Latest News

July 10, 2015

தவறான புள்ளிவிபரங்களை தெரிவித்தமைக்கு வெட்கப்படுகிறேன்- டொக்டர் துரைராஜா வரதராஜா
by Unknown - 0

இறுதிப் போரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிரு ந்தும் அதற்கு நேர்மாறான வகையில் புள்ளி விபரங்களை கொடுத்ததையிட்டு வெட்கப் படுவதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் பணியாற்றிய டொக்டர் துரைராஜா வரதராஜா தெரிவித்தார்.

பி.பி.சி. உலக சேவையில் பிரான்செஸ் ஹரிசன் நடத்தும் ‘சாட்சியம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே டொக்டர் வரதராஜா இத்தகவலை வெளியிட்டார்.

தான் எறிகணைத் தாக்குதலில் கடுமையான காயமடைந்திருந்ததாகவும் ஊடக மாநாட்டில் தாம் சொல்வது போன்று செய்யாவிடின், அந்த காயத்துக்கு செய்ய வேண்டியிருந்த முக்கியமான சத்திரசிகிச்சைக்கு அனுமதி வழங்க முடியாது என்று புலனாய்வு அதிகாரிகள் தன்னை அச்சுறுத்தியதாகவும் குறிப் பிட்டார்.

தாம் சொல்லிக் கொடுத்தவாறு ஊடக மாநாட்டில் பதில்களைக் கூறிய தற்காக கே.எவ்.சி. உணவகத்துக்கு அழைத்துச் சென்று இராணுவப் புலனாய்வாளர்கள் விருந்து கொடுத்தனர் என்ற தகவலையும் அவர் பகிரங்கப்படுத் தினார்.

இந்நிகழ்ச்சியில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த டொக்டர் வரதராஜா, போரின் முடிவுக்கட்டத்தில் கைது செய்யப்பட்ட நாம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நாலாம் மாடியில் தடுத்து வைக்கப் பட்டிருந்தோம்.

அங்கு அரச அதரவு ஊடகவியலாளர்கள் முன்பாக ஊடக மாநாட்டில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று எமக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் வற்புறுத்தலின் பேரில், பொதுமக்களின் இழப்புகள் குறித்து தகவல்களை வெளியிட்டதாக ஊடகங்களிடம் கூறுமாறு எமக்கு உத் தரவிட்டனர்.

தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தில் இந்த ஊடக மாநாடு 2009 ஜுலை 08 ஆம் நாள் நடந்தது. போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் பணியாற்றிய ஐந்து மருத்துவர்கள் இந்த ஊடக மாநாட்டில் விடுதலைப் புலிகளின் உத்தரவின் பேரிலேயே பொதுமக்கள் இழப்புகளை அதிகரித்துக் கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.

2009 ஜனவரி தொடக்கம் மே வரை 650 தொடக்கம் 750 பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் 650 இற்கு குறைவானோரே காயமுற்றனர் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

போரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தும் அதற்கு நேர்மாறான வகையில் புள்ளிவிபரங்களை கொடுத்ததையிட்டு வெட்கப்படுகிறேன். தவறு செய்து விட்டதாக உணர்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மருத்துவர்களுக்கு ஒருவார காலத்தில் விடுதலை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் நாலாம் மாடியில் மேலும் மூன்று வாரங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments