இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் பத்து இலட்சத்தினைக் கடந்து வெற்றி நடைபோட்டு வருகின்றது.
உலகத் தமிழர் பரப்பெங்கும் எழுச்சி பூர்வமாக இடம்பெற்று வரும் இக்கையெழுத்து இயக்கம், முதற்கட்டமாக குறிக்கப்பட்ட யூலை 15க்குள் மில்லியனை அடைந்துள்ள நிலையில், உணர்வாளர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
'போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் அமைதிக்கான அச்சுறுத்தல்' தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது' என்று இக்கையெழுத்து மனுவில் கோரப்படுகின்றது.
இக்கையெழுத்து இயக்கத்தினை ஒருங்கிணைத்து முன்னகர்த்தியிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ், முதற்கட்டமாக எட்டியுள்ள மில்லியன் கையொப்பங்கள் முறையாக ஐ.நாவிடம் ஒப்படைக்கப்பட இருப்பதோடு, இதன் நீடித்த செயற்பாடு குறித்து பிரதமர் வி.உருத்திரகுமாரன், யூலை15ம் நாளன்று உலகத் தமிழர்களுக்கு அறியத்தருவார் எனத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை, செப்ரெம்பர் மாத கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட இருப்பதோடு, இந்த அறிக்கை பரிந்துரைக்கும் விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டு சபையில் வாக்கெடுப்புக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இவ்வாக்கெடுப்பு இடம்பெறும் நாள்வரை இக்கையெழுத்து இயக்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை, பலராலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.


No comments
Post a Comment