மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் இன்னுயிரை தியாகம் செய்த முன்னாள் விடுதலைப் போராளிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இடமில்லை என்பது வருந்தத்தக்கது. நல்லாட்சி நடைபெறும்போது ஜனநாயகப் பாதையில் திரும்பும் அவர்களை ஆதரிப்பது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.புஷ்பகுமார் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஜனநாயக போராளிகள் அமைப்பினருக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இடமில்லை என கூறப்பட்ட செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னரும் பல முன்னாள் போராளிகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்வதற்கு முயற்சித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகள் இதற்கு சிறந்த உதாரணம்.
அவ்வாறானவர்களின் கைது அல்லது தண்டனை போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு இன்று யாரும் இல்லை. ஜனநாயக வழியில் திரும்பும் அவர்களை ஆதரிப்பதற்கும் எவருக்கும் மனம் இடம் கொடுக்கவில்லை. அப்படியானால் அவர்களின் எதிர்காலம் என்ன என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். தொழில் வாய்ப்புக்காக அவர்கள் செல்லும் போது முன்னாள் போராளி எனும் பெயர் சூட்டப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். பொலிஸ் நிலையங்களுக்கு செல்லும் போதும் குற்றவாளிகள் போல் நடத்தப்படுகின்றனர். இன்னும் பலர் சிறையில் வாடுகின்றனர்.
இவ்வாறு பல இன்னல்களை அவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அப்படியானால் அவர்களின் குடும்ப நிலை என்ன என்பதையும் சிந்தியுங்கள். ஆகவே ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அவர்களின் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள முன்வருவதில் எவ்வித தவறும் இல்லை.
ஆகவே மக்களுக்காக போராடிய ஜனநாயக போராளிகள் அமைப்பு வடக்கில் மட்டுமல்லாமல் கிழக்கிலும் போட்டியிட்டு அவர்களது பிரச்சினைகளுக்கு மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதை வரவேற்கின்றேன் என்றார்
No comments
Post a Comment