமளவிலானோர் எமக்கு வாக்களித்துள்ளனர். வட-கிழக்கு எங்கும் முழுமையாக இம்முறை தேர்தலை நாம் எதிர்கொண்டிருந்தோம். எமது கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பல சவால்கள் இருந்தன.
ஆனாலும் 2010 ம் ஆண்டில் இருந்ததைவிட எமது அமைப்பு பலமடங்கு வளர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் எம்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு என்றே கருதுகிறோம்.

தமிழ்த் தேசியவாதம் முற்றுமுழுதாக அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்படுவதை தடுப்பதற்காகவே நாம் 2010 இல் இந்த அமைப்பை உருவாக்கினோம். தமிழ்த் தேசிய அடையாளமே எமது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது.

தமிழ்த் தேசத்தில் தற்போது ஒரு இனவழிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. யதார்த்தம் என்ற பெயரில் எமது அடிப்டைப் பிரச்சனைகளைக் கைவிட்டு வேறொரு பாதையை எடுப்பது இனப்பிரச்சனைக்கான ஓர் உண்மையான தீர்வல்ல.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் ஆணையைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
அதேவேளை, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படவேண்டும். அந்தத் தீர்வு ஒரு சமஷ்டித் தீர்வாக அமைவதற்கு நாம் ஆதரவளிப்போம் என்பதை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறோம். எந்தவிதத்திலும் தமிழ்த் தேசத்தின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு சமஷ்டித் தீர்வை எட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற எந்தவொரு முயற்சிக்கும் எம்முடைய ஒத்துழைப்பு அவர்களுக்கு இருக்கும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் மேடைகளிலும் ஒரு சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியிருக்கிறார்கள். தீம்புக் கோட்பாடுகளைத் தாண்டியும் செல்ல தயாரென கூறியிருக்கிறார்கள்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் அறிக்கை வெளிவர இருக்கிறது. இவ்வறிக்கை எவ்வகையாக அமைந்தாலும், இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணையை கூட்டமைப்பு வலியுறுத்துமாக இருந்தால் அதனையும் நாம் ஆதரிப்போம்.

எம்மைப் பொறுத்தவரை தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு அரசியல் தீர்வு கிடைத்தேயாக வேண்டும். அதேவேளை இனவழிப்பு தொடர்பிலும் ஒரு சர்வதேச விசாரணை அவசியம். இவ்விரண்டு விடயங்களும் பேரம் பேசும் விடயங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களாக இருக்கின்றன. எமது அமைப்பின் அடிப்படை நிலைப்பாடே அதுதான் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக மாநாட்டில் தெரிவித்தார்

« PREV
NEXT »

No comments