சுவையான மீன் சொதி
---------------------------------------
இலங்கையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணக்கூடிய ஒருவகைக் கறி வகையே மீன் சொதியாகும். சொதி வகையில் பல வகைகள் உண்டு. அசைவ சொதி, சைவ சொதி என்று பல வகைகளில் சொதி இலங்கையில் உள்ள பல ஊர்களுக்கு ஏற்ப வகையில் வித்தியாசமான முறைகளில் சமைத்து உண்பார்கள்.
உண்மையிலேயே மீன் சொதியானது மதிய நேர உணவிற்கே பயன்படுத்தப்பட்டாலும் இரவு நேர உணவான புட்டு, இடியப்பம் மற்றும் பான் போன்றவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. அதிலும் அடுத்தநாள் காலையில் சூடாக்கிய மீன் சொதியை காலை உணவான புட்டு, இடியப்பம் மற்றும் பானுடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவையே தனியானது.
■ தேவையான பொருட்கள்
● சுத்தம் செய்த மீன் துண்டுகள் - 250 கிராம்
● பழப்புளி - 10 கிராம் (சிறிய உருண்டை)
● வெங்காயம் - 15 கிராம்
● உள்ளி - 4 பற்கள்
● பச்சை மிளகாய் - 2
● தேங்காய்ப் பால் - 100 மி.லி
● வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
● மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
● கரம் மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி
● உப்பு - 1 1/2 தேக்கரண்டி
● கறிவேப்பிலை - 1 நெட்டு
■ செய்யும் முறை
வெங்காயம், பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சொதி செய்ய தேவையான மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பூண்டு போட்டு அதனுடன் இரண்டாக பிளந்த மிளகாய் மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும்.
அதன் மேல் மீன் துண்டுகளைப் போட்டு 300 மி.லி தண்ணீரில் புளியைக் கரைத்து ஊற்றி உப்பையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
பாதியளவு வெந்ததும் மீன் துண்டுகளை பிரட்டி விட்டு நன்கு வேக விடவும்.
மீன் நன்றாக வெந்தத்தும் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், பால் சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.
சுவையான மீன் சொதி தயார். இதனை சூடாக பரிமாறவும்.

No comments
Post a Comment