Latest News

August 08, 2015

குழந்தைகளை ஐசிஸிடம் கொண்டு போக முயன்றவர்களுக்கு ''கால்கட்டு''!
by Unknown - 0

சிரியாவில் இஸ்லாமிய அரசின் பகுதிக்குள் ஆபத்தான சூழ்நிலையில் தமது பிள்ளைகளை கொண்டு செல்ல முயற்சித்ததாக கூறப்படும் இரு குடும்பங்களின் வயதுவந்த உறுப்பினர்களுக்கு மின்னணு கண்காணிப்பு பட்டிகளை அணிவிக்குமாறு உத்தரவிட்ட பிரிட்டிஷ் நீதிபதி ஒருவரின் உத்தரவு இங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இருகுடும்பங்களும் மான்செஸ்டர் விமான நிலையத்திலும், துருக்கியில் வைத்தும் சிரியாவுக்கு பயணிக்க முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் தடுக்கப்பட்டன.

இந்த குடும்பங்களின் பிள்ளைகளான சிறார்களுக்கு அங்கு செல்வதால் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக பிரிட்டனில் உள்ள ஒரு குடும்ப நீதிபதி அவர்களை முதலில் அரச பராமரிப்பில் விடுமாறு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், அவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்வதற்கு அனுமதிக்கும் வகையில், அந்த குடும்பங்களின் வயது வந்த உறுப்பினர்களுக்கு மின்னணு பாதுகாப்பு பட்டிகளை காலில் அணிவிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

ஆகவே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்தால், இந்த பட்டிகள் அவர்களை காட்டிக்கொடுத்துவிடும் என்பதால், அதன் மூலம் குழந்தைகள் ஆபத்தான இஸ்லாமிய அரசின் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

பிரிட்டனில் சர்ச்சை

ஆனால், இந்த நடவடிக்கை இங்கு அரசாங்கத்துக்குள்ளேயே சர்ச்சையை தூண்டியுள்ளது. இது குறித்த கவலைகளை எழுப்பியுள்ள நீதியமைச்சு, இது முன்னெப்போதும் நடக்காத ஒன்று என்றும் கூறியுள்ளது.

அந்த சிறார்களை பராமரித்துவந்த உள்ளூராட்சி நிர்வாகமோ, அவர்களை திரும்ப பெற்றோரிடம் விடுவதற்கு தயக்கம் காட்டியுள்ளது. அவர்களுக்கு பெரும் ஆபத்து இருப்பதாக அது வாதிடுகிறது.

பிரிட்டனின் மிகவும் மூத்த குடும்ப நீதிபதியும், உயர் நீதிமன்றத்தின் குடும்ப விவகாரப் பிரிவின் தலைவருமான சேர் ஜேம்ஸ் முன்பி அவர்களோ, எந்த நேரத்திலும் அவர்கள் விமானத்தில் ஏற்றி சிரியாவுக்கு அனுப்பப்படும் ஆபத்து இருப்பதை தான் ஒப்புக்கொள்வதாக கூறியுள்ளார்.

ஆனால், கண்காணிப்பு பட்டிகளை பெற்றோர் அணிய ஒப்புக்கொண்ட நிலையில், அத்தகைய ஆபத்து மிகவும் குறைவு என்றும் அவர் கூறுகிறார்.

கிரிமினல்களுக்கான பட்டிகள்

கிரிமினல் குற்றவாளிகள் பிணையில் வெளிவரும் போது, அவர்களை கண்காணிக்கவும், ஒரு ஊரடங்கு நிலையில் அவர்களை வைக்கவுமே இந்த கண்காணிப்பு பட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறார் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கும் இந்த பட்டிகள் அணிவிக்கப்படுகின்றன.

இத்தகைய பட்டி அணிவித்தல் ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நியமங்களை மீறுவதாக பல அமைப்புகள் விமர்சித்துவருகின்றன அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இப்படியான பட்டி அணிவிப்பதையும் பல அமைப்புக்கள் கண்டித்துவருகின்றன.
« PREV
NEXT »

No comments